எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவொற்றியூர், நவ.8  திருவொற்றியூரில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் வெக்கை மற்றும் கொசுக் கடியை சமாளிக்க முடியாமல் தவிக் கின்றனர். திருவொற்றியூர் வடக்கு மாட வீதி, துலுக்காணம் தெரு, நடபாய் தோட்டம் கிராமத்தெரு போன்ற பகுதிகளில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அஜாக்ஸ் மின்வாரிய அலுவலகத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மேற்கண்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் மின் துண்டிப்பு ஏற்படுவதால் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் கொசுக் கடியால் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், இந்த பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் உலா வருகிறது. இருளில் தெருவில் நடந்து செல்லும்போது தெருநாய்கள் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் அவற்றை மிதிப்பதால் நாய்கடிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து மின்வாரிய உதவியாளருக்கு பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நட வடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். .

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்புகளுக்கு மின்சாரம் முறையாக வழங்குவதில்லை. தினமும் அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இதுபோன்ற பாரபட்சத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மேலும், தெருக்களில் உள்ள மின்கம்பங்கள் மின் கம்பிகள் பழுதாகி இருப்பதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் பழுதான மின் கம்பிகளை சரிசெய்து தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். மின்வெட்டை சரி செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner