எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வால்டர் ஸ்காட்

(காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள  உறுதிமொழிகளைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி அதிர்ந்து போயுள்ளார் என்று மேனாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். காரைக் குடிக்கு அருகே மானகிரியில் உள்ள தனது இல்லத்தில் பேசியபோது, இந்தியாவின் நாடாளுமன்ற நடைமுறையை அதிபர் நேரடித் தேர்தல் நடைமுறையாக  மாற்றிவிடுவதற்கு மோடி முயற்சிப்பார் என்றும், அவரது  அமைச்சரவையே செயல்படாமல் வெறும் அலங்காரத்திற்காக இருப்பது என்றும் கூறினார்.)

கேள்வி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வரைவதற்கு முன் நாட்டில் பரவலாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட நீங்கள் அப்போது கண்டதென்ன?

பதில்: முதல் பிரச்சினை வேலையில்லா திண் டாட்டம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஒட்டு மொத்தமாக அரசு தவறிவிட்டதாக மக்கள் நினைக் கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி திட்டமும் வேலை வாய்ப்புகளை அழித்துவிட்டன என்று அவர்கள் கருதுகிறார்கள். புதிய வேலை வாய்ப்புகள் உருவாக முடியாமல் உள்ள ஒரு சூழ்நிலையை அரசு ஏற்படுத்திவிட்டது.

இரண்டாவது பிரச்சினை கிராமப் புறங்களில் இருக்கும் விவசாயிகளின் பிரச்சினையாகும். கடந்த முறை 11 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, விவசாயிகளின் கடன் சுமை வளர்ந்து கொண்டே வந்துள்ளது. நபார்ட் வங்கியின் ஒரு அறிக்கை, சராசரியாக ஒரு விவசாயியின் கடன்சுமை 1.04 லட்சம் ரூபாயாக இருப்பதாக தெரி விக்கிறது. தங்களது கடன் சுமையிலிருந்து ஓரளவு நிவாரணம் பெறவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.  தங்களது பிரச்சினையை மோடி அரசு அலட்சியப்படுத்தி விட்டது என்றும்,  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக அரசு இருப்பதாகவும் விவசாயிகள் நினைக்கின்றனர். கேள்வி: பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதும் என்ற தங்களது அச்சத்துக்கான அடிப்படை என்ன?

பதில்: ஒரு கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்திலோ அல்லது ஒரு கூட்டாட்சி நடைமுறையிலோ ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நம்பிக்கை இல்லை. அந்த அமைப்பை தோற்றுவித்தவர்கள் நாட்டில் ஒரே ஒரு ஆட்சி நடைமுறை நிலவுவதை ஆதரிப்பவர்கள் ஆவர். மேலும், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு தீவிர எதிர்ப்பு கொண்டுள்ள அமைப்பு அது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பான 370 ஆவது பிரிவு மட்டுமன்றி,  மொழி மற்றும் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய அரசமைப்புச் சட்டப் பிரிவை தீவிரமாக எதிர்ப்பது அது. இட ஒதுக்கீட்டு நடை முறைக்கும் கூட பெரும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவர்கள். வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பதை அவர்கள் பலமாக எதிர்க்கிறார்கள்.

அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படுவதில் அவர் களுக்கு நம்பிக்கை இல்லை. உண்மையைக் கூறுவதானால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. இந்தியை மட்டுமே தேசிய மொழியாக ஏற்றுக் கொள்பவர்கள் ஆவர். பல்வேறுபட்ட மதப் பிரிவு மக்களுக்கான தனி மத சட்டங்கள் இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, பா.ஜ.கட்சிக்கு அறுதிப் பெரும் பான்மை கிடைத்தால், அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு அது முயற் சிக்கும் என்ற முடிவுக்கு வருவதற்கு, உதவுகிறது.

தனிப்பட்ட முறையில், அதிபர் தேர்தல் முறையை மோடி விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். தன்னை ஓர் அதிபராக நினைத்துக் கொண்டுதான் அவர் தனது அரசை நடத்துகிறார். அமைச்சரவை என்பது முற்றிலும் செயல்படாத தாக, அலங்கார அமைப்பாக இருக்கிறது. அமைச்சர்களைக் கடந்து அதிகாரிகளுடன் நேரடியாக பிரதமர் செயல்படுகிறார். ஒரு நாடாளுமன்ற நடைமுறையில் இருந்து அதிபர் நேரடி தேர்தல் நடைமுறைக்கு மாற்றுவதற்கு மோடி முயற்சிப்பார் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், அதன் பின் அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்காது என்று நீங்கள் கூறுவதன் காரணம் என்ன?

பதில்: 2019 தேர்தல் ஒரு சுனாமியாக இருக்கும் ;  தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார்; அதன் பிறகு தேர்தல்களே இருக்காது என்று பா.ஜ. கட்சியின் முன்னணித் தலைவர் ஒருவர்தான் கூறியிருக்கிறார்.

கேள்வி: தன்னை சவுக்கிதார் (காவல்காரன்) என்று மோடி அழைத்துக் கொள்வதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: எதற்கு காவல்காரன்? தங்கள் வீடுகளில் யாரெல் லாம் காவல்காரர்களை நியமிக்கின்றனர்.  பணக் காரர்கள் மட்டுமே காவல்காரர்களை நியமிக்கின்றனர். ஏழைகளும், நடுத்தரப் பிரிவு மக்களும் காவல்காரர்களை தங்கள் வீடு களுக்கு நியமிக்கிறார்களா? அதனால், மோடி தன்னை சவுக் கிதார் என்று அழைத்துக் கொள்ளும்போது, பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன பிரிவு மக்களின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் சவுக்கிதார் அல்லது காவல்காரன் என்ற உண்மையை மோடி  ஒப்புக் கொண்டு குறிப்பிடு வதாகவே தெரிகிறது.

அவர் ஒரு பாமர மக்களின் சவுக்கிதாராக (காவல் காரராக) இருந்திருந்தால் விஜய் மல்லய்யா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, சந்தேசரர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு இருப்பார்களா? அனைத்து ஊழல்காரர் களும் மோடியின் ஆட்சியில் இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.

கேள்வி: காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்கள் நிறைந்த கட்டுக் கதைகள் என்றும், அது மே 23ஆம் தேதி யுடன் காலாவதியாகிவிடும் என்றும் மோடி கூறி இருக்கிறாரே?

பதில்: 2014 தேர்தலுக்கு முன் மோடி அளித்த வாக் குறுதிகளைப் பற்றி அவர் ஏன் பேச மறுக்கிறார்? எந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார்? காங் கிரசின் தேர்தல் அறிக்கை நாட்டில் ஒரு சூறாவளியையே உருவாக்கியுள்ளது. கிராமங்களிலும், நகரங்களிலும் மக்களால் பேசப்படும் ஒரு முக்கியமான விஷயமாக இந்த தேர்தல் அறிக்கை உள்ளது.  மிகுந்த சிந்த னையையும், முயற்சிகளையும் மேற்கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ள காங்கிரசின் தேர்தல் அறிக்கை மோடியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது.

கேள்வி: வரிகளை உயர்த்தினால் மட்டுமே, குறைந்த அளவு வருவாய் அளிக்கும் நியாயய் திட்டத்தை நடைமுறைப் படுத்த இயலும் என்று பொருளியலாளர் அப்ஜித் பானர்ஜி கூறியிருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளாரே?

பதில்: பானர்ஜியின் கருத்தினை நாங்கள் மதிக் கிறோம்.  நடுத்தர மக்கள்  மற்றும் சராசரி வரி செலுத்துபவர் மீது கூடுதல் வரிச் சுமையை ஏற்றாமலேயே  இத்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி: தகுதி வாய்ந்த மான்ய உதவிகள் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளாரே?

பதில்: தகுதியற்ற மான்ய  உதவிகளும் அரசால் அளிக்கப் பட்டு வருகின்றன என்பதை அருண் ஜேட்லி ஒப்புக் கொண் டுள்ளார். தகுதியுள்ள மான்ய உதவி என்பதற்கு பொருளா தாரத்தில் ஒரு தனி அர்த்தம் இருக்கிறது. சில குறிப்பிட்ட சமுக பொருளாதார நோக்கங்களை எட்டுவதற்காக அளிக்கப்படும் நிதி மான்யங்களைக் குறிப்பிடுபவை ஆகும்.

தற்போது நடைமுறையில் உள்ள குறிப்பிட்ட சமூக பொருளாதார நோக்கங்களை எட்டுவதற்காக அளிக்கப் படும்  எந்த மான்ய உதவியையும்  நாங்கள் நீக்கவோ குறைக்கவோ மாட்டோம் என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.

கேள்வி: வயநாட்டில் இருந்து ராகுல் காந்தி போட்டி யிடுவதில் உள்ள முக்கியத்துவம் என்ன?

பதில்: இந்தி பேசும் வட மாநிலங்களில் மட்டுமே செயல் படும் கட்சி என்ற கட்டுப்பாட்டைக் கொண்டி ருக்கும் பா.ஜ.க.வைப் போலன்றி, காங்கிரஸ் கட்சி ஒரு அகில இந்திய கட்சி என்பதையும், தென்னிந்திய மாநிலங்களை மிகுந்த மரியாதையுடன் காங்கிரஸ்  நடத்துகிறது என்பதையும் தென்னிந்திய மக்களுக்குத் தெரிவிக்கும் ஆற்றல் நிறைந்த ஒரு சமிக்ஞை அது.

கேள்வி: 'இந்து' நாளிதழில் வெளியிடப்பட்ட லோக்நிதி கருத்துக் கணிப்பில்,  பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள உயர் ஜாதி மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டதும், பிரதமரின் விவசாய திட்டமும், பாலாகோட் விமான தாக்குதலும் மோடிக்கு உற்சாகத்தை அளிப்பதாக இருக் கின்றன என்று கூறப்படுவது பற்றி. . .

பதில்: கருத்துக் கணிப்புகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் அளிப்ப தில்லை. ராஜஸ்தான், மத்தியப் பிர தேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுக்காக கடந்த முறை நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் எல்லாம் தவறாக ஆகிப் போயின.

கேள்வி: பணமதிப்பிழப்பு நட வடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி திட்டங்களின் பாதிப்புகள் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?

பதில்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், தவறான முறையில் சரக்கு மற்றும் சேவை வரித் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதும் ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தையே முற்றிலுமாக தடம் புரளச் செய்துவிட்டன. அவை இரண்டும் ஒன்று சேர்ந்து, ஆயிரக்கணக்கான  சிறு - குறு தொழில்கள் மூடப்படு வதற்கும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகளை அழித்து விடுவதற்கும் வழி வகுத்து, அதற்கான கட்டாயத்தினை ஏற்படுத்தின. நடுத்தரத் தொழில்களை மோசமாக பாதித்து அவற்றைக் கடன் சுமையில் அவை தள்ளிவிட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதைத் தொடர்ந்து அந்த இரு மாதங்களிலும் கடன் வாங்கி உயிர் வாழ்வதைத் தவிர, தினக்கூலி பணியாளர்களுக்கும், சுயதொழில் முனைவோருக்கும் வேறு வழி ஏதும் இருக்க வில்லை. அந்தக் கடனைத் திரும்பச் செலுத்து வதற்கு இன்ன மும் அவர்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேள்வி: உங்கள் மகன் கார்த்திக்கை சிவகங்கை தொகுதி யில் போட்டியிட அனுமதித்ததில் முரண்பாடு இருந்ததாகக் கூறப்பட்டதே. அது எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது?

பதில்: அதில் எந்த வித முரண்பாடும் இருக்கவில்லை. முதல் பட்டியல் வெளியான 24 மணி நேரத்திற்குள் கார்த்திக் கின் பெயர் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏன்? வயநாடு, சிவ கங்கை மற்றும் கருநாடக மாநிலத்தில் ஒரு தொகுதி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது பரிசீலனையில் இருந்தது. முரண்பாடு என்றெல்லாம் கூறப்படுவது கற்பனையாக உருவாக்கப்பட்ட கதைதான்.

நன்றி:  'தி இந்து' 06-04-2019

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner