எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆட்சி எது?

திமுக - அதிமுக விவாதம்

சென்னை, ஜூன் 14 தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆட்சி யாருடையது என்பது குறித்து திமுக -அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நேற்று (13.6.2018) திமுக உறுப்பினர் எம்.பி.கிரி பேசும்போது, தமிழ் வளர்ச்சிக்காக திமுக ஆட்சியில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடியை திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வழங்கினார் எனவும் கூறினார்.

அப்போது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியது: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதலில் அறிவித்தவர் ஜெயலலிதா. அரசு சார்பில் நிதி திரட்டப்பட்டு தமிழ் இருக்கை அமைப்பதற்கான 6 மில்லியன் டாலர் நிதி திரண்டு விடும் என்ற நிலையில்தான் கடைசியாக

ரூ.1 கோடியை மு.க.ஸ்டாலின் தர முன் வந்தார் என்றார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: தமிழ் வளர்ச்சிக்காக அதிமுகவும், திமுகவும் சிறப்புச் செய்துள்ளன என்பது யதார்த்தம். 5-ஆம் உலகத் தமிழ் மாநாட்டையும் எம்ஜிஆரும், 8-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை ஜெயலலிதாவும் நடத்திக் காட்டினர். இந்த மாநாட்டின் போது முத்தமிழ் என்பதை நான்காம் தமிழாக அறிவியல் தமிழ் வளர்க்க வேண்டும் என்று அறிவித்து, வளர்த்துக் காட்டியவர் ஜெயலலிதா. ஆனால், திமுக ஆட்சியில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரூ.10 லட்சம் கேட்டபோது தரப்படவில்லை. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.50 லட்சம் அளித்து தமிழ் இருக்கை அமைக்கப்பட்டது.

அமைச்சர் பாண்டியராஜன்: செம்மொழி தகுதி பெற்றுக் கொடுத்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது மூலம் உலக அளவில் செம்மொழி தகுதி அடைவதற்கு முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது என்பதை மறுத்துவிட முடியாது.

தங்கம் தென்னரசு (திமுக): திமுக ஆட்சியில் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதுபோல அதிமுக ஆட்சியில் செய்யாதது ஏன்? அறிவியல் தமிழைக் கொண்டு வந்ததாகக் கூறினார். பள்ளிகளில் தமிழ்க் கட்டாயம் என்று அறிவித்தவர் கலைஞர். எனவே, தமிழுக்காக அதிமுக பாடுபட்டதுபோல கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அமைச்சர் பாண்டியராஜன்: நாட்டுடமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல் விவரம் வெளியிடப்படும்.

தங்கம் தென்னரசு: தற்போது, தமிழ் வழிக் கல்வி முறையைக் கைவிட்டு ஆங்கில வழி முறையைப் புகுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதான் தமிழை வளர்க்கும் முறையா?

அமைச்சர் செங்கோட்டையன்: திமுக உறுப்பினர் காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் மனநிலைக்கேற்பதான் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

9 சிறைகளில் ஜாமர் கருவிகள்

தமிழகத்தில் 9 சிறைச்சாலைகளில் செல்லிடப்பேசி செயலிழப்பு ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவூட்டு மானியம் ரூ.900 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் புதன்கிழமை படித் தளித்த அறிக்கை:-சென்னை புழல் மத்திய சிறையின் இரண்டாம் பிரிவில் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, 500 சிறைவாசிகளை கூடுதலாக அனுமதிக்கும் வகையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். சிறைகளில் சிறைவாசிகள் செல்லிடப்பேசியை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஏற்கெனவே 9 மத்திய சிறைகளில் செல்லிடப்பேசி செயலிழக்கும் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் மத்திய சிறை-1 மற்றும் 2, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் 5 பெண்கள் தனிச்சிறைகளில் செல்லிடப்பேசியை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்.

மதிப்பூதியம் உயர்வு: தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ரூ.10,000-த்திலிருந்து ரூ.14,000-மாக ஆயிரமாக உயர்த்தப்படும்.

ரூ.25,000 மானியம்: மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் பால் விற்பனை மய்யம் அமைக்க செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் மானியமாக அளிக்கப்படும். இந்த நிதி முதல் கட்டமாக 100 பேருக்கு கொடுக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் சிறப்புப் பள்ளிகள், இல்லங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உணவூட்டு மானியமானது ரூ.650-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

ரூ.10 கோடியில் டேபிள் டென்னிஸ் அகாதெமி

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் டேபிள் டென்னிஸ் அகாதெமி தொடங்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கூறினார்.

சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் பாலகிருஷ்ணா வெளியிட்ட அறிவிப்புகள்:

சர்வதேச அளவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி யில் தமிழக வீரர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பதக்கங்கள் பெறுகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு டேபிள் டென்னிஸ் அகாதெமி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளை யாட்டுப் பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் தொடங்கப்படும்.

ரூ.15 கோடியில் விடுதி வசதிகள்: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சிப் படிப்பில் பயிலும் மாணவர்கள், விடுதியில் தங்கிப் படிப்பது அத்தியாவசியமாக உள்ளது. இதற்கு தற்போதுள்ள விடுதி வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதிகள் ரூ.15 கோடி செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 1.60 கோடியில் பாரம்பரிய விளையாட்டுகளான களரிபயட்டு மற்றும் சிலம்பாட்டத்துக்கான பயிற்சி மய்யம் அமைக்கப்படும்.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செயல்பாடுகளை அனைத்துப் பிரிவினரும் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் ரூ.33 லட்சம் செலவில் மென்பொருள் உருவாக்கப்படும். அமராவதி நகரிலுள்ள சைனிக் பள்ளியின் தேசிய மாணவர் படை பயிற்சி உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக ரூ.3 லட்சம் செலவில் .22 துப்பாக்கி சுடுதல் பாவிப்பு கொள்முதல் செய்யப்படும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner