எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல்விக் கொள்கை மாற்றத்திற்கான ஆலோசனைக் குழு ஒன்றை முன்னாள் மத்திய அரசின் தலைமைச்செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் நியமித்தி ருந்தது. இந்த ஆலோசனைக்குழுவினர் இதுவரை இருந்த கல்விமுறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த ஆலோ சனைக்குழு தனது அறிவுரைகளை பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக 4 மாதங்கள் இணையத் தளத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த ஆலோசனைக்குழு கொடுத்த அறிக்கை முழுமையானது அல்ல, இதில் மாற்றங்கள்செய்வோம்என்றுஅப்போதையமத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறி யிருந்தார். கடந்த ஆண்டின் இறுதியில் புதிய அமைச் சரவை மாற்றத்திற்குப் பிறகு மனிதவளத்துறை அமைச் சரகம் பிரகாஷ் ஜவ்டேகர் கைவசம் சென்றது, இதனை அடுத்து அவர் மீண்டும் புதிய கல்விக் கொள்கையைக் கையில் எடுத்தார். முந்தைய ஆலோசனைக் குழு கூறியவைகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் அந்த மாற்றங்கள் குறித்து அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையின் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர் வானது துவங்கியது. இந்த அமர்விற்குச் செல்லும் முன்பு ஊடகவியலாளர்களிடம் பேசிய ஜவ்டேகர் இந்தக் கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.  அந்தக் குழுவில் யார் யார் இருப்பார்கள் என்பதை நாடாளுமன்றத்தில் அறிவிப்பேன் என்றார். மேலும் இது தொடர்பாக சில நாள்களாக மனிதவளத்துறை செயலாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.

புதிய வரைவுக் குழுவிற்குத் தலைவராக தற் போதைய ஜேஎன்யூ இணைவேந்தர் கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் தேர்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் இம்முறை மிக விரைவில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வர முடிவு செய்திருப்பதாகவும் மனிதவளத் துறையிடமிருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. புதிய கல்விக் கொள்கை அடுத்த ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரும் விதமாக ஆலோசனைக் குழுவில் இருந்த அதே உறுப்பினர்கள் வரைவுக் குழுவிலும் இருப்பார்கள் என்றும், இது புதிய உறுப்பினர்களை நியமித்து அதனால் ஏற்படும் காலவிரயத்தை ஈடு செய்யும் என்றும் மனிதவளத்துறை அமைச்சரகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய பி.ஜே.பி. அரசின் நோக்கையும், போக்கையும் அறிந்தவர்களுக்கு அது எதைச் சொன்னாலும் அதில் நேரிடையான பொருள் இருக்காது என்பது துல்லிய மாகவே தெரியும்.

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே ஆர்.எஸ்.எஸின் கல்வி நிபுணர் என்று கூறப்படும் சிட்டியஸ்வா என்பவரால் ஒரு கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திட்டம் அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர் கள் மாநாட்டில் அரங்கேற்றப்பட்டபோது, முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.

இப்பொழுதுகூட பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் இந்துத்துவா கல்வித்திட்டம் திணிக்கப்பட்டுள்ளது. மனுதர்மம், கீதை, வேதம் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளன.

இப்பொழுது கொண்டுவரத் துடிக்கும் தேசிய புதிய கல்வித் திட்டம் என்பது மூன்று மொழிகளைக் கற்பிக்கக் கூடியது. தமிழ்நாட்டில் இரண்டு மொழிகளே என்று சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் நிலையில், அதனைப் புறந்தள்ள மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.

கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது; மாநிலத்திற்கும் அதில் பங்கு உண்டு. அதிகாரம் இருக்கும் காரணத்தால் தான் நினைப்பதை, விரும்புவதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது ஜனநாயகமாகாது. அவ்வாறு நினைப்பது எதேச்சதிகாரமே!

இந்தப் புதிய கல்வி திட்டத்திற்கு மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டதா? எத்தனை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன; எத்தனை மாநிலங்கள் அதனை நிராகரித்தன என்பதை வெளிப்படையாகக் கூறட்டும் மத்திய அரசு.

இந்தியா என்பது பல மொழிகள், பல பண்பாடுகளைக் கொண்ட ஒரு துணைக் கண்டம். இந்த நிலையில்,  ஒரே மாதிரியான கல்வி முறை என்பது ஒவ்வாமையைத்தான் ஏற்படுத்தும்.

பி.ஜே.பி.யின் குருபீடமான ஆர்.எஸ்.எஸைப் பொருத்தவரையில் மாநிலங்களே இருக்கக்கூடாது, இந்தியா ஒரே நாடு - அதன் பொது மொழி சமஸ்கிருதம் என்பதே! இந்த மனப்பான்மை கொண்டவர்கள் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வர நினைத்தால், அதன் உள்ளடக்கம் காவி மயமாகவே இருக்கும் என்பது வெளிப்படை.

கல்வியிலும், சமூகநீதியிலும் கை வைத்தால், அது எந்த அரசாக இருந்தாலும் நாட்டின் பெரும்பான்மையான மக்களாக இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஒன்றிணைந்து, அத்தகைய சக்திகளை அடையாளம் தெரியாமல் ஆணி வேரோடு பிடுங்கி எறிவர் என்பது கல்லின் மேல் எழுத்து - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner