எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை 8ஆம் நாள் மாநாடு என்று அறிவித்த நாளிலிருந்து மட்டுமல்ல... இந்த மாநாட்டுக்கு அனுமதி கேட்டு, அறிவித்து நடத்துவதற்கே அத்தனை காலம் எடுத்துக் கொண்டோம்.

சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களை, இன்னும் வீரியமாகச் சுழலவைப்பதிலும், அவர்களுக்கு ஊக்கமாகவும், முன்னோடியாகவும் தானே முன்னிற்பதிலும் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்துத் தந்த தலைமையாம் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனித்தன்மையானவர். எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் இயங்கும் தோழர்களை சலிப்பின்றி இயக்கும் ஆற்றல் - ஆசிரியர்!

மாநாட்டை நடத்துவது கடினமான வேலை ஒன்றுமில்லை. மாநாடுகளை நடத்துவது பெரியார் தொண்டர்களுக்கு மிக எளிமையான வேலை.  ஒரே வாரத்தில் மாநாட்டை அறிவித்து, எத்தனையோ பதிலடி மாநாடுகளை நாம் வெற்றிகரமாக்கிக் காட்டியுள்ளோம். பார்ப்பனர் சங்க மாநாட்டுக்கு பதிலடியாக அதே ஊரில், வி.ஹெச்.பி, இந்துமுன்னணி வகையறா மாநாடுகளுக்கு பதிலடியாக அதே மைதானத்தில், தருமபுரி ஜாதி வன்முறைகளுக்குப் பதிலடியாக அதே மண்ணில்... இப்படி ஏராளம்... ஏராளம்!

ஆனால், திராவிட மாணவர் கழகத்தினராகிய நாங்கள் மாநில மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்க எடுத்துக் கொண்ட காலம் ஏறத்தாழ 2.5 ஆண்டுகள். இயக்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்றாலே மிகப் பெரிய மாநாடுகளை நடத்தி விடலாம். இந்த இடைவெளியிலேயே எண்ணற்ற மாநாடுகளை திராவிட மாணவர் கழகமே பல்வேறு தலைப்புகளில் நடத்தியிருக்கிறது. பல்வேறு போராட் டங்களை, கருத்தரங்குகளை, மண்டல மாநாடுகளைக் கூட நடத்தியிருக்கிறது.

திராவிடர் கழக இளைஞரணி மண்டலந்தோறும் மாநாடுகளை நடத்தியிருக்கிறது. திராவிடர் கழகம் மண்டல மாநாடுகளை நடத்தியிருக்கிறது. திராவிட மகளிர் பாசறை மூன்று முறை முக்கியமான மாநாடுகளை நடத்தியிருக்கிறது. மாபெரும் மாநில மாநாட்டை திராவிடர் கழகம் சிறுகனூரில் நடத்திக் காட்டியது. எனவே, திராவிட மாணவர் கழகம் மாநாடு நடத்துவது பெரிய விசயமொன்றுமில்லை.

ஆனாலும் எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட இலக்கு - அனைத்து மாவட்டங்களிலும் இயக்கத்திற்கு முற்றிலும் புதிய தலைமுறையினரைப் பெருமளவில் இணைத்து, மாணவர் கழகத்தை மாவட்டந்தோறும், நகரந்தோறும் கட்டமைப்புச் செய்தல். அதை எட்டியபின் தான் மாநில மாநாடு!

எங்களோடு பயணிக்க, எங்களை நெறிப்படுத்த, ஊக்கமூட்ட, சோர்வுறாமல் எங்களை இழுத்துச் செல்ல வென்றே தனிப் பொறுப்புகளை உருவாக்கி இயக்கினார் தமிழர் தலைவர். திராவிட மாணவர் கழகத்தின் மேனாள் செயல் தலைவர், பெரியாரியல் மாணவர் என்ற வகையில் எந்நாளும் அதன் தளகர்த்தரன்றோ!

அவர் காட்டிய வழியில், இதோ எங்கள் இலக்கை எட்டியிருக்கிறோம். எப்படி? 'சந்திப்போம்  சிந்திப்போம்' என்ற தொடர் நிகழ்ச்சி மூலமாக, போராட்டக் களத்திற்கு மாணவர்களைத் திரட்டியதன் வாயிலாக, கிராமம் கிராமமாக மாணவர்களிடம் நேரடியாக உரையாடியதன் வழியாக, மண்டலந்தோறும் பயிற்சிப் பட்டறைகளில் பட்டை தீட்டியதன் விளைவாக! இடைவிடாத தொடர் பிரச்சாரத்தின் விளைச்சலாக!

பூரிப்போடும், மனநிறைவோடும் வரலாற்றுச் சிறப்புமிக்க திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழாவையும், மாநில மாநாட்டையும் ஒருங்கே அறிவித்து, கலந்துரையாடி, வீதி வீதியாக நிதி திரட்டி, அனைவரையும் ஓரிடத்தில் கூட்டி, திராவிடர் கழகத்தின் அத்தனை அணிகளின், அத்தனைபொறுப்பாளர்களின் முழுமையான ஒத்துழைப்போடும், கட்டுப்பாடு மிக்க பட்டாளம் இது என்பதை நிறுவி, வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.

ஓர் இலக்கைத் தொடுவது நிறைவல்ல... அடுத்த இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்கான அடையாளம்.

இலக்கைக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்! எட்டிப் பிடிப்போம் மாணவர் கழகத்தினர்! பள்ளிகள் தோறும், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் தோறும் திராவிட மாணவர் கழகங்கள்!

திராவிட மாணவர் போராட்ட நாளாக டிசம்பர் முதல் நாளை அறிவித்திருக்கிறார் தமிழர் தலைவர்! கல்வியை மீட்கும் போராட்டத்தில் களம் காண்போம்! பவள விழாவை மாணவர் விழாவாக இவ்வாண்டு முழுதும் எடுப்போம்! சூழவிருக்கும் காவி இருளைக் கிழித்து ஈரோட்டுக் கிழக்கின் ஒளி தொடுப்போம்!

- பிரின்சு என்னாரெசு பெரியார்,

மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner