எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூன் 13 தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, மொழிப்பாடங்களுக்கான தேர்வு தாள்களின் எண்ணிக்கையை இரண்டில் இருந்து ஒரு தாளாக குறைத்து தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை நிகழ் கல்வியாண்டு (2018-2019) முதலே செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக மாணவர்களின் நலன் கருதி தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களுக்கு ஆந்திரம், தெலங்கானா, கருநாடகம், கேரளம் மற்றும் வட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்றே இரண்டு தாள்களுக்குப் பதிலாக ஒரே தாளாக மாற்றி தேர்வு நடத்த வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் கடந்த மே மாதம் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொழிப்பாடம், ஆங்கிலம் ஆகியவற்றின் இரு தாள்களை ஒரே தாள்களாக ஒருங்கிணைக்க பாடத் திட்டக் குழுவுக்கு உயர்நிலைக் குழுவின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாற்றத்தை ஆசிரியர், பெற்றோர் அடங்கிய குழுக்கள் ஏற்றுக் கொண்டன. இதையடுத்து கடந்த ஜூன் 4 -ஆம் தேதி பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளிகள் வாரிய கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒரு மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்குநர், மாநிலக் கல்வி ஆராய்ச்சி -பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோரது கருத்துகளின் அடிப்படையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள மொழிப் பாடம், ஆங்கிலப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை இரண்டு தேர்வுகளாக எழுதுவதற்குப் பதில் ஒரே தாளாக தேர்வெழுத அனுமதித்தும், இதற்கான வினாத்தாள் கட்டமைப்பு, மாதிரி வினாத்தாள் ஆகியவற்றை உருவாக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனத் துக்கு அனுமதி வழங்கியும் அரசு ஆணையிடுகிறது.

மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்தில், பாடத்துக்கு இரண்டு தாள்கள் வீதம் தேர்வெழுதுவதால் இடைப் பருவத் தேர்வுகள், பருவத் தேர்வுகள், ஆயத்த தேர்வுகள் என தேர்வு நாள்களுக்கென ஏறத்தாழ பத்து நாள்கள் செலவிடப்படுகின்றன. தேர்வு நாள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாணவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள எட்டு தேர்வுகளின் எண்ணிக்கை ஆறு தேர்வுகளாகக் குறையும்போது மாணவர் களின் மனஅழுத்தம் பெரிதும் குறையும்.

ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும்போது, தற்போதுள்ள பாடப்பகுதிகளில் எந்தவொரு பகுதியையும் நீக்கம் செய்யாமல் அனைத்தையும் உள்ளடக்கியதாக வினாத்தாள்களைத் தயாரிக்கலாம். இதனால் மாணவர்கள் எந்தப் பாடப் பகுதியையும் விட்டுவிடாமல் கற்றுத் தேர்வெழுதும் சூழல் ஏற்படும்.

இந்தத் தேர்வு முறை நிகழ் கல்வியாண்டு முதலே பின்பற்றப்பட வுள்ளது என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner