எழுத்துரு அளவு Larger Font Smaller Font

***கலி. பூங்குன்றன்***

உ.வே.சா. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பும் இங்கு எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.

"பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம்.

உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர் களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகா வித்துவான். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்குச் செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.

அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்போர்க்கு உதவியளிப்பாரும் இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படிச் செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?

தற்பொழுது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணிவரும் தோழர் உமாகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட, பாதகஞ்செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறது உண்டா?

உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர் களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை இதுவரையிலும் சொல்லி வந்ததைக்கொண்டும், மேலே நாம் எடுத்துக்காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சியெடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்!" என்று தந்தை பெரியார் குறிப்பிட் டுள்ளார்கள்.

('குடிஅரசு' 10.3.1935 பக்கம் 3,4)

இதுதான்  தமிழ்  வளர்ப்பில்கூட இன பேதக் கண் ணோட்டம்!

"திரு" என்ற அருந் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவ தில்கூட பார்ப்பனர்களிடத்தில் மல்லுக் கட்ட வேண்டி யிருந்தது.

"திரு"வை எதிர்த்து இரா. இராகவய்யங்கார், உ.வே.சாமி நாதய்யர் முதலானோர் எழுதினர். இரா. இராகவய்யங்கார் "சுதேசமித்திரன்" இதழில் "திரு" என்ற சொல் "ஸ்ரீ" என்பது போலச் செவிக்கு இன்பம் பயவாது என்றும், "திரு" என்னும் அடையாளமும் உதவாதது என்றும் மறுத்தெழுதினார். (பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரான் அவர்களின் "தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும்" மேலும் "குறளீயம்" 1.11.2000).

தமிழில் உள்ள ஓர் அழகிய சொல்லைப் பயன்படுத் துவதற்கு இந்தளவுக்குப் பார்ப்பனர்கள் முட்டுக்கட்டை என்பதைப் புரிந்துகொண்டால் பார்ப்பனர்களின் மனப் பாங்கு எத்தகையது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே.

சென்னை சிறப்பு கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் "துக்ளக்கில்" சோ எழுதிய "வெறுக்கத்தக்கதா பிராமணியம்?" எனும் கட்டுரைத் தொடருக்கு  "உண்மை" இதழில் "வெறுக்கத்தகுந்ததே பிராமணீயம்" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் எழுதிய தொடரிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் கூறினார்.

"உலகம் போற்றும் உயர் கருத்துகளை வாரி வழங்கிய திருவள்ளுவரைக் கூட இவாள் கொச்சைப்படுத்தாமல் விட்டது கிடையாதே!

வ.வே.சு. அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் முன்னுரையில்,

... Tradition declares that he was the child of a Brahman father named Bhaghavan and a Pariah mother Adi who had been brought up by another Brahman and given in marriage to Bhaghavan. Six other children are named as the issue of this union, all of whom have debbled in poetry.

"திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்துவந்து பகவ னுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி - பகவன் கூட் டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாக சொல்லப்படுவதோடன்றி இதனை கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர்" என்று எழுதி யுள்ளார். ஒரு பாடலில் இக்கருத்தை கபிலனே சொல்லுவ தாக அமைந்து இருக்கிறது. அதில்கூட "அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்" என்று கடைசி வரி முடிக்கப்பட் டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,

“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahman should be a teacher of spritual truth to mankind”.

அதாவது, "திருவள்ளுவர் நான்காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மீக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதீக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்" என்று எழுதினார்."

(க. திருநாவுக்கரசு அவர்களின் "திருக்குறளும்  - திராவிடர் இயக்கமும்" சங்கொலி 14.6.1996)

என்னே பார்ப்பனத்தனம்!

ஜெகத் குரு என்று ஜெகத்துக்கே பறைசாற்றுவார்கள்; இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஜப்பானுக்கும் இவர்தான் தலைவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சுக்கும் இவர்தான் தலைவராம். (அப்படித்தானா?) ஆனால் மனம்? ஆதி சங்கரரைப் பற்றி  விவேகானந்தர் சொல்லுவதுபோல அவர் வழி வந்த இந்த சங்கராச்சாரியார்களுக்கு குறுகிய புத்திதான் - தான் பிறந்த பார்ப்பன ஜாதி எனும் ஆணவம் கொக்கரிக்கும் - குரூரக் குணம்தான் - தங்கள் மொழியான சமஸ்கிருதத்தின் மீது தாங்கொணா வெறிதான் - கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புரட்டிக் குறுகத் தரித்த குறள் என்றார் - குறளைப் பற்றி இடைக்காடர் எனும் புலவர். மதுரைப் பாலாசிரியனார் எனும் புலவரோ,

வெள்ளி வியாழம் விளங்கு இரவி வெண்திங்கள்

பொன் என நீக்கும் புறஇருளைத் - தெள்ளிய

வள்ளுவர் இக்குறள் வெண்பா அகிலத்தோர் உள் இருள் நீக்கும் ஒளி

என்றார்.

இப்படி உலகத்தாரின் உள் இருள் நீக்கும் ஒளியான திருவள்ளுவர் யாத்த திருக்குறளை லோகக் குரு என்று 'லொக் லொக்'கென்று இருமிக் கொண்டு, இறக்கும் தருவாயில் இருக்கும்  பார்ப்பனர்கள்கூட உச்சிமோந்து போற்றுகிறார்களே, அந்த சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

வைணவப் பெண்மணியாகிய ஆண்டாள் என்பவர் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இரண்டாவது பாடல், "நாட்காலை நீர் ஆடி" என்று தொடங்குகிறது. அதில் 'செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்' என்பது ஒருவரி.

இதற்கு இந்த லோகக் குரு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

"தீய திருக்குறளைச் சென்று ஓத மாட்டோம்" என்று பொருள் சொல்லுகிறார் என்றால் இந்தப் புரோகிதப் பார்ப்பனக் கும்பலை என்னவென்று சொல்லுவது! 'குறளை' என்பதற்கு என்னதான் பொருள்? அய்காரத்தைக் கடைசியாகக் கொண்ட இந்த சொல்லுக்கான பொருள் 'கோள் சொல்லுதல்' என்பதாகும் (மதுரைத் தமிழ் பேரகராதி)

தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதாகும். ஆனால் இந்தக் கோட் சொல்லி குல்லுகப்பட்டர் பாம்பரையோ அர்த்தத்தை அனர்த்தமாக்கி ஆனந்தநடனம் ஆடுகிறதே!

இந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இப்படி சொல்லு கிறார் என்றால் சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தன் பங்குக்கு எதையாவது உளறி வைக்க வேண்டாமா?

மதுரையில் தொழில் அதிபரான பார்ப்பனர் ஒருவருக்கு கைங்கரிய சிரோமணி விருது வழங்க சென்ற இடத்தில் இவர் உதிர்த்த 'உன்னத' மொழி என்ன தெரியுமா?

"திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றாரே பார்க்கலாம் ('தினத்தந்தி' 15.4.2004)

"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது." (கீதைஅத்தியாயம் 4 - சுலோகம் 13) இப்படி சொல்லும் கீதையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளும் ஒன்றாம்.

பிறவிக்குருடர்கூட இப்படிக்கூறி இப்படி அடையாளப் படுத்த மாட்டான்.

சந்தனமும் - சாணியும் ஒன்று, பாலும் -  பாஷாணமும் ஒன்று என்று சொல்லும் பாழ்ப்புத்தி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தான ஏகபோகக் குணம்!

குறள் மனிதநேயத்தின் குணம்! சங்கரமடம் மனித வெறுப்பின் இனம்!! இரண்டும் எதிர்நிலை மனம்!!! இரண்டும் எதிர் நிலை - ஒன்றல்ல - புரிந்து கொள்வீர்!

'திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை - அதிலும் முதலில் பத்துக் குறள்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று காஞ்சி ஜெயேந்திரர் சொன்னதைக் கண்டித்து 2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டதே!

"திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சி   "நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை" என்ற சிறு நூலில் காணப்படுகிறது.

அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப் பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். 'தமிழன்' என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப் படுத்தியவர்.

இவர் 'பார்ப்பன வேதாந்த விவரம்' 'வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம்' 'நந்தன் சரித்திர விளக்கம்' 'நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை' "திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க் கதை விபரம்" ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு.வி.க. "அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று" என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது "வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்" என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, "சரி, கேளும்" என்றார்.

"நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப் படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் 'எம்.ஏ.,' 'பி.ஏ.,' படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர்" என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து "பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலை களில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக் குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்" என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதர், "ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும்," என்று சினந்து கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு. பி.அரங்கைய நாயுடும், திரு. எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத் தினார்கள்.

திரு. சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி விட்டார்.

இந்த தகவலை "நூதன ஜாதிகள் உற்சவபீடிகை" எனும் நூலிலிருந்து வெளிப்படுத்தியவர் தோழர் சு. ஒளிச்செங்கோ. இத்திசையில் சொல்லிக் கொண்டே போகலாம்.

(நாளையும் உண்டு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner