எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய நாட்டின் முக்கியத் தொழில் வேளாண்மை; மக்கள் தொகையில் மிகப் பெரும் பகுதியினர் வேளாண்மைத் தொழிலை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர் எனும் கூற்றை மறுப்பவர் யாருமில்லை. காரணம் கூற்றில் உண்மை முழுமையாக உள்ளது. ஆனால், நாடு அரசியல் விடுதலை அடைவதற்கு முன்பும், 70 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்த பின்பும் வேளாண்மை வளர்ச்சிக்கான ஒட்டுமொத்தமான கொள்கை என எதுவும் வகுக்கப்படவில்லை. அவ்வப்போது ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அரசியல் கட்சியினர் அங்கொன்றும் இங்கொன்றும் என ஒரு சில அறிவிப்புகளை செய்துவிட்டுப் போவதே விடுதலை பெற்ற இந்தியாவில் வழக்கமாகிவிட்டது. அவ்வாறு உழவுத் தொழில் புரிவோருக்கு பயனளிக்கும் என்பதாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை  (Minimum Support Price - MSP) கரீப் என்று சொல்லக்கூடிய வேளாண் முன் பருவத்தில (ஏப்ரல் - செப்டம்பர்) விளையும் பொருட்களுக்கு அறிவித்துள்ளது. அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது 14 வேளாண் விளைபொருட்களுக்கு மட்டும் பொருந்தும் என்பதாகக் குறிப்பு வெளியாகி உள்ளது. அய்ந்தாண்டு கால வெளியில், இறுதி ஆண்டில் இந்த அறிவிப்பினை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு வெளியிட்டு உள்ளது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தின் பொழுது அறிவித்த எத்தனையோ நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் வேளாண் விளைபொருளுக்கான குறைந்தபட்ச விலை அறிவிப்பும் ஒன்று. சாகுபடிச் செலவில் கூடுதலாக 50 விழுக்காடு உயர்த்தப்படும் என்று அறிவித்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒப்புக்கு எடுத்துக் காட்டாக தென்னாட்டின் முக்கிய உணவுப் பயிரான நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.20, ரூ.30 என ஆதரவு விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வந்துள்ளது. ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டில் 2019இல் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழலில் அவசரகதியில் இப்பொழுது விலைஉயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசு அளித்த வாக்குறுதியும் வெளியிட்டுள்ள அறிவிப்பும்:

நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபொழுது, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை ஏற்கப்பட்டு வேளாண் விளைபொருளுக்கான விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தப் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இப்பொழுது அரசு அறிவிக்கை கூறுகிறது. ஆனால், பரிந்துரை அளித்த எம்.எஸ்.சுவாமிநாதன், தனது தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி விலை உயர்வு அளிக்கப்பட வில்லை எனக் கூறுகிறார். குழுவின் பரிந்துரைக்கும் அரசின் அறிவிப்புக்கும் இடையே என்ன வேறுபாடு?

வேளாண்மையில் பயிர் சாகுபடிச் செலவுகளைப் பொறுத்த அளவில் பலவிதமான செலவினங்கள் உள்ளன. விதை, உரம், பூச்சி/நோய் மருந்து, விதையி லிருந்து பயிர் விளைச்சல் - அறுவடை வரையிலான பல்வேறு சாகுபடிப் பணிகளுக்கான கூலித்தொகை என உள்ளன. இந்த செலவினங்கள் அனைத்து சாகுபடிப் பகுதிகளுக்கும் ஒன்றாக இருப்பதில்லை. சாகுபடிச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் சூழ்நிலையே நிலவுகிறது. இந்தச் சாகுபடிச் செலவினங் களுக்கு மேலாக பயிர் சாகுபடிக்கு தங்களது உழைப் பினை வழங்கிய நில உடமையாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கணக்கிடப்பட வேண்டிய கூலித் தொகை மற்றும் மேற்பார்வைத் தொகை, சாகுபடி நிலப்பரப்பிற்கு கணக்கிடப்பட வேண்டிய நிலவரி, வாடகையும் மொத்த சாகுபடிச் செலவில் சேர்க்கப்பட வேண்டும். இந்த மொத்த சாகுபடிச் செலவினங்களோடு 50 விழுக்காட்டு தொகையினை கூடுதலாகச் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது. முழுமையான சாகுபடிச் செலவினைக் கணக்கில் கொள்ளாமல் சிலவற்றை ஒதுக்கிவிட்டு குறைந்த அளவில் சாகுபடிச் செலவினங்களைக் கணக் கிட்டு அதில் 50 விழுக்காடு சேர்த்து அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாகுபடிச் செலவுகள் அதிகரித்துக் கொண்டுவரும் நிலையில் நடப்பு ஆண்டு மொத்த சாகுபடிச் செலவு - எடுத்துக்காட்டிற்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆன மொத்த சாகுபடிச் செலவைவிட குறை வாகவே காட்டப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் கணக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த சாகுபடிச் செலவு குறைவாகவே உள்ள நிலையில் அதன்மீது 50 விழுக்காடு சேர்த்து வழங்குவது என்பது வெளிச் சந்தை விலை அளவிற்குக்கூட வராது. உண்மையில் வெளிச்சந்தை விலை என்பது உழவ ருக்குக் கட்டுபடி ஆகாததாகவே இருக்கும். நெல் பயிரைப் பொறுத்த அளவில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குவிண்டாலுக்கு 50 முதல் 80 வரை மட்டுமே அறிவிக்கப்பட்டதிலிருந்து நடப்பு ஆண்டு கரீப் பருவத்திற்கு ரூ.200/-ஆக உயர்த்திக் காட்டியுள்ளது, வர இருக்கின்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்பார்த்துத்தானே தவிர உண்மையில் உழவர்கள் சாகுபடி செய்திட்ட பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல.

நடைமுறை இயலாமை களையாத அரசின் அறிவிப்பு:

2018-19 வேளாண் முன் பருவத்தில் விளைந்த நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1750-ஆக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இப்படி அரசு அறிவித்ததாலேயே நெல் சாகுபடி செய்த உழவர்கள் அனைவருக்கும் இந்த விலை கிடைத்துவிடும் என்பது உறுதி அல்ல. விளைந்த நெல்லானது அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படும். அனைத்து உழவர்களும் கொள்முதல் நிலையங்களின் மூலம் விற்பனை செய்துவிட முடியுமா என்றால், முடியாது என்பதுதான் உண்மை நிலை. பயிர் சாகுபடி செய்யும் உழவர்களின் எண்ணிக்கை, அறு வடை செய்யப்படும் விளைச்சல் அளவு இவைகளுக்கு ஏற்ற அளவில் கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப் படவில்லை.

கொள்முதல் நிலையங்கள் போதாது என்ற நிலையில் சாகுபடி செய்த உழவர்கள் தங்களது விளைச்சலை வெளிச் சந்தையில் - தனியார் ஆதிக்கம் கோலோச்சிடும் சந்தையில் - அரசு அறிவித்த குறைந்தபட்ச விலைக்கும் குறைவாகவே விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். கொள்முதல் நிலையக் கட்டமைப்பினை உரிய அளவில் உருவாக்காமல் குறைவு  பட்ட - குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பால் உரிய பயன் உழவர் களுக்குக் கிடைத்துவிடாது. ஓர் ஆய்வு அறிக்கை, நாட்டில் உள்ள மொத்தம் 26.30 கோடி உழவர்களில் 7 விழுக்காட்டு அளவினர் மட்டுமே அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பில் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கிறது. பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் அறிவித்துவரும் வளர்ச்சிக்கான வெற்று கவர்ச்சி முழக்கங்கள் வேளாண் விளைபொருளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிப்பிலும் உள்ளது.

உழவர்களின் உண்மையான மேம்பாட்டிற்கு அரசு என்ன செய்திட வேண்டும்?

உழவர்களின் மேம்பாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டு நாளை உரிய விளைவுகளை உருவாக்கிடாது. இன்று தொடங்கினால், பலன் பெற ஆண்டு சில பிடிக்கத்தான் செய்யும். கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எதையும் செய்ய முன்வரவில்லை. மத்திய அரசு தனது இந்துத்துவா பரப்புப் கொள்கையை, அரசு அதிகார செயல்தளங்கள் பலவற்றில் வலிந்து திணித்துவரும் போக்கான, இப்போது இல்லாவிட்டால் எப்போது? (If not Now, When?) எனும் அணுகு முறையிலிருந்து, ஒட்டுமொத்த வேளாண்மை வளர்ச்சியைப் பொருத்தமட்டில், எப்போதும் இல்லை என்பதை விட தாமத செயலே மேல் (Better Late than Never) எனும் ஆக்கரீதியான அணுகுமுறைதான் அரசுக்கு அவசியம் வேண்டும்.

உழவுத் தொழில் முன்னேற்றத்தில் விளைபொரு ளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வது அரசின் முன்னுரிமைத் திட்டமாக அமைய வேண்டும். வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நியாயமாக கிடைத்திட அரசு சில முயற்சிகளை எடுத்து கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

1.    வேளாண் சாகுபடிச் செலவினங்களைக் கணக்கிடுவதில் அனைத்து வகைச் செலவினங்களையும் உள்ளடக்கியதாக அறிவியல் பூர்வமான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

2.    வேளாண் செலவினங்கள் - விளைபொருள் விலைகளுக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices - CACP)  அரசினருக்கு ஆலோசனை வழங்கக்கூடிய அமைப்பாக இல்லாமல், நிர்ணயம் செய்யப்பட்ட விலை உழவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான அதிகாரம் உள்ள அமைப்பாக மாற்றம் பெற வேண்டும்.

3.    வெறும் விளைபொருள் விலை அறிவிப்போடு நின்றுவிடாமல் உரிய எண்ணிக்கையில் அனைத்து விளைபொருள்களையும் கொள்முதல் செய்யக்கூடிய அரசு கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொள்முதல் நிலையங்கள் உள்ளன என ஒதுங்கிக் கொள்ளாமல் மத்திய அரசானது மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரங் களை அதிகமாக வழங்கி கொள்முதல் நிலையக் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.

4.    சாகுபடிக்கான இடுபொருளுக்கும், விளை பொருளுக்கும் வழங்கப்படும் அரசின் மானியத்தொகை யினை, இடையில் உள்ள தொழிற்சாலைகள், முகமைகள், தரகர்களுக்கு வழங்கப்படுவதை விடுத்து நேரடியாக உழவர்களுக்கே வழங்கிட வேண்டும். விளைபொருளுக் கான உரிய விலை கிடைக்கும் வரையிலான தற்காலிக ஏற்பாடே மானியம் வழங்கப்படுவது. மானியம் தவிர்த்து விளைபொருளுக்கு உரிய செலவினங்களோடு உழைத்த உழவர்களுக்கான லாபவருமான அளவினையும் உள்ளடக்கி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கச் செய்திட வேண்டும்.

5.    வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது துறைசார்ந்த அரசாணை என்பதாக இல்லாமல் சட்டமன்றம் / நாடாளுமன்றம் இயற்றுகின்ற சட்டமாக மாறவேண்டும். சட்டம் உருவாக் கப்படும் நிலையில் சட்டத்தை மீறி உழவர்களின் விளைபொருளுக்குக் குறைந்த விலையினை திணிக்க முயற்சிப்போர் மீது உரிய நடவடிக்கையினை எடுத்து, தவறிழைத்தோர் தண்டனைக்கு உள்ளாகும் நிலைகள் ஏற்பட வேண்டும்.

விளைபொருளுக்கு ஆதரவு விலை அறிவித்த மத்திய அரசு உழவர்களுக்கு அனுசரணையாக உள்ளதா?

உழவர்கள் முழுமைக்கும் பலன் கிடைக்க இயலாத வகையில் வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை மத்திய அரசு அறிவித்துள்ள சூழலில், ஒட்டுமொத்த உழவர்களின் நிலை மேலும் மோசமடையாத அளவிலாவது மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறதா என்றால் இல்லை என்பதாகத் தான் அரசின் செயல்பாடுகள் உள்ளன.

ஒரு பக்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையினை அறிவித்துவிட்டு, ஒரு சில தினங்களிலேயே சாகுபடிச் செலவினை அதிகரித்திடும் வகையில் அரசின் செயல்பாடுகள் உள்ளன. உழவுத் தொழிலில் பாசனநீர் பயன்பாட்டிற்கு மின்சார இணைப்பு முக்கியமாகும். பெரும்பாலும் உழவுத் தொழில் தொடர்பான மின்சாரம் வழங்கும் செலவுகளை விலையில்லாமல் அரசு வழங்கிவரும் நிலையில் உழவர்களைப் பாகுபடுத்தி மிகப் பலர் உழவுத் தொழிலில் மின்சாரப் பயன்பாட்டிற்கு விலை கொடுக்கும் வகையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்ந்தாலும் மின்சாரத்தை விலை கொடுத்து வாங்குவதால் சாகுபடிச் செலவும் உயர்ந்திடும். உண்மையான ஆதாயம் கிடைக்கக்கூடிய ஒரு சில உழவர்களுக்கும் மின்சார விலை விதிப்பால் நிகர ஆதாயம் இல்லாத சூழ்நிலை உருவாகும். நிலத்தடி நீர்மேல்மட்டத்தில்  உள்ள நிலச் சாகுபடியாளர்களுக்கு விதிக்கப்படவுள்ள மின்சாரக் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும். மின்சாரச் செலவினத்தைப் பொறுத்த அளவில் உழவர்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு அறிவித் துள்ள வேளாண் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு அதன் பலன் கிடைத்திடும் உழவர்களுக்கு பாதிப்பாக மாறிவிடும். ஆதரவு விலை அதிகரிப்பால் 'சாண் ஏறிய ஏற்றம்' மின்சார விலை விதிப்பால் 'முழம் சறுக்கிய இறக்கம்' என்பதாக மாறிவிடக் கூடாது. இந்த நிலையினை - தங்களது பாதுகாப்பற்ற நிலையினை அரசுக்கு முன்பாக உழவர்கள் உணர முன்வர வேண்டும். தம்நிலை அறிந்த மக்கள்தான் தங்களுக்குப் பயனளிக்கவல்ல தகைசான்ற அரசினை தேர்ந்தெடுக்க முடியும். உழவர்கள் தம் உண்மை நிலை அறிந்துகொள்ள முனைந்தால் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வரும் அரசும் உரிய கடமை ஆற்றிடும் நிலை ஏற்படும்.

- உழவன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner