எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘எனது கணக்கு ஆசிரியருக்கு என்மேல் அவ்வளவு வெறுப்பு. எப்பொழுதுமே நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பார். நான் முடிதிருத்திக் கொண்டிருந்த விதத்தைக் கிண்டல் செய்வார்.  அதனாலேயே எனக்குக் கணிதம் மீது வெறுப்பு வந்தது - எனது நாட்டம் மாறியது. கணிதம் வரலாறானது. அந்தஆசிரியரின்கேலியும்,கிண்டலும்தான்என்னை முதல் தலைமுறை பட்டதாரியாக்கியது. ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து  வரும் முதல் தலைமுறை பட்டதாரி களுக்குத் தயைக் கூர்ந்து வாய்ப்புக் கொடுங்கள். இல்லையென்றால் அவர்கள் கணிதம் என்றால் விரோதி என்ற புரிதலுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வி என்றால் அழுத்தம் என எண்ணுவார்கள். பல்கலைக் கழகம் என்றால் பாகுபாடு என அறிவார்கள்.’’

‘‘சமத்துவம் மறுக்கப்பட்டால் அனைத்துமே மறுக்கப்பட்டதற்குச் சமம்‘’

- இவை எல்லாம் சேலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் முத்துக்கிருஷ்ணன் எழுதிய கடைசி வரிகள்.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எம்.பில்., படித்துக் கொண்டிருந்த மாணவர் அவர்.

அவர் கொல்லப்பட்டாரா?தற்கொலைக்குவிரட்டப் பட்டாரா என்ற சவக்குழி ஆராய்ச்சி ஒருபுறம் இருக் கட்டும்.

அவர் மரண சாசனமாக எழுதி வைத்துச் சென்ற இந்த வரிகளுக்கு என்ன பதில்? இப்பொழுதெல்லாம் யாரைய்யா ஜாதி பார்க்கிறார்கள் என்று  மேதாவித்தனமாகப் பேசும் பேர்வழிகளின் முகத்தில் அறையவில்லையா - முத்துக்கிருஷ்ணனின் இந்த முகநூல் பதிவுகள்.

இது ஏதோ கற்பனையல்ல - யதார்த்தம். நம் கண் முன்னே நடந்திருக்கிற மிகப்பெரிய கேவலம் - குரூரம்! மனிதத் தன்மை ,மனித உரிமை இவற்றின் தோலை உரித்து செருப்புகள் தைத்து - அதனால் நடந்துகொண்டிருக்கும் பிறவி ஜாதி முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனமான சீழ்பிடித்த சமூகத்தின் நிலைக் கண்ணாடி இது. ஆதிக்கக் காரர்களின் கருத்தென்ன?

‘வர்க்கத்தையும் தாண்டிய வருணக் கொழுப்பு இது. நமது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்களா? மனுதர்மம் எழுதியவர்கள் எல்லாம் மடையர்களா? அதனைக் கிழித்து எறிந்துவிட்டு இந்தக் கீழ்ஜாதிப் பதர்கள் படித்துக் கிழிக்க வந்தால், நாம் எப்படி அனுமதிப்பது - நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கு அர்த்தம்தான் என்ன?' என்று நினைக்கிற நீட்டூரம் -  சர்மாக்களாக இருக்கிறது - அய்யராக இருக்கிறது - அய்யங்காராக இருக்கிறது - சாஸ் திரியாக இருக்கிறது - தீட்சதராக இருக்கிறது - இவர்களின் ஒட்டுமொத்த அடையாளம் பூணூலாகத் தகிக்கிறது.

மனிதனுக்கு உண்மை சுதந்திரம் இல்லாமல் மண் ணுக்குச் சுதந்திரம் வந்து என்ன பயன் என்று கேட்டாரே - அந்த முழுப் புரட்சி நாத்திகத் தந்தை பெரியார் - அந்தத் தலைவரின் வாய்க்கு சர்க்கரையைத்தான் போடவேண்டும்.

ஜாதி இல்லாமல், இந்து மதம் இல்லை; இந்து மதம் இருக்கும்வரைக்கும் இங்கு சமத்துவம் இல்லை. இந்து மதம் இருக்கும் வரைக்கும் முத்துக்கிருஷ்ணன்களும், ரோகித் வெமுலாக்களும் தூக்குக் கயிற்றில் ஏ(ற்)றத்தான் நேரிடும்.

இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் எதிர்த்துப் பேசு வதில்லை; சாதுவாகி விட்டார்கள் என்று சொல்லுவதும் உண்மைதான். சாதுவாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களை சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடித்தவுடனேயே சாகடிக்கிற பாம்புக்கு நம் நாட்டில் என்ன பெயர் தெரியுமா? ‘‘நல்ல பாம்பு!’’

அண்மைக்காலமாக ஆரியத்திற்கு மண்டைக் கனம் டன் கணக்கில் எகிறி விட்டது. மத்தியிலும், மாநிலங்களிலும் அதிகாரத்திற்கு வந்துவிட்டது  ஆரியம்;  அவர்கள் திமிரடியாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.

சம்பூகனைக் கொன்ற ராமனை ஏற்காதவர்கள் எல்லாம் முறையாகப் பிறந்தவர்கள் அல்லர் என்று  மத்திய அமைச்சராக இருக்கக் கூடியவர்களே ரவுடித்தனமாகப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

தங்களைச் சுற்றி இருக்கும் இந்தப் புற அழுத்தங்கள் - நமக்குப் பாதுகாப்பில்லை என்ற அச்சம் ஒடுக்கப் பட்டவர்கள் மத்தியிலே ஏற்பட்டு விட்டது - அதுவும் முத்துக்கிருஷ்ணன்களின் மரணத்திற்கும் முக்கிய காரணம் ஆகும்.

உயர்வதற்கும், உயர்த்துவதற்கும் ஒரே வழிதான்; அதுதான் தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் உயிரினும் மேலாக நமக்கு உணர்த்திச் சென்றுள்ள அந்த வழிகாட்டுச் சொற்கள் - மூலிகைகள்.

கடப்பாறைகளைவிட, துப்பாக்கிகளைவிட வலிமை வாய்ந்தவை அவை! ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேர்வோம்! இந்த வைதிக வருணாசிரமக் கருத்துகளுக்கு எதிராக அறிவாயுதங்களை ஏந்துவோம் - எதிரிகளின் நுட்பமான மய்யத்தைக் குறி வைப்போம்!

வன்முறை தற்காலிகமானது - இருபுறமும் கூர் வாய்ந்தது. அறிவாயுதம் தொலைநோக்கானது - நிரந் தரப் பாதைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைக்கும் உத்தரவாதமானது. எழுவீர்! எழுவீர்!!

வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner