எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தித் திணிப்பு என்பதை ஆயிரங்கால் பாய்ச்சலாக - பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துச் செல்லுகிறது - சமஸ்கிருதத்தைத் திணிப் பதிலும் தீர்க்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், கேந்திரிய வித்யாலயாக் களில் மூன்றாவது மொழியாக இருந்து வந்த ஜெர்மன் மொழியைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் சமஸ்கிருதக் குடும்பத்திற்குச் சிம்மாசனம் அளிக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கை என்பது சட்ட ரீதியானது. ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் என்ற தன்மையில் அந்தக் கல்வி நிறுவனங்களில் மாநில அரசின் சட்ட ரீதியான கொள்கை முடிவுக்கு எதிராக - மத்திய அரசு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருகிறது.

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன் சூட்சுமம் என்ன என்பது - இதுவரை விளங்கிக் கொள்ளாதவர்கள் இனிமேலாவது விளங்கிக் கொள்வது நல்லது.

நாடாளுமன்றம், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊடகங் களிடம் பேசும் போது இனி இந்தியில்தான் பேசவேண்டும் என்ற  மொழிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது, இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்றம் இனி குடியரசுத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் பேசுவார்கள் என அறிவித்துள்ளது. மேலும் இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழியை கொண்டுவரும் புதிய முயற்சிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  

மொழி ஆலோசனைக்காக நாடாளுமன்றக் குழு 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் தலைவராக ப.சிதம்பரம் இருந்தார். அக்குழு நாடு  முழு வதிற்கும் பொதுவான பரிமாற்று மொழி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வந்தது. 30.10.2014 இல் மனிதவளத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மத்திய பிரதேச பாஜகவின் மூத்த தலைவரும் உஜ்ஜைனி நாடாளுமன்ற உறுப்பினருமான சத்யநாராயன் ஜாடியாவின் தலைமையில் புதிய குழுவை மாற்றி அமைத்தார்.   

இந்தக் குழு மாற்றி அமைக்கப்பட்டு இதன் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதனை அடுத்து இந்தக் குழு நாடு முழுவதும் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பதவியில் உள்ளவர்கள் மக்களிடையே கருத்தை பரிமாறிக்கொள்ள 117 ஆலோசனைகளை முன்வைத்தது, இந்த ஆலோ சனைகளை மத்திய அமைச்சரவை ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொண்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது,   

அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்று குடி யரசுத்தலைவர் மொழிகள் தொடர்பான நாடாளு மன்றக் குழுவின் ஆலோசனைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதில் மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி நாளிதழ்கள், மாத இதழ்கள், ஏர் இந்தியா போன்ற மத்திய அரசின் விமான பயணச்சீட்டுகளில் இந்தி மொழியைப் பயன்படுத்துவதற்கும், ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களிலும் பரிமாற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்கியுள்ளார். மேலும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் புதிய திட்டங்கள் தயாரிப்புகளுக்கு இந்தியில் பெயர் வைக்கவும், அதன் விவரங்கள் அனைத்தும் இந்தியில் அச்சிடவும் அனுமதி வழங்கியுள்ளார்.  

மத்திய அரசு கல்வியில் 10 ஆம் வகுப்புவரை இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவிலும் குடியரசுத்தலைவர் கையொப்பமிட்டுள்ளார். அதே போல் இந்தி பேசாத மாநிலங்களின் அரசுகளின் ஆலோசனையையும் கேட்டுள்ளார். இந்தி அல்லாத மாநிலங்களில் அந்த மாநில அரசு கேட்டுக்கொண்டால் அவர்களுக்கு இந்தி தொடர்பான அனைத்துப் பாடத்திட்ட உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கூறப்பட் டுள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களின் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியில் பதில் தரவும், எழுதவும் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் வகையில் பாடத்திட்டங்களை வகுக்கவேண்டும் அப்படி வகுக்க முன்வரும் பல்கலைக் கழகங்களுக்கு மத்திய அரசு இந்தி மொழி தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது.  மேலும் இனி கடினமான இந்தி வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்து சரளமான இந்திவார்த்தைகளை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவேண்டும் என்ற ஆலோசனைக்கும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற காலம்வரை இந்தியோடு, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற பிரதமர் நேருவின் உறுதி மொழியைக் கொல்லைப் புறமாகப் புகுந்து வேரறுக்கும் விபரீத வேலையில் மத்திய பார்ப்பன பி.ஜே.பி. அரசு இறங்கிவிட்டது. மீண்டும் ஒரு இந்திப் போர்  என்ற எரிமலையை வெடிக்க வைப்பது காலத்தின் கட்டாயம்!
இது கல்வெட்டு! கல்வெட்டு!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner