எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மண்ணோடும் தமிழ் மணத்தோடும் தமிழர் வரலாற்றில் உதித்த மாபெரும் தலைவர். எண்பது ஆண்டுகள் பொது வாழ்வில் பணி, அறுபது ஆண்டுகள் வெற்றிகரமாக சட்ட மன்ற உறப்பினராக பணி, அய்ம்பது ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக பணி, தமிழகத்தின் முதல்வராக அய்ந்து முறை பணி, முரசொலி ஏட்டின் ஆசிரியர் பணி, திரைப்படம் மற்றும் நாடக உலகில் கலைப்பணி, என்றும் இலக்கியப் பணி என சுழன்று பணியாற்றியவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் கருணாநிதி. அவர் தனது இயற்கையின் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார்.

குறள் காட்டும் அமுதென வள்ளுவர் கோட்டம், குமரியில் வான்புகழ் கொண்ட ஒரு வள்ளுவர் சிலை மற்றும் இனிதாய் படித்திட ஒரு குறளோவியம் என்று திருக்குறளைப் போற்றி, திருவள்ளுவர் மாண்பினை பறை சாற்றியவர். தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்க காரணமாகி நின்று, “செம்மொழி” மாநாடு எடுத்து மகிழ்ந்தவர். தொல்காப்பியம் புகழ் பாட ஒரு பூங்கா அமைத்தவர்.

தந்தைப் பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா மீது பேரன்பு கொண்டு அவர்களின் கொள்கைகளை தமிழகத்தில் கட்டமைத்தவர். தனது ஆட்சிப் பணியில் மக்கள் பயன்பெறும் பல்வேறு சட்ட வரைவுகளை கொண்டு வந்து தமிழ்நாடு வளம் பெற உழைத்தவர். தமிழின் மேல் மாறாப்பற்று கொண்டிருந்த காரணத்தால், தான் பணியாற்றிய திரைத்துறையில் எளியோரும் புரிந்து கொண்டாட இலக்கிய தமிழை, திரை வசன தமிழாக மாற்றியவர். சொற்கள் உணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல அது சிந்தனையின் வெளிப்பாடு, நெறிகளின் வழிப்பாடு என்று உணர்ந்த கரணத்தினால் இவரது நூல்கள் அனைத்தும் உயரிய தத்துவத்தை, சமூக நீதியினை வெளிபடுத்தும் விதமாக மக்களையும் சென்று கவர்ந்தது.

தமிழில் புதிய கலைச் சொற்கள், நடைமுறைச் சொற்கள் உருவாக்கத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். “மாற்றுத்திறனாளி, கைம்பெண், திருநங்கை” போன்ற இன்று வழக்குத் தமிழில் பயன்படுத்தும் மரியாதையை வெளிப்படுத்தும் சொற்களுக்கு சொந்தக்காரர். எளிய குடும்ப பின்னணியில் பிறந்து தமது உழைப்பினால் உயர்ந்து பல்வேறு தரப்பினருக்கும் ஒரு உந்து சக்தியாக விளங்கியவர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி. இன்று அவர் இழப்பால் துயர் கொண்டு வாடும் அனைத்து தமிழர்களுக்கும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner