எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடந்தை, ஏப். 15 பெரியாரை சுவாசிப்போம், பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் சூலை எட் டாம் தேதி குடந்தையில் நடைபெறும், திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டம் 11.4.2018 அன்று மாலை 6.30 மணிக்கு குடந்தை பெரியார் மாளிகையில் எழுச்சியோடு நடை பெற்றது.

கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அவரது உரை வருமாறு

இந்த கலந்துரையாடல் கூட்டம் ஏன் கூட்டப்பட்டுள்ளது என்பது பற்றி அனைவரும் விளக்கமாக எடுத்து கூறினீர் கள். திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு மே-6 பொன்னேரியிலும், மே -29 அன்று பட்டுக்கோட்டையிலும் இளைஞர் எழுச்சி மாநாடு களை நடத்த வேண்டும் என்றும், குடந்தையில் சூலை -8ஆம் தேதி பெரியாரை சுவாசிப்போம்! பெருவாழ்வு பெறுவோம் என்ற முழக்கத்தையும் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநாட்டையும் மிகப்பெரிய அளவிற்கு நடத்த வேண்டும் என்று நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்துள்ளார். ஏன் இந்த மாநாட்டை குடந்தையில் நடத்த உள்ளோம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம் இயக்கம் கிளர்ச்சியில் தோன்றி  எதிரிகளின் எதிர்ப்பால் வளர்ந்த இயக்கம். எப்படி என் றால் 1943-ஆம் ஆண்டு அதாவது 75 ஆண்டுகளுக்கு முன்பு, இதே குடந்தையில் இப்போது உள்ள அரசினர் கலைக் கல்லூரியில் பார்ப்பன மாணவருக்கு தனித் தண்ணீர்ப் பானை, சூத்திர பஞ்சமர்களுக்குத் தனித் தண்ணீர்ப் பானை என்பதை எதிர்த்து பானையை போட்டு உடைத்து, அதன் விளைவாக பிறந்ததுதான் திராவிட மாணவர் கழகம். அதாவது தாய் பிறப்பதற்கு முன் மகன் பிறந்துவிட்டான் என்பது போல, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் 1944 ஆம் ஆண்டு தான் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில்  திராவிடர் கழகம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

அங்கே மாணவர்களாக இருந்த நமது இயக்க முன் னோடிகள் எஸ்.தவமணிராசன், கவிஞர் கருணானந்தம், ஜி.இலட்சுமணன், (பின்னாளில் மக்களவைத் துணைத் தலைவர்) செங்குட்டுவன் (பூண்டி கோபால்சாமி) போன்ற வர்கள்.

அதையொட்டி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டது. அதில் பேராசிரியர் க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், கே.ஏ.மதியழகன், டாக்டர் மா.நன்னன் இப்படி பல பேரை  உருவாக்கியது தான் நம்முடைய மாணவர் கழகம்.

நம் மாணவர் கழகம் மற்ற அமைப்புகள் போல அலங் கார பொம்மைகள் அல்ல;  நம்முடைய மாணவர்கள் எதிர்கால சமூகநீதி உலகை படைக்கும் புரட்சி விதைகள். நம் மாணவர் கழகம் ஆற்றிய பணிகள் அளப்பரியது. தடைகளை தாண்டிய தமிழர்களின் கல்வி பயணத்தில் தவிர்க்க முடியாத ஒளிச்சுடர்கள்.  1950இ-ல் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காப்பியமாக விளங்கிய கம்யூனல் (ஜி.ஓ) ரத்து செய்யப்பட்ட போது கொதித்து எழுந்து இந் திய அரசியல் சட்டம் திருத்தம் செய்து அதை பெற வழி செய்த ஒப்பற்ற இயக்கம்.

ராஜாகோபாலச்சாரியார் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தபோது அதை முறியடித்த இயக்கம்.

1990-இல் ஒடுக்கப்பட்ட மக்கள் அகில இந்திய அரசு பணிகளுக்கு செல்ல காரணமாக விளங்கிய மண்டல் குழு அறிக்கையை ஆரிய சக்திகள் புதைக்க நினைத்த போது வீறுகொண்டு எழுந்து அந்த அறிக்கையை அகில இந்திய தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சட்டமாக்கியதில் நம் மாணவர் கழகத்தின் பங்கு பிரமிக்ககூடியதாகும்.

நம் தலைவர் நம் மாணவர்களிடம் உங்கள் காதலியிடம் பேசும் போதும் கூட மண்டல் குழு அறிக்கையை பற்றி பேசுங்கள் என்று கூறினார்.

2003-இல் திருச்சியில் விசுவ இந்து பரிஷத் இளைஞர் மாநாட்டை நடத்தி நச்சு விதையை தூவ  முயற்சித்த போது அதை முறியடித்து, மிகப்பெரிய எழுச்சியுடன் நடத்தியது. திராவிட மாணவர் எழுச்சி மாநாட்டினை நடத்தியது. இதன்மூலம் நம்முடைய மாணவர் கழகம் மிகப்பெரிய அளவில் இந்தியா அளவில் பேசப்பட்டது. ஏறத்தாழ 60 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த மாநாடு பேரணியில் நம் மாணவர்கள், கைத்தடி இங்கே? சூலாயுதம் எங்கே?' என்று எழுப்பிய முழக்கங்கள் அகில இந்திய தலைவர்கள் வி.பி.சிங், சந்திரஜித் யாதவ் போன்ற வடநாட்டு தலைவர்களையே வியப்படைய செய் தது. இதன் விளைவாக பீகாரில் லாலு பிரசாத் அவர்கள் தம்முடைய இளைஞர்களுக்கு கைத்தடி வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அத்தகைய மாநாட்டிற்கு உறுதுணையாக இருந்த வர்களான அன்றைய துணைப் பொதுச்செயலாளர் துரை. சக்கரவர்த்தி, அன்றைய உதவிப் பொதுச்செயலாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், அன்றைய மாநில இளைஞரணிச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சுழன்றடித்து அந்த மாநாட்டிலும் தஞ்சை மண்டலத் தோழர்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்தது. அதுபோலவேதான் இந்த பவள விழா மாநாட்டினையும் நடத்திட வேண்டும்.

நீட் தேர்வு

சமூகநீதிக்கு எப்பொழுது எல்லாம் ஆபத்து வருகிறதோ அப்பொழுதுயெல்லாம் நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள் தான் முதல் குரல் கொடுப்பார்கள். அப்படி தமிழகத்தில் புதியதாக நீட் என்ற பெயரில் நம்முடைய தமிழக மாணவர்களின் கனவை சிதைத்து உள்ளனர்.  நாம் போராடி பெற்ற சமூகநீதிக்கான உரிமைக் கொடியை ஏற்றி யது தமிழ்நாடுதான் - திராவிடர் இயக்கம் தான். சமூக நீதிக்கு ஆபத்து வரும் பொழுதுயெல்லாம் தோளுயர்த்திப் போராடி, சமூக நீதியைப் பாதுகாத்துக் கொடுத்த திராவிடர் இயக்கத்தின் வரலாறு முதன்மையானது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அமைப்பினரும், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் தொடர்ந்து போராட்ட களத்தில் இறங்கி போராடி வருகிறோம்.

மத்திய அரசு நீதிமன்றங்கள் கூறுவதை எதையும் ஏற் காது. மக்களின் நிலையை ஏற்காது.  அவர்களின் கொள்கை எல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத அமைப்பின் கோட்பாடுகளை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது. நீட் தேர்வில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேட்ட 6 கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. அந்த ஆறு வினாக்களுக்கு விடை கண்டால் போதும். நீட் தேர்வைப்பற்றி குழப்பத்தில் இருப்பவர்கள், நீட் தேர்வுதான் தேவை என்று சொல்லக்கூடிய மத்திய ஆட்சி யாளர்கள் அல்லது அதிலே பிடிவாதமாக இருக்கக் கூடி யவர்கள் இதிலே உயர்நீதிமன்றத்தினுடைய தேர்வுபெற்ற நீதியரசர்கள், மதுரை கிளை நீட் தேர்வு தொடர்பான வழக்கில் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு எழுப்பியுள்ள ஆறு முக்கிய வினாக்கள்:  1. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

2. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாதற்கான காரணம் என்ன?

3. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்வி கள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன?

4. கல்வித்தரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

5. கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையில் கல்வித்தரம் வேறுபடும் போது அனைவரும் சி.பி.எஸ்.இ தேர்வை எப்படி எதிர்கொள்ளமுடியும்?

6. மாநில மொழிகளில் உள்ள வினாத்தாளுக்கும், இந்தி, ஆங்கிலம் மொழியில் உள்ள வினாத்தாளுக்கும் வேறுபாடு எப்படி வந்தது ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை. அதைத்தான் நாம் எல்லா இடங்களிலும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் கேட்டார்கள் கேள்வி ஒன்று, இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி? இந்த கேள்விக்கு விடை கொடுக்கவேண்டும் அல்லவா? இல்லை நீட் தேர்வுதான் தேவை அதுதான் அறிவுக்கு, தகுதிக்கு, திறமைக்கு எடுத்துக்காட்டு என்று வாதாடக் கூடியவர்கள் பதில் சொல்லவேண்டும்.

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கருத்தரங்கம், இரு சக்கர வாகன பேரணி, மாநாடுகள் என்று தொடர்ந்து செய்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் நம்முடைய ஆசிரியர் அறிவுறுத்தலின்படி சமூகநீதி பாது காப்பு பேரவை என்று அனைத்து மாணவர்கள் அமைப் புகளையும் இணைத்து மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதன் நீட்சியாக இந்தியா தலைநகரம் டில்லியில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி ஜந்தர் மந்தர் பகுதி யில் நடத்தினோம். இதில் அனைத்து கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மாணவர் கள் கலந்து கொண்டனர்.

அப்பொழுது தான் தெரிகிறது தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் மத்திய பி.ஜே.பி. அரசால் பாதிக்கப் பட்டவர்கள்  என்றால் இந்தியாவே போராடுவது போல அவ்வளவு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் நடை பெற்று வருகின்றன.

நம் கல்வித்துறை இன்று மிகவும் ஆபத்தான நிலையில் சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பல்கலைக் கழகங்களை காவிமயம் ஆக்குவதில் முனைப்போடு நடை பெறுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெளி மாநிலத்திலிருந்து துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார்கள். ஏதோ ஒரு துணைவேந்தர் பதவி என்பது பணி மட்டும் அல்ல; அந்த பல்கலைக்கழகம், அதற்கு உட்பட்ட கல்லூரி கள் அனைத்திற்கும் பாடத்திட்டம் உருவாக்குதல், பேராசி ரியர் நியமனம், மாணவர் சேர்க்கை என அனைத்து அதி காரமும் உள்ள பதவி அது. இந்த நிலையை சமாளிக்க தத்துவ ரீதியாக நாம் மட்டுமே இருக்கிறோம். தற்போது ஆபத்தான செய்தி உலா வருகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசின் கட்டுபாட்டுக்கு  கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவது அதிர்ச்சி யளிக்ககூடிய செய்தியாகும். இவற்றையெல்லாம் முறி யடிக்க வேண்டியது நம்முடைய பணியாகும்.

1.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமி ழக விவசாயிகளின் வயிற்றில் நெருப்பை அள்ளி வீசும் வேலையை செய்து வரும் கருநாடகாவையும், மத்திய அரசை வெளியோற்ற வேண்டும்.

2. மறக்க முடியாத திருச்சி - சிறுகனூர் மாநாடு. திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகத் திடலில் நமது இயக்கம் சார்பில் 2016ஆம் ஆண்டு மார்ச் 19, 20 ஆகிய நாட்களில் நடைபெற்ற மாநாடுகளின் சிறப்பை இன்னமும் நம் கழகக் குடும்பத்தவர்களும், இயக்கத்திற்கு அப்பாற்பட்டு நம் மாநாட்டிற்கு வந்து பங்கேற்றனர். சூலை - 8 கும்பகோணம் திராவிட மாணவர் கழக மாநாடு என்று அனைத்து மாநாட்டிற்கு முக்கியமானது நன்கொடை வசூல் பணி தான். தோழர்கள் அதனை சிறப்பாக செய்வீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்முடைய இலக்கு வசூல்! வசூல்! தான் அதை மறந்து விடதீர்கள். உடனடியாக இப் பணியை தொடங்குங்கள், தொடங்குகள். முக்கியமாக கடை வீதி வசூல், முக்கிய பிரமுகர்கள், இயக்க ஆதர வாளர்களை அணுகி கேட்டால் போதும். நம் மாநாடு என்றால் அவசியம் தருவார்கள். மாநாட்டினை வெற்றிகர மாக நடத்தி வென்று காட்டுங்கள் என்று கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் உரையாற்றினார்

மாநாட்டின் ஏற்பாடுகளை விளக்கி மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற் றினார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராஜகிரி தங்கராசு, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் ச.அஜீதன், மாவட்ட கழக தலைவர் கு.கவுதமன், மாவட்டகழக செயலாளர் சு.துரைராசு, மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் நிம்மதி, மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திரிபுரசுந்தரி, மாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சு.குருசாமி, மாநகர தலைவர் வழக்கு ரைஞர் பீ.இரமேசு, செயலாளர் காமராசு, துணைத்தலைவர் மனோகர், குடந்தை ஒன்றிய கழக தலைவர் ஜில்ராசு, வலங்கைமான்ஒன்றிய கழக தலைவர் சந்திரவேலன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், பாபநாசம் ஒன்றிய தலைவர் த.பூவானந்தம், பெரியார் பெருந்தொண்டர் தமிழ்மணி, பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திராவிடன் கார்த்திக், மாவட்ட மாணவர் கழக தலைவர் நாக.செந்தமிழன், செயலாளர் அரவிந்தன், வின் சல்சியா, தஞ்சை மாவட்ட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டி, அமைப்பாளர் இரா.மணிகண்டன், தஞ்சை நகர மாணவர் கழக அமைப்பாளர், பொ.பகுத்தறிவு உள்ளிட் டோர் மாநாடு வெற்றி பெற கருத்துரை வழங்கினார். மாவட்ட இளைஞரணிதலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு தோழர்கள் விடுதலை சந்தா வழங்கியும், நன்கொடை அளித்தும், சால்வை, பயனாடை அணிவித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முன்னதாக மாநாடு நடைபெறும் அரங்கத்தையும், பேரணியுடன் மாலையில் நடைபெறும் இடத்தினையும் பார்வையிட்டு கழகப் பொதுச் செயலாளர் ஆலோசனை வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner