எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.18 திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சிகள் 16.1.2019 அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் தொடங்கியது. லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையிலான மாற்று ஊடக மய்யம் கலைக்குழுவின் பறை முழக்கத்தினை திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி தொடங்கிவைத்தார்.

மக்கள் திரளின் மகிழ்ச்சியான ஆட்டத்தோடு பெரியார் திடல் நோக்கி ஊர்வலமாக வந்தது பறை முழக்கம். பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முன்பான மய்தானத்தில் “பொங்கலோ பொங்கல்” என்று உற்சாகக் குரல் எழுப்பி, பொங்கல் வைத்தனர் இருபால் கழகத் தோழர்கள். மாடாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என பறை இசைக்கேற்ப ஆட்டங்கள் நடக்க, உடன் சேர்ந்து ஆடி மகிழ்ந்தனர் இளைஞர்களும், குழந்தைகளும்!

அதனைத் தொடர்ந்து பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் இருபால் இளைஞர்கள், மாணவர்கள், பிஞ்சுகள் சிலம்பம், நெருப்புச் சிலம்பம், சுருள்கத்தி, வாள் உள்ளிட்ட கருவிகளுடன் நடத்திய வீரவிளையாட்டுகள் அனை வரையும் வியப்பில் ஆழ்த்தின.

ஒளிப்படக்கண்காட்சி

பெரியார் திடலின் வெளி அரங்கில் பல்வேறு ஊர்களின் சிறப்பான உணவு வகைகளுடன் கூடிய உணவுத் திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயற்கையைக் காப்போம்! பேரிடர் தவிர்ப்போம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு ஒளிப்படக் கண்காட்சி சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளும், பெரியவர்களுமாக உலகின் சூழல் காக்கும் உணர்வுடன் தங்கள் எண்ணங்களையும், வண்ணங்களாக்கி வரைந்து காட்சிப்படுத்தவும் தனி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில் பெரும் ஆர்வத்துடன் வரைந்து ஓவியங்களை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

எருமை மாட்டுப் பொங்கல்

‘எருமை மாட்டு’ப் பொங்கலாகக் கொண் டாட வேண்டும் என்ற தமிழர் தலைவரின் அறிவிப்பின்படி, எருமை மாடுகளுக்கான தொழுவம் உருவாக்கப் பட்டு, அங்கு “எருமை மாட்டுப் பொங்கல்” கொண்டாடப்பட்டது.

பெரியார் திடலில் எருமை மாடுகள், கன்றுகள் கொண்டு வரப்பட்டு ஏராளமான தோழர்கள் அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு எருமை மாட்டு பொங்கல் கொண்டாடினர்.

சரியாக 6.30 மணியளவில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மக்களிசைப் பாடல்களுடன் அறுவடை ஒயில், கழி யலாட்டம் போன்றவை நடைபெற்றன.

”கோமியத்தை குடிக்கிறவன்

கொட்டம் அடிக்கிறான்

அந்தப் புரட்டைத் தான்

விளக்குறதுக்கு பெரியார் இருக்கிறார்” என்ற பாடலுடன் ஒயிலாட்டமும்,

”ஜாதிகள் பேசுகிற சழக்கர்கள் நாட்டினை

தேதித் தாளைப் போல கிழித்தவர் எங்கள் பெரியார்”

என்ற பாடலும்,

”பெரியாரின் கைகளிலே குச்சி இருந்தது

அது பகுத்தறிவை அனைவருக்கும் சொல்லித் தந்தது

அம்பேத்கரின் கைகளிலே குச்சி இருந்தது

அது பொதுவான சட்டத்தை எல்லோருக்கும் சொல்லித் தந்தது” என்ற பாடலும்,

”ஈரோட்டு மண்ணிலே பிறந்த பகலவன்பெரியார்

ஜாதி மத வேதங்களைப் புரட்டிய பெரியார்

அன்புப் பெரியார் எங்கள் அழகுப் பெரியார்

உண்மைப் பெரியார் பகுத்தறிவுப் பெரியார்”

என்ற பாடலும் ஒலிக்க, சாட்டைக்குச்சி ஆட்டமும், கழியலாட்டமும் நடைபெற்றன.

“கரகமடி கரகமடி

திராவிடர் திருநாள் கரகம்

முத்தமிழ் மன்ற 25-ஆம் ஆண்டை

கொண்டாடும் கரகம்”

என்று தொடங்கும் பாடலுடன் கரகாட்டத்தை நிகழ்த்திக் காட்டினர்.

பெரியார் விருது வழங்கல்

தொடர்ந்து பெரியார் விருது வழங்கும் விழா தொடங்கியது. பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் வரவேற்புரையாற்ற, பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் மாநில செயலாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அறிமுகவுரை ஆற்றினார். குவைத்தைச் சேர்ந்த உலகத் தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகத்தின் ஒருங் கிணைப்பாளர் குவைத் செல்லப்பெருமாள் அவர்கள் நிகழ்வுக்குத் தலைமையேற்றார்.

வி.பன்னீர்செல்வம், மயிலை நா.கிருஷ்ணன்,  தி.இரா.இரத்தினசாமி, தே.செ.கோபால், இரா.வில்வநாதன், இரா.முத்தையன், த.ஆனந்தன், எண்ணூர் மோகன், ஆர்.டி.வீர பத்திரன், கோ.ஒளிவண்ணன், கி.சத்திய நாராயணன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் ஆகியோரின் படத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் திறந்துவைத்தார். பேராசிரியர் அறவாணன் அவர்களின் வாழ்விணையர் தாயம்மாள் அறவாணன் மற்றும் மருமகள் பேராசிரியர் வாணி அறிவாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, சமத்துவமே திராவிடர் பண்பாடு என்ற தலைப்பில் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி உரையாற்றினார். சமூகநீதிக்கான போராட் டத்தில் திராவிடர் இயக்கத்தின் பங்கு எத்தகையது என்ப தையும், இன்றும் அந்தப் போராட்டத்தை மக்கள் மனங்களில் நிகழ்த்துவது தொடர்பாகவும் கருத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக், பாவலர் சீனி பழனி, கவிஞர் குட்டி ரேவதி, திராவிட இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள் காணொலி வடிவில் ஒளிபரப்பப்பட்டது, நால்வருக்கும் பெரியார் விருதினை தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். பெரியார் விருதுடன், அதற்கான கேடயமும், புத்தகங்களும் வழங்கி பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார் ஆசிரியர். தொடர்ந்து அவர்கள் ஏற்புரை வழங்கினர்.

சிறிய அளவில் பொதுநலத்துடன் செயல்படத் தொடங்கியதற்கே இந்தப் பாராட்டு என்றால், நான் இதனை தொடரும் என் பணிகளுக்கு அச்சாரமாகவே எடுத்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியாக உரையாற்றினார் ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக், ஓய்வுக்குப் பின்னும், சமூகப் பணி ஆற்ற வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுவதற்குக் கிடைத்த பாராட்டுக்கு கவிதையைப் பாடலாக்கி தன் உரையை நிறைவு செய்தார் பாவலர் சீனி.பழனி. பெரியாரின் பணியை கலை இலக்கியத் துறையில் விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து உரையாற்றினார் கவிஞர் குட்டி ரேவதி. வரலாற்றுச் செய்திகளைப் பட்டியலிட்டு, ஆதாரங்களை எடுத்து தலைவர் ஆசிரியரிடம் தந்து, திராவிட இயக்கம் தொடர்பாக இன்னும் விரிவான ஆய்வு செய்ய விரும்புவதை வெளிப்படுத்தினார் திராவிட இயக்க ஆய்வாளர் செ.திவான்.

நிறைவாக, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். திராவிட இனத்தின் திருநாளாக பொங்கல் விழாவை முதன்மைப்படுத்திய தந்தை பெரியாரின் பணிகள், சமூக, கலைத் துறையில் மானமீட்புப் போராட்டம், பெரியாரின் ரத்தம் சிந்தாத பண்பாட்டுப் புரட்சிகளை முன்னிறுத்தி உரையாற்றினார்.

வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி தொகுப்புரையாற்ற, ப.க. மாநில பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner