எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவரின் விளக்க உரை

சென்னை,டிச.5 பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை, பெரியாரோ, திராவிடர் இயக்கமோ உண்டாக்கவில்லை. முழுக்க முழுக்க வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று. அதுதான் அந்தப் பேதத்தை உருவாக்கியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு

26.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: தாழ்த்தப்பட்டவர்கள் நெய் போட்டு சாப்பிடக் கூடாதாம்!

இன்றைக்கும் குஜராத்தில் விருந்தில் நெய் போட்டு சாப்பிட்டான் என்பதற்காக அடிக்கிறார்கள்.

தாழ்த்தப் பட்டவர்கள் என்பவர்கள் நெய் போட்டு சாப்பிடக் கூடாதாம்.

ஜாதி ஏன் அழிக்கப்படவேண்டும்? என்று அன் றைக்கு எழுதினார் அம்பேத்கர் அவர்கள். 1932 இல் அது நிகழ்த்தப்படாத உரை. அதனை வாங்கி தமிழில் அச்சடித்து, அன்றைக்கு அம்பேத்கருடைய பெயர் தமிழ்நாட்டில் தெரியாது - அதை நிலைநாட்டிய பெருமை தந்தை பெரியாரை சாரும். ஜாதியை ஒழிக்க வழி'' என்ற தலைப்பில் சிறிய நூலாக வெளியிட்டார், விலை நாலணா.

தந்தை பெரியாரும், அம்பேத்கரும் ஒருவருக் கொருவர் சந்திக்காமலேயே கொள்கை ரீதியாக நண்பர்கள். அதற்குப் பிறகுதான் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள்.

இரண்டு பேருடைய கருத்துகளும் மிகவும் ஆழமானவை. ஜாதிக்கு மூலாதாரமான வேர் எங்கே இருக்கிறது. வேரை விட்டுவிட்டு, கிளையை, இலையை வெட்டுவதில் என்ன லாபம்  என்று நினைத்தார்கள். நோய் நாடி, நோய் முதல் நாடுதல்.

1924 இல் சேரன்மாதேவி குருகுலம் நடக்கிறது. நம்மைப் போன்றவர்கள் பிறக்காத ஒரு காலகட்டத்தில்.

வ.வே.சு.அய்யர் அவர்கள் இங்கிலாந்திற்குச் சென் றெல்லாம் புரட்சி செய்துவிட்டு வந்தவர். அப்படிப்பட்ட புரட்சி வீரர், தேசிய குருகுலம் நடத்தினார். பார்ப்பன மாணவர்களுக்கு தனி சாப்பாடு; நம்முடைய மாணவர் களுக்கு திண்ணையில் பழைய சோறுதான்.

நயினா, நயினா எங்களையெல்லாம் கேவலப்படுத்துகிறார்கள்''

இதையெல்லாம் பார்த்துவிட்டு, ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியாருடைய அண்ணார் மகன், அழுதுகொண்டே வந்து, நயினா, நயினா எங்களையெல்லாம் கேவலப் படுத்துகிறார்கள்'' என்றார்.

இதைப்பற்றி யாரிடம் சொல்வது? பெரியாரிடம் சொல்லுங்கள் என்றார்.

இராஜகோபாலாச்சாரியாரிடம் சென்று, என்னங்க, நாமெல்லாம் தேசியம்பற்றி பேசுகிறோம்; நாம் பணம் கொடுக்கிறோம்; இதுபோன்று நடக்கிறதே?'' என்று சொல்ல,

உடனே இராஜாஜி, அப்படியெல்லாம் இருக்குமா? என்று தெரியவில்லை. அதுபற்றி விசாரிப்போம்'' என்றார்.

அந்தப் பிரச்சினையால் பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதார் கோடு விழுந்துவிட்டது.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத பிரச்சினையை வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை, பெரியாரோ, திராவிடர் இயக்கமோ உண்டாக்கவில்லை. முழுக்க முழுக்க வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று. அதுதான் அந்தப் பேதத்தை உருவாக்கியது.

நாங்கள் ஒத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் ஒத்துப் போவதில்லையே. படித்தவன், படிக்காதவன், லவுகீக பார்ப்பான், வைதீகப் பார்ப்பான் என்று வித்தியாசம் இருக்கும். அதிலேயும் இரண்டு தலைவர்களுக்கும் வேறு வேறு கருத்து. அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கடைசியாக சமரசம் செய்வதற்காக  தேசப் பிதா காந்தியாரிடம் செல்கிறது.

பெரியாரைவிட மிகக் கடுமையாக இருந்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் மென்மையானவர். காந்தியாரிடம் போய் சொன்னார்கள்,

காந்தி, வருணாசிரம தர்மத்தில் நம்பிக்கைக் கொண்டவர். எப்பொழுது அதை தவறு என்று நினைத் தார் என்றால், கடைசி காலத்தில்தான்.

அதனால்தான் பெரியார் சொன்னார், வாழ்ந்த காந்தி வேறு; சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி வேறு. இரண்டு காந்திகள். காரணம் பின்னாளில்தான் அவர் பார்ப்பனர்களைப்பற்றி உணர்ந்தார் என்று.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் தகராறு ஏற்பட்டு, கடைசியாக காந்தியாரிடம் சென்றது.

இந்து' பத்திரிகையின் நூற்றாண்டு மலர்

இன்றைய இளைய தலைமுறையினரும், தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் - என்னுடைய கைகளில் இருக்கின்ற ஆதாரம், One hundred years of the Hindu இந்து' பத்திரி கையினுடைய நூற்றாண்டு மலர் இது. இப்பொழுது அதற்கு வயது 140. பெரியாருடைய வயதும், இந்து நாளித ழுனுடைய வயதும் ஒன்று.

40 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட புத்தகம் இது. இதை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பி நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதில் உள்ள ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்கிறேன்.

A Social reform question which figured in the columns of The Hindu in April, 1925, was the controversy over the functioning of the Tamil Gurukula Vidyalaya at Shermadevi  in Tinnevelly District conducted by V.V.S.Aiyer, onetime revolutionary and associate of Bharati. Dr.Varadarajulu Naidu and other non-Brahmin leaders had objected to non-Brahmin boys of the institution being asked to take their meals separately. The matter went to Gandhiji who advised interdining but employment of Brahmin cooks. Dr.Varadarajulu Naidu was not satisfied with this arrangement as he did not like the condition about employing Brahmin cooks. He asked for the return of money subscribed to the funds of the Gurukula.
In a letter published in The Hindu on April 15,  V.V.S. Aiyer said, that except in the case of two Brahmin boys in the case of all other Brahmin and non-Brahmin students there was common dining, and the made it clear that no Brahmin taken into the Gurukula thereafter would be given any exemption from the general mess

இதன் தமிழாக்கம் வருமாறு:

சமூகப் புரட்சியின் ஒரு குரலாக ஏப்ரல் மாதம் 1925 இந்து ஆங்கில இதழில் வெளியான ஒரு செய்தி முக்கியமானதாகவும் விவாதப்பொருளாகவும் மாறியது, சேரன்மாதேவியில் உள்ள தமிழ் குருகுல வித்யாலயா என்ற பள்ளியில் ஒரு தீண்டாமை கொடுமை அரங்கேறியது தொடர்பான செய்தியாகும். அந்த பள்ளியை நடத்தியவர் வ.வே.சு அய்யர்   இதன் புரவலராக சுப்பிரமணிய பாரதி, டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர் உள்ளனர். அந்தப் பள்ளியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு வெளியில் உள்ள திண்ணையில் வைத்து அவர்கள் கொண்டுவந்த இலையிலேயே உணவு உண்ணவும், அவர்களுக்கு பார்ப்பனர்கள் பரிமாறாமல் அவர்களே உணவை எடுத்துக் கொள்ளவும் கூறப்பட்டனர். அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி அறையில், பார்ப்பனர்களால் சுவையான உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பாக காந்தியாரிடம் புகார் கூறப்பட்டது, உடனடியாக காந்தியார் பள்ளிக்குக் கொடுத்த நிதியை திருப்பிக் கொடுக்குமாறு கூறினார். இதற்கு விளக்கமளித்த வ.வே. சுவாமிநாத அய்யர், சில காரணங்களுக்காக இரண்டு பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமே தனியாக உணவு படைக்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட நாளில் மட்டும்தான். மற்றபடி பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றாகவே ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்டு வருகின்றனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

காந்தியாருடைய சமரசம் தோல்வி

இந்தப் பிரச்சினை காந்தியாரிடம் சமாதானத்திற்காக வந்தது.

அப்பொழுது காந்தியார் என்ன சொல்கிறார் என்றால்,

அங்கேயும் ஜாதியைத்தானே கொண்டு வருகிறீர்கள். நான் ஒத்துக்கொள்ள முடியாது என்றார். இந்தத் தகராறு தீரவில்லை. காந்தியாருடைய சமரசமே தோல்வி அடைந்துவிட்டது.

Speaking at the public meeting at salem E.V.Ramasamy Naicker said, they must settle the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called ‘‘Brahmnocracy''.

இதன் தமிழாக்கம் வருமாறு:

இது தொடர்பாக சேலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசும் போது, பார்ப்பனர்களின் ஆதிக்கம் மோசமானது, ஆங்கிலே யர்களின் அரசாங்கம் முடிவதற்குள் பார்ப்பனர்களின் அதிகாரத்தை அடக்கவேண்டும். இல்லையென்றால். ஆங்கிலேயர்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் சுதந்திரம் குடியரசாக இருக்காது  -டெமோக்கரசி அது பார்ப்பனரின் ஆதிக்கம் அதாவது பிராமினோகரசியாக இருக்கும் என்று எச்சரித்தார்.

Brahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார் பெரியார்

பெரியார் திண்ணைப் பள்ளிக்கூடம்தான் போனவர். இங்கிலீசு மொழிக்கே ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து என்பதுதான் மிக முக்கியம். இதுவரையில் நாம் Aristocracy, Democracy என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். பெரியாருடைய சிந்தனை பாருங்கள், Brahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார்.

Democracy-க்கு என்ன  விளக்கம்? A Government of the People; for the People; by the People என்பதுதான்.

Brahmnocracy-க்கு  என்ன  விளக்கம்? A Government of the Brahmins; for the Brahmins; by the Brahminsஎன்பதுதான்.

சுதந்திரம் வந்ததும் இதே நிலைதான். இவனிடமிருந்த அதிகாரம் அவனிடம் சென்றிருக்கிறது. அவனாவது கொஞ்சம் நியாயமாக நடப்பவன். ஆனால், அவனைவிட இவன் மோசமானவனாயிற்றே. எதற்கோ பயந்துகொண்டு, எதிலோ காலை வைத்ததுபோல ஆகிவிட்டதே என்று சொன்னார்.

இன்றைக்கு என்ன சூழல்? என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

நம்முடைய போராட்டம் முடிந்து போய்விடவில்லை!

எனவேதான், ஜாதி ஒழிப்பு என்பது இருக்கிறதே - இன்னமும் ஜாதிப் பிரச்சினைகள் வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதினுடைய நோக்கம் நண்பர்களே, போரா டித் தீரவேண்டும் நாம். நம்முடைய போராட்டம் முடிந்து போய்விடவில்லை.

கடைசியாக ஒன்று,

விரக்தியோ அல்லது தோல்வியே தேவையில்லை. நாம் இவ்வளவு போராடியும் ஆணவக் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன; இன்னமும் ஜாதி வெறி இருக்கிறது. இன்னுங்கேட்டால், ஆணவக் கொலையை செய்கிறார்கள் பாருங்கள், பெற்றோர்கள், அவர்களே ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் ஒரு ஜாதியிலிருந்து, இன்னொரு ஜாதியில் திருமணம் செய்துகொண்டவர்கள்தான். அப்பன் ஜாதியை மனதில் வைத்துக்கொண்டு, ஆணாதிக்க சிந்த னையுடன் செயல்படுகிறார்கள்.

நம்முடைய செய்தியாளர்கள்கூட என்னிடம் அடிக் கடி இதுபற்றி கேட்பார்கள்.

என்னங்க, பெரியார் ஜாதியை ஒழிப்பதற்காக எவ்வளவோ பாடுபட்டார். ஆனால், இன்றைக்கும் ஆணவக் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றனவே என்று.

உண்மைதான். அதற்காக நாங்கள் வெட்கப்படு கின்றோம். ஆனால், ஜாதி என்பது 5,000 ஆண்டு காலத்திற்கும் மேற்பட்டது. மனுதர்மத்தினுடைய வரலாறு என்ன? இராமாயணத்தை ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்? ஏன் கீதையைத் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள்?

இராமகோபாலனுக்கு  கலைஞர் கொடுத்த கீதையின் மறுபக்கம்'' நூல்!

தயவு செய்து கீதையின் மறுபக்கம் புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படியுங்கள். அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் அவர்கள், இந்தப் புத்தகத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதற்காக,

திடீரென்று ஒரு நாள் இந்து முன்னணி சார்பில், இராமகோபாலன் அவர்கள் கலைஞரை சந்திக்க வருகிறார் என்கிற தகவல் வந்தவுடன், தி.மு.க. தோழர்கள் கலைஞர் அவர்களின் இல்லம் அருகே திரண்டு விட்டனர்.

உடனே கலைஞர் அவர்கள், அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று சொன்னார்.

அன்றைக்குக் கலைஞரோடு இருந்தவர் இதோ இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் ஆ.இராசா அவர்கள்தான்.

கலைஞரைப் பார்க்கச் சென்ற இராம.கோபாலன் அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார் கலைஞர் அவர்கள்.

என்னங்க விஷயம் என்று கலைஞர் அவர்கள் கேட்க, இராம.கோபாலன் அவர்கள், ஒரு புத்தகம் கொடுக்க வந்தேன் என்று சொன்னார்.

இராமகோபாலன் அவர்கள், பகவத் கீதை புத்தகத்தை கலைஞரிடம் கொடுத்தார்.

கீதையின் மறுபக்கம் நூலுக்கு மறுப்பு எழுத முடியுமா?

கலைஞர் அவர்கள், நான் ஏற்கெனவே இந்தப்  புத்தகத்தைப் படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கிறேன். உங்களுக்கு நான் ஒரு புத்தகத்தைக் கொடுக்கிறேன். இந்தப் புத்தகத்தை வீரமணி அவர்கள் எழுதியிருக்கிறார் என்று சொல்லி, கீதையின் மறுபக்கம்'' புத்தகத்தை இராம.கோபாலன் அவர்களிடம் கொடுத்து, இதைப் படியுங்கள் என்று சொல்லிவிட்டு, வீரமணி அவர்கள் தவறாக எழுதியிருந்தால்,  இதற்கு மறுப்பு எழுத முடியுமா? என்று பாருங்கள் என்று சொன்னார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். இன்னமும் அந்த நூலுக்கு மறுப்பு வரவில்லை. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் நண் பர்களே, கீதையைப்பற்றிப் பேசுகிறவர்கள், அதை மேற்கோள்காட்டி பேசுகிறவர்கள், அதிலுள்ள 700 சுலோகங்களையும் படித்தார்கள் என்று சொல்ல முடியாது.

கீதையில் சொல்லியுள்ளபடி, ஏன் போர் செய்ய வேண்டும் என்று சொன்னால், நம்முடைய ஜாதி, நம்முடைய பெண்களை, வர்ணத்தைக் காப்பாற்ற வேண்டும். அப்படியில்லாமல், வர்ணக் கலப்பு ஏற்பட்டால், சுதர்மம் போய்விடும். அதற்காக நீ பலனை எதிர்பார்க்காமல், உன் கடமையைச் செய்! என்று சொல்கிறான் கிருஷ்ணன்.

அந்த இடத்திற்குப் பயன்பட்ட வார்த்தைதான் பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்!'' என்று சொன்னது.

இது புரியாமல் நம்மாட்கள், பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்!'' என்று சொல்கிறார்கள். பொருளாதார சிந்தனை உள்ள யாரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

பலனை எதிர்பார்க்காமல், நீ வியாபாரத்தை செய் என்று சொல்வார்களா? அல்லது பயனை எதிர்பார்க் காமல், நீ படித்துக் கொண்டே இரு! தேர்வு ஆகிறாயோ, இல்லையோ என்று சொன்னால், அப்படி இருக்க முடியுமா?

அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இதுதான் தேசிய நூலாம்! இராமன் கோவில் கட்டுவோம் என்கிறார்கள். ஜாதியைக் காப்பாற்ற, வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற இதுதான் அடிப்படை.

ஜாதிக்கு ஆதாரமாக உள்ளவை அழியவேண்டும்!

ஆகவேதான் நண்பர்களே, உங்களை அன் போடு கேட்டுக்கொள்வது, ஜாதி ஒழிப்பு என்று சொல்லும் பொழுது, ஜாதிக்கு எது எது ஆதாரமோ, எந்தப் பண்டிகை ஆதாரமோ, எந்த நூல் ஆதாரமோ, எந்த விழா ஆதாரமோ, எந்தக் கருத்து ஆதாரமோ அவையெல்லாம் அழியவேண்டும்.

கம்ப இராமாயணத்தில் எழுதியிருக்கிறாரே கம்பன்,

கரிய மாலினும் கண்ணுத லானினும் உரிய தாமரை மேலுறை வானிலும் விரியும் பூதமோரைந்தினும் மெங்கும்''

என்னும் பாட்டில், கம்பன் சொல்கிறான்,

பிராமணர்களை வணங்கவேண்டும். காரணம்,  இராமன் பிராமணர்களைத்தான் வணங்கினான். பஞ்ச பூதங்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் பிராமணர்கள்தான். ஆகவே, பார்ப்பனீய ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner