எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சிறீ சிறீ ரவிசங்கர் என்ற பார்ப்பன கார்பரேட் சாமியாரால் சீரழிக்கப்பட்ட பசுமையான யமுனைக் கரை மீண்டும் தனது பழைய உருவத்தைப் பெற 10 முதல் 50 ஆண்டுகள் ஆகும். இந்த சீரழிவை சீர் செய்ய ஆரம்ப கட்டமாக ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை தேவைப்படும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கவலைகொண்டுள்ளது.

டில்லியில் யமுனை நதிக்கரையில், வாழும் கலை அமைப்பினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூன்று நாள்கள் உலக கலாச்சார விழா என்ற பெயரில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தினர். இந்த விழா நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது யமுனை நதிக்கரைக்கு கடுமையான மாசு கேட்டை உருவாக்கினர். இதனைக் கண்டித்து சிறீ சிறீ ரவிசங்கருக்கு ரூ.25 கோடி பசுமைத் தீர்ப்பாயத்தால் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் அந்த அபராதத் தொகையை கொடுக்காமல் நான் சிறைசெல்வேன் என்று கூறிவந்தார். இந்த நிலையில் அவர் ரூ.5 கோடி மட்டும் கட்டிவிட்டு நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தார். அந்த நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார்.  வெளிநாட்டவர் உள்பட சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஆயத்தப் பணிகளில் இந்திய ராணுவம் பயன்படுத்தப்பட்டதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. ஆனால், எது குறித்தும் கவலைப்படாமல் நிகழ்ச்சிகளை மோடியுடனிருந்து ரவிசங்கர் நடத்தி முடித்தார்.  இவர்கள் யமுனை நதியில் இருந்து நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்கு நறுமணம் வரவேண்டும் என்று கூறி பல்வேறு விதமான வேதிப் பொருட்களை யமுனை நதியிலும், கரையிலும் லட்சக்கணக்கான லிட்டர் பேரல்கள் தெளித்தனர். அப்போதே  இவை, அறிவியல் ரீதியாக பரிசோதிக்கப்படாதவை எனப் புகார் எழுந்தது. இதனால் நுண்ணுயிர்கள் மடிந்துபோகும்; அப்படி மடிந்துபோனால் நதிக்கரையில் பசுமைச்சுழற்சி முற்றிலும் நின்றுபோகும் என்று புகார் கூறப்பட்டது. ஆனால், அது குறித்தெல்லாம் ரவிசங்கர் கவலைப் படவில்லை.

பசுமைப் தீர்ப்பாயமும், இயற்கை ஆர்வலர்களும் மத்திய அரசின் மிரட்டலால் அடங்கிப் போனது. நிகழ்ச்சி 3 நாள்கள் ‘விண்முட்ட’ நடந்தேறின.  இந்த நிலையில் யமுனைக்கரையில் இந்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து விசாரணை நடத்த 4  பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத் தது. அந்தக் குழு, 47 பக்க விசாரணை அறிக்கை ஒன்றை பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது, அதில் குறிப்பிட்டுள்ள முக்கியமான பகுதிகள் கவனிக்கத்தக்கவை.

இந்த நிகழ்ச்சியால் கரைகள் முற்றிலும் சேதமடைந்ததுள்ளன. சேதமடைந்த கரையை மறு சீரமைக்க வாழும் கலை அமைப்பு ரூ.100-120 கோடி வழங்கவேண்டும்.

இக்கரையில் பசுமைச் சுழற்சியை உருவாக்கும் நுண்ணுயிர்கள் விழாவின்போது பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிதைந்து விட்டன. இனி இந்த நுண்ணுயிர்கள் இந்தப் பகுதியில் தோன்றாது; அப்படியே செயற்கையாக நுண்ணுயிரிகளை இங்கு கொண்டுவந்து வளர்த் தாலும் குறைந்த பட்சம் இந்தச் சூழலுக்கு அவை வளர்ந்து பரவுவதற்கு 10 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் ஆகும்.

மேலும் நாணல்கள், அதைச் சார்ந்துள்ள சிறு உயிர்கள் போன்றவைகளும் முற்றிலும் அழிந் துள்ளன. இதனால் இந்தப் பகுதியில் உயிர் வாயுவான ஆக்சிஜன் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்தக் கரைப்பகுதி உயிரினங்கள் வாழத் தகுதியற்ற ஒன்றாக மாறிவிட்டது.

சில இடங்களில் அவர்கள் தெளித்த ரசாய னங்களின் பாதிப்பு நீங்க 20 ஆண்டுகள் ஆகலாம். மேலும் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு கழிவுகளைஅகற்றாமல்சென்றுவிட்டனர்.இவை அனைத்தும் கரையில் புதைந்துவிட்டன. இவற்றை அகற்றுவதற்கு ரூ.10 கோடி வரை செலவாகும். அப்படியே அகற்றினாலும் மண்ணின் தன்மை பழையபடி மாறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே! பல நூற்றாண்டுகளாக பசுமையான அழகான சுற்றுப்புறச்சூழல் கொண்ட யமுனைக் கரை மூன்று நாள் நிகழ்ச்சியில் சிதைத்து சின்னா பின்னமாக்கப்பட்டு விட்டது. பார்ப்பன கார்பரேட் சாமியார் சிறீ சிறீ ரவிசங்கர் உண்டாக்கிய இந்தச் சீரழிவிற்கு மோடி தலைமையிலான ஒரு பேரரசு துணைப் போனது மிகக் கேவலமானது - யமுனைக் கரையில் உண்டாக்கப்பட்ட கறை காலகாலத்துக்கும் மோடியின் கழுத்தில் சுருள் சுருளாகத் தொங்கும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner