எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்’ என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வை மத்திய ஆட்சி திணித்துள்ளது. அது அறி விக்கப்பட்ட காலந்தொட்டு கடுமையாக எதிர்த்து வருவது திராவிடர் கழகமே!

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர்ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் (‘விடுதலை’, 10.2.2016) முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த தகவல்கள் மிகவும் முக்கியமானவை.

‘‘நுழைவுத் தேர்வை எதிர்த்து தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்தபோது தி.மு.க. அரசு ஒரு புள்ளி விவரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது (2.12.2006).

2004-2005 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வை 5 லட்சத்திற்கும் அதிகமான இருபால் மாணவர்கள் எழுதினர். இவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் அதிக மதிப்பெண்களையும் பெற்றிருந்தனர்.

ஆனால், நுழைவுத் தேர்வு வைக்கப்பட்ட காரணத்தால் மொத்தம் உள்ள 1125 இடங்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 227 தான் என்ற புள்ளி விவரத்தை தி.மு.க. அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக சொன்ன பொழுது, அதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது’’ என்ற அரிய தகவலை தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அன்று ‘விடுதலை’யில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட் டிருந்தது - இன்று நுழைவுத் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துப் பச்சைக் கொடி காட்டுபவர்களின் வாயை அடைக்கக் கூடியதாகும்.

சில தொலைக்காட்சிகளில் மேட்டுக் குடிமக்கள், கல்வியாளர் என்ற போர்வையில் நடமாடக் கூடியவர்கள் அடாவடித்தனமாகப் பேசுவதற்கு இந்தத் தகவல் போதுமானது.

நுழைவுத் தேர்வுதான் தகுதி திறமைக்கான அளவுகோலா? இந்தக் கேள்விக்கும் அந்த ‘விடுதலை’ அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் பதில் கூறியுள்ளார். அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளையே சாட்சிக்கு அழைத்துப் பதிலும் கூறியுள்ளார்.

‘‘நுழைவுத் தேர்வை நடத்தினாலும், முழு சம நிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந் தெடுப்பதைவிட, ‘கோன்பனேகா குரோர்பதி’ தொலைக்காட்சி நிகழ்ச்சியைப்போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை ‘டிக்‘ செய்யும் வாய்ப்புள்ளது என்று மாண்பமை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர்தான் இவ்வாறு கூறியுள்ளனர் (27.4.2007)’’ என்பதை திராவிடர் கழகத் தலைவர் ‘விடுதலை’ அறிக்கையில் எடுத்துக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீடு முறை சரிவரப் பின்பற்றப்படவில்லை என்பதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஆர்.வி.இரவீந்திரன் ஆகியோரின் கருத்தும் மிகவும் முக்கியமானதாகும்.

‘‘அந்நாள்களில் தேர்வில் வெற்றி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் என்பது நூற்றுக்கு 35 தான். அம்பேத்கர் 37 மதிப் பெண்கள் பெற்றிருந்தார். கல்லூரியில் சேருவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால், உங்களுக்கு ஓர் அம்பேத்கரும், இந்தியாவுக்கு அருமையானதோர் அரசமைப்புச் சட்டமும்தான் கிடைத்திருக்குமா'' என்று கேட்டார்களே; உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கேள்விக்கு யார்தான் பதில் சொல்ல முடியும்?

நுழைவுத் தேர்வு எழுதாமல், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் எல்லாம் திறமையற்றவர்கள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் உண்டா? அதற்கான புள்ளி விவரங் கள் இருந்தால் சொல்லட்டுமே பார்க்கலாம்.

மார்க்குதான் தகுதி - திறமை என்பதற்கான அளவுகோல் என்பதே மேட்டுக் குடியினரின் சூழ்ச்சிப் பொறியே!

இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு மட்டும்தானே ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை எதிர்க்கிறது என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள்!

தமிழ்நாட்டில்தானே திராவிடர் இயக்கம் என்னும் சமூகநீதி அமைப்புத் தோன்றியது.  சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் பிறந்து பட்டிதொட்டிகளில் எல்லாம் பகுத்தறிவுப் பரப்புரை செய்தார் - சமூகநீதிக்கான அடித்தளத்தை உருவாக்கினார்.

இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முத லாகத் திருத்தப்பட்டதற்கே தமிழ்நாடுதானே காரணம்!

தந்தை பெரியார் தலைமை தாங்கி நடத்திய போராட்டம்தானே அந்த முதல் திருத்தத்திற்கு முக்கிய காரணம்.

இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்திய அரசுத் துறைகளில் கல்வி, வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வாய்ப்பைப் பெற்று வருவதற்கு தமிழ்நாடுதானே காரணம். அந்த வகையில் மண்டல் குழு பரிந்துரையைச் செயல்படுத்தி வைக்க திராவிடர் கழகம்தானே 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது. அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களையும் ஒருங் கிணைத்தது.

தமிழ்நாட்டின் 69 சதவிகிதம் காப்பாற்றப்பட்டதற்கே அடிப்படை மூலகாரணம் திராவிடர் கழகம்தானே. இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின்கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறை வேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெற்று, குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கிடைக்கப் பெற்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டதற்குத் திராவிடர் கழகம் காரணம் இல்லையா?

அதே நிலைதான் இப்பொழுதும், ‘நீட்’ என்ற மருத்துவக் கல்விக் கான நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை என்ற வகையில், புதிய சட்டம் செய்யப்படவேண்டும் என்ற கருத்தை  திராவிடர் கழகம் முன்வைத்து வந்திருக்கிறது.

திருச்சிராப்பள்ளியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஆசிரியர், மாணவர், பெற்றோர் முத்தரப்பு மாநாடு நடத்தப்பட்டது - அம்மாநாட்டில் ஒரு முக்கிய தீர்மானம்:

‘‘69 சதவிகித இட ஒதுக்கீட்டை தனிச் சட்டம்மூலம் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்து திராவிடர் கழகத் துணையுடன் பாதுகாத்ததுபோலவே, ‘நீட்’ என்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது - தேவையில்லை என்கிற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய வகையில் மத்திய அரசை வலியுறுத்தி - ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் கட்டிக் காத்து வந்த சமூகநீதியை நிலை நாட்டவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு இதில் விதி விலக்கு அளிக்கப்படுவது அவசியம் என்று  இம்மாநாடு உறுதியாக வற்புறுத்துகிறது’’ என்பதுதான் அந்தத் தீர்மானம்.

அந்த அடிப்படையிலேயே தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 31.1.2017 அன்று சட்ட முன்வடிவு முன்மொழியப்பட்டு, நேற்று (1.2.2017) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்கள் வயிற்றில் பாலை வார்த்த செயலாகும். மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் நியாயமாகக் கிடைக்கும் - கிடைக்கவேண்டும் என்பதே 7 கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த வேட்கையாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மத்திய அரசு மதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner