எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆதார உரை

கோவை, பிப்.10 "125 ஆண்டுகள் வாழ்வேன் என்றார் காந்தியார்; பார்ப்பான் உருவில் எமன்' விட்டு வைக்க வில்லை என்றார் பெரியார்" என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆதாரத்துடன் விளக்கவுரையாற்றினார்.

31.1.2019 அன்று  கோவையில் நடைபெற்ற காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: காந்தியாருக்குக் கருப்புக் கொடி காட்டிய அய்யங்கார்கள்

காந்தியாருக்கு, சிறீரங்கத்தில் கருப்பு கொடி பிடித் தார்கள் அய்யங்கார்கள்.

இந்தத் தகவல் நிறைய பேருக் குத் தெரியாது.

மகாத்மா காந்தி என்று நாங்கள் சொல்லவேண்டி இருக்கிறது, நாங்கள் ஆத்மாவை நம்பவில்லை என் றாலும்கூட!

நீதிமன்றத்தில் கோட்சே குற்றவாளி என்று சொன் னவுடன், கோட்சேவே கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய வாக்குமூலம் என்று புத்தகம் வெளியிட்டிருக் கிறார்கள். அதை வெளியிட்டவர், கோட்சேவினுடைய தம்பி கோபால் கோட்சே. அவர் ஆயுள் தண்டனை முடிந்து வெளியில் வந்தவுடன் எழுதிய புத்தகம்.

Gandhiji's Murder and After என்ற ஒரு புத்தகம் - அதில் சில தகவல்கள்.

அதேபோன்று May Please Your Honour, Nathuram Godse - காந்தியைக் கொன்றவன் கோட்சே என்பதை வேண்டுமென்றே திசை திருப்பினார்கள்.

காந்தியை, ஒரு முசுலிம் கொன்றார் என்று பரப்பிவிட்டதின் விளைவாக, ஈரோட்டில் கலவரம், திருவண்ணாமலையில் கலவரம், ஆம்பூரில் கலவரம் நடைபெற்றன. தந்தை பெரியார்தான், விடுதலை'தான், காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல; கோட்சே என்ற மராத்தி பார்ப்பான் என்று செய்தி வெளியிட்டார்கள்.

சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இவைகளை சொல்லக்கூடியது நமது இயக்கம்!

இன்றும்கூட பார்த்தீர்களேயானால், காந்தியை கொன்றார்கள் என்று சொல்வதில்லையே; வரலாற்றை மறைக்கிறார்களே!

பார்ப்பான் என்று சொல்லலாமா? என்று சிலர் கேட்பார்கள்; சிலர் கேட்கலாம், இவர் தூண்டி விடு கிறாரே என்று. நாங்கள்தான் அமைதியை உருவாக்கு பவர்கள்; நாங்கள்தான் காவல்துறையினருக்கு வேலை இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள். நாங்கள்தான், அண்ணன் - தம்பிகளாக அனைவரும் இருக்கவேண்டும்; நமக்குள் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது என்று சொல்பவர்கள். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இவைகளை சொல்லக்கூடிய இயக்கம் நமது இயக்கம்.

சமூக வலைதளத்தில் ஒருவர் செய்தி வெளியிட் டிருந்தார்.

இந்திரா காந்தியைக் கொன்றவன் சீக்கியன்

ராஜீவ் காந்தியைக் கொன்றவன் தமிழன்

காந்தியைக் கொன்றவன் கோட்சே என்று.

ஏன் கோட்சேவுக்கு ஜாதி கிடையாதா? அவர் ஜாதி, மதத்தை விட்டுவிட்டாரா என்ன?

மொரார்ஜி தேசாய், மகாராட்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் ஆட்டோ பயோகிராபி என்ற தலைப்பில், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். அதில், நாசிக் போன்ற இடங்களில் உள்ள அக்கிரகாரங்களில் புகுந்து, பார்ப்பனர்களை அடித்து, அவர்களுடைய இல்லங்களுக்குத் தீ வைத் தார்கள் என்று.

தமிழகத்தில் தந்தை பெரியார் நினைத்திருந்தால் என்னாவாகியிருக்கும்?

காந்தியார் சுடப்பட்டவுடன், அப்பாவியான முசுலிம் களுக்கு எதிராக ஒரு கலவரத்தை உண்டாக்கி, அது மதக்கலவரங்களாக உருவான நேரத்தில், இங்கே ஒழுக்கச்சீலர் ஓமந்தூரார் அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார்.

இந்தக் கலவரங்களை அடக்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்று நினைத்தார். தந்தை பெரியார் அவர்களிடம் தொண்டராக இருந்தவர்; குருகுலப் போராட்டக் காலத்திலிருந்து.

தந்தை பெரியாரை அழைத்து வானொலியில் உரையாற்ற சொன்னார் ஒழுக்கச் சீலர் ஓமந்தூரார்

உடனே தந்தை பெரியாரை அழைத்து, வானொலி யில் நீங்கள் பேசுங்கள். தமிழ்நாட்டில் அமைதி இருக்கவேண்டும்; மதக்கலவரங்கள் இங்கே நடைபெறக் கூடாது என்பதைப்பற்றி நீங்கள் பேசுங்கள் என்றார்.

திருச்சி வானொலியிலிருந்து அய்யா தந்தை பெரியார் அவர்களின் இல்லம் சென்று, அவருடைய உரையைப் பதிவு செய்து ஒலிபரப்பினார்கள்.

அந்த உரையில் தந்தை பெரியார் என்ன பேசினார்?

எல்லோரும் அமைதியாக இருக்கவேண்டும்; அது தான் மிக முக்கியம் நாட்டில் எந்தவிதமான பிரச்சினை களையும் உண்டாக்கக்கூடாது என்று எடுத்துச் சொன் னார்கள்.

காந்தியாருடைய மறைவையொட்டிய தந்தை பெரியார் உரைகள் என்று சொல்லும்பொழுது, அதற்கு அடுத்த நாள் அறிக்கை வெளியிடுகிறார் தந்தை பெரியார் அவர்கள்.

"காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற சேதியானது, எனக்குக் கேட்டதும் சிறிது கூட நம்ப முடியாத தாகவே இருந்தது. இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தி யாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும்தான் இக் கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்தி ருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்கு திரை மறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்க வேண்டும். அதுவும் காந்தியார் எந்த மக்களுக்கு ஆகப் பாடுபட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச்செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையேயாகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரண மாக நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்வதே அவருக்கு நாம் மரியாதை செய்வதாகும்.''

காந்தியாரின் கொலைக்கு மதமும் வைதீகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்தி ருக்கலாம் என்பது என் கருத்து என்று அந்த நிமிடத்தில் சொல்கிறார்.

தந்தை பெரியாரின் தொலைநோக்கு!

அதுதான் பெரியாருடைய தொலைநோக்கு என்று Prophets of the new age  என்று யுனெஸ்கோ அவருக்கு விருது அளித்தது.

இதுமட்டுமா?

இந்தியாவிற்கு சுதந்திரம் வரவில்லை. ஆட் சியை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். நாம் வெள்ளைக் காரர்களிடமிருந்து இன்னொருவரிடம் அடிமையாக இருக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொன்னார்கள். அதை  அன்றைக்கு ஒப்புக்கொள்ளாதவர்கள், பின் னாளில் ஒப்புக்கொண்டார்கள்.

ராஜகோபாலாச்சாரியார்தான் இந்தியைத் திணித்தார். பெரியார் சொன்னார், வெறும் மொழிக்காக மட்டும் இந்தியை எதிர்க்கவில்லை. அது ஒரு கலாச்சார திணிப்பு என்றார். வெறும் மொழியை மட்டும் எதிர்ப்பது என்பது கிடையாது. இந்தி என்னுடைய நாட்டிற்கோ, எங்கள் நாட்டின் தட்பவெப்பத்திற்கோ தேவையில்லை. தமிழ் மொழியை அழிப்பது இந்திதான் என்று தெளிவாக சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

1938 இல் இந்தியை எதிர்த்து...

சமஸ்கிருதத்தைப் புகுத்துவதற்காக வந்த ராஜ கோபாலாச்சாரியார், பின்னாளில் என்ன ஆனார்? 1938 இல் இந்தியை எதிர்த்து எங்களுடைய தோழர்கள், தாய்மார்கள் எல்லாம் சிறை புகுந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தாய்மார்கள் எல்லாம் அங்கேயே குழந்தைகளைப் பெற்றனர்.

அதே ராஜகோபாலாச்சாரியாரை, பெரியார் இயக்கம் மாற்றியதா? இல்லையா?

Hindu Never; English Ever என்கிற வார்த்தைகளை சொன்னவர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள்.

ஆகவே, பெரியாரின் தொலைநோக்கு என்பதை நீங்கள் தெளிவாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்றைக்குக் காலையில் வந்திருக்கின்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி.

இரட்டை வேடம் போடுகிறார்கள். அதுதான் பார்ப்பனியம் - அதுதான் ஆரியம்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் ஆட்சி; சனாதன ஆட்சி; பி.ஜே.பி. ஆட்சி. அங்கேயும் வளர்ச்சி, வளர்ச்சி என்று சப்கா சாப்; சப்கா விகாஸ்'' என்று சத்தம் போட்டவுடன், அங்கேயும் வேலை வாய்ப்பை நம்பிய இளைஞர்கள் ஏமாந்துவிட்டார்கள். அதனுடைய விளைவுதான் மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கிறது.

Firing shots at Mahatma Gandhi's effigy

காந்தியாரை ஒரு பக்கம் ரூபாய் நோட்டில் அச்சடித்துவிட்டு, ஒரு பக்கம் காந்தியாருக்கு நாங்களும் விழா எடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு - இரட்டை வேடம் போடுகிறார்கள். அதுதான் பார்ப்பனியம் - அதுதான் ஆரியம்.

விதைக்காத விளையும் கழனி

பேச நா இரண்டுடையாய்

போற்றி! போற்றி!!

என்று அண்ணா சொன்னார். அதுதான் ஆரிய மாயை.

ஒரு பக்கம் காந்தி சிலைக்கு மாலை போடுகிறார் மோடி. இன்னொரு பக்கம் இந்து மகாசபை. இராமனுக்குக் கோவில் கட்டவேண்டும் என்று சொல்லுகின்ற இந்து மகாசபை.

அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், காந்தியினுடைய உருவத்தை செய்து, அதனை துப்பாக்கியால் சுட்டுக் காட்டுகிறார்கள்.

சிறிது நேரத்திற்கு முன் அருமையான செய்தியை என்னிடம் கொளத்தூர் மணி அவர்கள் சொன்னார்கள்; நேரமின்மையால் நான் சொல்ல முடியவில்லை; நீங்கள் சொல்லுங்கள் என்றார்.

நாங்கள் காந்தியார் படத்தை எரித்தாலோ, அரசியல் சட்டத்தை எரித்தாலோ, தேசியக் கொடியை எரித்தாலோ மூன்றாண்டு காலம் தண்டனை.

முதலில் அவசரச் சட்டம்; பிறகு அந்த சட்டம் அமுலானதே; இன்றைக்கு அந்த சட்டம் நடைமுறையில் இருக்கிறதா? இல்லையா? அந்த சட்டம் அவர்களின்மேல் பாய்ந்ததா? பாயுமா?

மதவெறி பல பேரைக் கொன்றிருக்கிறது!

அரசியல் சட்டத்தை அவர்கள் மதிப்பதில்லையே - காரணம், மதவெறி. அந்த மதவெறி பல பேரைக் கொன்றிருக்கிறது. அது இந்த மதமா? அந்த மதமா? என்பதில்லை. எந்த மதமும்! மதம் பிடிக்காதவர்கள் நாங்கள்தான். எங்களுக்கு மதமும் பிடிக்காது; மதமும் பிடிக்காது. இதிலுள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அய்யா அவர்கள் சொல்கிறார்கள் 1927 ஆம் ஆண்டில், காந்தியாரை விட்டு வைக்கமாட்டார்கள் என்று. அதுபோலத்தானே நடந்தது.

காந்தியாரை எமன் விட்டு வைத்தான்; பார்ப்பான் விட்டு வைக்கவில்லை

ஒரு கூட்டத்தில் வேடிக்கையாக சொன்னார்; அய்யா அவர்கள். சில நேரங்களில் நகைச்சுவையாகப் பேசுவார். அப்பொழுது அவர் சொன்னார், பாவம், என்னுடைய தலைவர் காந்தி; அவர் 125 ஆண்டுகாலம் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார்; அதிலொன்றும் தவறில்லை, அவர் வாழட்டும். அவர் வாழவேண்டும் என்று நினைத்தார்; நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், எமன் அவரை விட்டு வைத்தான்; பார்ப்பான் விட்டு வைக்கவில்லை'' என்றார்.

எமன் என்று ஒருவன் கிடையாது; மக்களுக்குப் புரியவேண்டும் என்று அவர் அப்படி சொன்னார்.

அந்த வெறித்தனத்திற்கு என்ன காரணம்? என்பதை நண்பர்களே இங்கே நினைத்துப் பார்க்கவேண்டும். அதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

பார்ப்பனியத்தினுடைய அடித்தளமான சமூகநீதி. இதுபோன்ற பொதுக்கூட்டங்கள் வரலாறாக மாறுகின்ற நேரத்தில், பிரச்சாரங்களாக மாறுகின்ற நேரத்தில்தான் உங்களுக்கு இந்தத் தகவல்கள் கிடைக்கும்.

ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்தார். வகுப்புவாரி உரிமையின் அடிப்படையில் ஆட்கள் வருகிறார்கள். 1950 இல்தான் வகுப்புவாரி உரிமை செல்லாது என்று அரசியல் சட்டத்தைக் காட்டி தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.

1928 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, அப்படியே தொடர்ந்து வருகிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சேர்த்து கொடுக்கிறார்கள்.

காந்தியாரிடம் பார்ப்பனர்கள் கொடுத்த மனு!

அதில், தமிழ்நாட்டு பிராமணர்கள் என்ற பெயரில், தமிழ்நாட்டிற்குக் காந்தி வரும்பொழுது அவரிடம் ஒரு மெமராண்டம் கொடுக்கிறார்கள் 1946 ஆம் ஆண்டில்.

அதில், பிராமணர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியவில்லை. எங்களுடைய பிள்ளைகளுக்கு வகுப்புவாரி உரிமை என்று சொல்லி, அவர்களுடைய கழுத்தில் சுருக்கு போடுகிறார்கள். ஆகையால், நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

காந்தியார் அந்த மனுவை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.

காந்தியாரின் செயலாளரான தேசாயிடம் அந்த மனுவை கொடுத்து விசாரிக்க சொன்னார்.

அன்றைய காலகட்டத்தில் ஓமந்தூரார் முதலமைச் சராக இருக்கிறார்.

Gandhiji wants to know, you must clarify certain things. there is allegation against you

நீங்கள் ஒரு தாடி இல்லாத ராமசாமி நாய்க்கர்; கருப்பு சட்டை போடாத முதலமைச்சர் என்றுதான் பத்திரிகைகளில் எழுதுவார்கள்.

நீங்கள் ஒரு வகுப்புவாரி என்று சொல்கிறார்களே, இதற்கு என்ன பதில்? என்று கேட்டு கடிதம் எழுதுகி றார்கள்.

முதலமைச்சர் ஓமந்தூரார் அவர்கள், ஒழுக்கச் சீலர் ஓமந்தூரார் என்று பெயர் பெற்றவர். அய்.சி.எஸ். அதிகாரிகளையெல்லாம் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். அவர் சாதாரணமானவர் அல்ல. படிப் பிற்கும், அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு அவர் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. காமராஜருக்கு முன்னால், அவர்தான் முன்னோடி.

புள்ளி விவரத்தோடு காந்தியாருக்கு முதலமைச்சர் ஓமந்தூரார்  கடிதம்

அந்தக் கடிதத்திற்கு முதலமைச்சர் ஓமந்தூரார் பதில் எழுதினார், புள்ளி விவரத்தோடு.

பார்ப்பனர்களுடைய எண்ணிக்கை 3 சதவிகிதம். 3 சதவிகிதமாக இருக்கின்றவர்கள், பொறியியல் கல்லூரிகளில், மருத்துவக் கல்லூரிகளில் 60, 70 சதவிகித இட ஒதுக்கீட்டினை பெற்றுள்ளார்கள் என்று புள்ளி விவரப்படி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். உங்களிடம் தவறான தகவலை அளித்திருக்கிறார்கள். இதற்குமேல் உங்களுக்கு விளக்கம் வேண்டுமானால், நான் நேரிலும் வந்து உங்களுக்கு விளக்கத் தயா ராக இருக்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தை காந்தியார் பார்த்தவுடன், அவ ருக்கு ஒரு மாறுதலான சிந்தனை வந்தது. உண்மை இல்லாதவற்றை பார்ப்பனர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு புள்ளி விவரப்படி முதலமைச்சர் ஓமந்தூரார் கடிதம் எழுதியிருப்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டார்.

மீண்டும் தமிழ்நாட்டிற்கு காந்தியார் வரும்பொழுது, பார்ப்பனர்கள் அவரை சந்தித்து கேட்கிறார்கள்.

அவர்களைப் பார்த்தவுடன், காந்தியாருக்கு கோபம் வந்துவிட்டது. நான் எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டேன். நீங்கள் எழுதியதில் கொஞ்சம்கூட உண்மையில்லை.

உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்,

நீங்கள் வருணாசிரம தர்மத்தை நம்புகிறவர்கள் தானே? என்றார் காந்தியார்.

அவர்களும் ஆமாம் என்றனர்.

வருணாசிரம தர்மப்படிதானே, பிராமணர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள்? என்றார் காந்தியார்.

ஆமாம் என்றனர் பார்ப்பனர்கள்.

வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கு அழகு!

சரி, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.

வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கு அழகு;  வேதம் தானே நீங்கள் படிக்கவேண்டும்; அதைவிட்டுவிட்டு, உங்களுக்கு ஏன் டி-ஸ்கொயர் கேட்கிறது? பிணத்தை அறுக்கின்ற வேலை ஏன் உங்களுக்கு? பூணூல் அணிந்துகொண்டு மந்திரம் சொல்வதுதானே உங்களுடைய வேலை என்று கேட்டார் பாருங்கள்,

பெரியார் மொழியில் சொல்லவேண்டுமானால், அன்றைக்கே முடிவு செய்தனர் பார்ப்பனர்கள்; இனிமேல் காந்தியாரை விட்டு வைக்கக்கூடாது'' என்று.

அன்றைக்கு முடிவு செய்ததுதான், மிக முக்கியமான அடிப்படையாகும்.

இன்றைக்கும் சமூகநீதிக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரி ஒருவர், தூத்துக்குடியிலிருந்து பிரசவத்திற்காக வரும்பொழுது, அவரை அனுமதிக்கமாட்டோம் என்கிறார்கள்; அந்த அம்மை யாரிடமே செல்ல மறுக்கிறார்கள்.

கலெக்டராக இருந்த வெள்ளைக்கார ஆஷ் துரையினுடைய மனைவி, அந்தத் தாழ்த்தப்பட்ட சகோதரியை அழைத்துக்கொண்டு சென்று மருத்துவ மனையில் சேர்க்கிறார். ஏன் உங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று கேட்டவுடன்,

அந்த சகோதரி, நாங்கள் எல்லாம் தீண்டாத ஜாதிக்காரர்கள்'' என்று பதில் சொல்கிறார்.

நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானே என்று அந்த அம்மையார் கேட்கிறார்.

இதைப்பற்றி ஆஷ் துரையிடம் சத்தம் போடுகிறார், இதுபோன்று இருக்கிறதே என்று.

சனாதனத்தை எதிர்த்ததினால், ஆஷ் துரை வாழக்கூடாது; இந்தத் தகவல், வாஞ்சிநாதன் கடிதத்தில் இருக்கிறது.

உண்மையல்லாதவற்றை நாங்கள் பேசுவது கிடையாது!

நாங்கள் சொல்வதில் கற்பனை கிடையாது; ஆதாரம் இருக்கிறது; யாருக்காவது தைரியம் இருந்தால், எங்கள்மீது வழக்குத் தொடுக்கட்டும்; நீதிமன்றத்தில் நல்ல அளவிற்கு இதைவிட அதிகப் பிரச்சாரம் செய்ய முடியும். உண்மை யல்லாதவற்றை நாங்கள் பேசுவது கிடையாது.

ஒருமுறை அய்யாவிடம் கேட்டார்கள், நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று சொல்கிறார்களே?'' என்று.

முதலில் அந்த வார்த்தையே தவறு என்று சொன்னார் அய்யா. உண்மையை சொல்வதற்கே எனக்கு நேரம் கிடையாதே; பிறகு நான் ஏன் பொய் சொல்லப் போகிறேன் என்றார்.

அதேபோன்றுதான், இங்கேயும் உண்மைகளைச் சொல்வதற்கு நேரம் இல்லையே! நாங்கள் எவ்வளவு நேரம்தான் பேசுவது; நீங்களும் எவ்வளவு நேரம்தான் அமர்ந்து கொண்டிருப்பது.

மரண வாக்குமூலத்திற்கு சட்டத்தில் தனி மரியாதை உண்டு. மரணத்திற்குப் போகிறவர்கள் யாரும் பொய்ச் சொல்ல மாட்டார்கள். பெரியாரிய, திராவிடர் இயக்க உணர்வாளர்கள் எல்லாம் மரண வாக்குமூலம் கொடுப்பதற்குத் தயாராக இருப்பவர்கள். எங்களுடைய வாக்குமூலங்கள் எல்லாம் மரண வாக்குமூலம் - உண்மையானது.

இன்றைய சாமியார்கள் அய்டெக் சாமியார்கள்!

எங்களுக்கொன்றும் தனிப்பட்ட முறையில் ஆசாபாசங்கள் கிடையாது. என்னுடைய தொண்டர்கள், தோழர்கள் துறவிக்கும் மேலானவர்கள். துறவி என்றால், இப்பொழுது இருக்கிற சாமியார்கள் கிடையாது. இப்பொழுது இருக்கின்ற சாமியார்கள் எல்லாம் அய்டெக் சாமியார்கள். ஆசிரமத்திலேயே ஒரு பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறார்கள். அங்கே நவீன கருவிகளை வைத்திருக்கிறார்கள், கருக்கலைப்பிலிருந்து எல்லா விஷயங்களுக்கும் சேர்த்து.

ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு நடைபெறுகிறது; இன்னொரு பக்கத்தில் பார்த்தீர்களேயானால், புதிதாக கருத் தரிப்பு மய்யங்கள்.

பாவம் பிரம்மாவிற்கு வேலையில்லாத் திண்டாட்டத்தில் நம்பர் ஒன்னாக இருப்பவர் அவர்தான். ஏனென்றால், பிண்டம் பிடித்துப் போடுவது, எல்லாரையும் தயார் படுத்துகின்ற வேலையெல்லாம் கிடையாது. ஒரு பக்கம் மூடுவதற்குத் தயாராக இருக்கிறான்; இன்னொரு பக்கம் திறப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழல் இன்றைக்கு வந்திருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? என்று தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டாமா?

திண்ணையில் உட்கார்ந்திருந்த காந்தியாரை உள்ளே அனுப்பியது,

பார்ப்பனரிடம் வகுப்புவாதம் என்பது இருந்தது

இவை அத்தனையும் பார்த்தவுடன், அவரை அழிக்க வேண்டும் என்று நினைத்தனர்.

நீதிமன்றத்தில் கோட்சே அளித்த வாக்குமூலம்!

காந்தியாரைக் கொன்ற கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் ஒரு சில செய்திகளை மட்டும் சொல்கிறேன்.

காந்தியாரைக் கொலை செய்த வழக்கில் நான் தப்பிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அந்த வகையில், கோட்சேயைப் பொறுத்தவரையில் அகண்ட பாரதம். அகண்ட பாரதம் என்றால், பாகிஸ்தான், ஈரான் வரையில் சேர்க்கவேண்டும்.

வேறு எந்தக் காரணத்தை சொல்லவில்லை என்றாலும், இந்த ஒரு காரணத்தைச் சொல்லி படையெடுக்கலாம்.

Hindi vs Hindustani

நன்றாக கவனிக்கவேண்டும்; ஒரு பக்கம் சமூகநீதி பற்றி சொன்னேன்; இன்னொரு பக்கம் காந்தியாருக்கு இந்துஸ்தானிதான் வரவேண்டும்; இப்பொழுது அரசியல் சட்டத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால், சமஸ்கிருதத்தை தேவபாஷை என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

அப்படி என்றால், என்ன அர்த்தம்? தேவபாஷை. அதற்கு நேர் எதிரானது பாஷை எது? நீஷ பாஷை. அந்த நீஷ பாஷை எது? தமிழ்.

இந்தக் கொடுமை எங்கேயாவது உண்டா? இந்திய அரசியல் சட்டத்தில் அந்த வார்த்தை இருக்கிறது.

Hindi shall be the official of the state government. In Hindi (in Devanagari script)

தேவ எழுத்துகள் என்றால், மற்றவை எல்லாம் என்ன? நீஷ எழுத்துகள்.

இவ்வளவு திட்டமிட்டு, பல காரியங்கள் உள்ளே நுழைந்திருக்கின்றன.

கோட்சே நீதிமன்றத்தில் என்ன வாக்குமூலம் கொடுத்தார் என்றால்,

நான் பகவத் கீதையை தொடர்ந்து படித்தேன். ஆகையால், காந்தியாரைக் கொல்வது நியாயம் என்று எனக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது. பகவத் கீதையில் உள்ள சுலோகங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும்; ஜெயிலில் அதைத்தான் நான் படித்தேன் என்றார் கோட்சே.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner