எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ.8 தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் 232 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட பல மடங்கு அதிகமாகும். தீபாவளியையொட்டி, அனைத்து தரப்பினரும் பட்டாசு வெடித்தனர். தீபாவளி பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக தீயணைப்புத் துறை சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. குறிப்பாக பட்டாசு விபத்து ஏற்பட்ட பகுதிக்கு தகவலறிந்ததும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு 6 நிமிஷங்களுக்குள்ளும், கிராமப்புற பகுதிகளுக்கு 10 நிமிஷங்களுக்குள்ளும் செல்ல தீயணைப்புத் துறையினர் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் 7,200 தீயணைப்பு படை வீரர்கள் 326 தீயணைப்பு நிலையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மேலும் பட்டாசு விபத்து குறித்த தகவல்களை ஒருங்கிணைக்கும் வகையில் காவல்துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் தீயணைப்புத் துறையினர் இணைந்து செயல்பட்டனர். பட்டாசு விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும் இவ்வாறு 19 தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

சென்னையில் பட்டாசு தீ விபத்துக்காக பிற மாவட்டங்களில் இருந்து 250 தீயணைப்பு வீரர்களும், 19 தீயணைப்பு வாகனங்களுடன் வரவழைக்கப்பட்டிருந்தனர். தீயணைப்புத் துறையினரின் தீவிர நடவடிக் கையின் காரணமாக பெரியளவுக்கு பட்டாசு விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பட்டாசு விபத்துகளின் எண்ணிக்கை, கடந் தாண்டை விட கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி நாளான செவ்வாய்க் கிழமை பட்டாசுகளினால் மொத்தம் 232 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 228 சிறிய தீ விபத்துகள், 4 நடுத்தர தீ விபத்துக்களாகும். ஆனால் கடந்தாண்டு மாநிலத்தில் மொத்தம் 166 தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.

இதில் 44 சிறிய வகை தீ விபத்துகளாகும். சென்னையிலும் அதிகம் சென்னையில் செவ்வாய்க்கிழமை மட்டும் 61 பட்டாசு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 52 சிறிய வகை தீ விபத்துகளாகும். நடுத்தர தீ விபத்து ஒன்று மட்டும் ஏற்பட்டுள்ளது. இதில் 35 தீ விபத்துகள் ராக்கெட் வகை பட்டாசுகளினாலும், 11 சாதாரண பட்டாசு களினாலும் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளினால் 52 பேர் காயமடைந்திருக்கின்றனர். இவர் களில் பெரும்பாலானோர் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுவீடு திரும்பினர். ஒரு சிலரே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கடந்தாண்டு மொத்தம் 49 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் இரு விபத்துகள் நடுத்தர தீ விபத்துக்களாகும், மீதி 47 சிறிய வகை தீ விபத்துகளாகும்.

இந்த தீ விபத்துகளினால் 26 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மழை இல்லாததினால் அதிகம் இதுகுறித்து தீயணைப்புத்துறை உயரதிகாரி கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகளினால் தீ விபத்து அதிகரித்தே வருகிறது. இதில் தீபாவளி நாளன்று மாநிலம் முழுவதும் நன்றாக மழை பெய்தால், பட்டாசு தீ விபத்துகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகும். அதேவேளையில் மழை இல்லையென்றால் பட்டாசு தீ விபத்துகள் அதிகமாக ஏற்படும். இருப்பினும் ஆண்டுதோறும் பட்டாசு விபத்துகளின் எண்ணிக்கை சராசரியாக உயர்ந்து வருகிறது என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner