எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தால்தான் உருவானது

முதல் சட்டத் திருத்தம் உருவாக தந்தை பெரியார் போராடியதுபோல ‘நீட்’ பிரச்சினையிலும் போராடினால் நிச்சயம் வெற்றி கிட்டும்!

மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கருத்துரை

சென்னை, மார்ச் 10 இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரச மைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்படு வதற்குத் தந்தை பெரியார் தலைமையிலான போராட்டம் தான் வழி செய்தது. ‘நீட்’ பிரச்சினையிலும் ஒன்றுபட்டு நாம் போராடினால் வெற்றி கிடைக்கும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள்.

27.2.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலி லுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘நீட்’: அடுத்த கட்ட நகர்வு  என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தில்  நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

எனக்கு இங்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள்

அனைவருக்கும் வணக்கம். கூட்டம் 8.30 மணிக்கு முடியும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 20 மணித்துளி களிலிருந்து 25 மணித்துளிகள் வரை எனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் ஒரு முக்கியமான செய்தி என்ன வென்றால், எனக்கு இங்கு இரண்டு ஆசிரியர்கள் இருக் கிறார்கள். ஒன்று, திராவிடர் கழகத் தலைவர், விடுதலை நாளிதழின் ஆசிரியர்; அவருக்குப் பக்கத்தில் இருப்பவர் அய்யா ராஜன் அவர்கள், நான் சட்டக் கல்லூரியில் படிக் கும்பொழுது எனக்கு ஆசிரியர். ஆகவே, அவர்கள் இரு வரும் எனக்கு ஆசான்கள். நான் அவர்களுக்கு மாணவன்.

இங்கே கவிஞர் சொல்லியதைத்தான் நானும் சொல்லப் போகிறேன். மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டுமானால், பொது நுழைவுத் தேர்வு தேவை என்று சொல்கிறார்கள். அந்தப் பொது நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்கீழ் இருக்கும். இதுதான் நமக்கு இருக்கின்ற ஆட்சேபணை.

984 ஆம் ஆண்டிற்குமுன்...

இந்த நுழைவுத் தேர்வே வேண்டாம் என்று சொன்ன மாநிலம் தமிழ்நாடு. 1984 ஆம் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அது வர வேற்கப்பட்டது. ஏனென்றால், 1984 ஆம் ஆண்டிற்குமுன் மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்பது சாதாரண விஷயமல்ல. அப்பொழுதெல்லாம் தனியார் கல்லூரிகள் கிடையாது. அரசாங்கக் கல்லூரியில் சேரவேண்டும் என் றால், அய்.ஏ.எஸ்., அதிகாரிகளின் பிள்ளைகள், அமைச்சர் களின் பிள்ளைகள் போன்றவர்கள்தான் அதில் சேர முடியும். சாதாரண வீட்டுப் பிள்ளைகள் சேரமாட்டார்கள்.

பென்சிலில்தான்

மதிப்பெண் போடுவார்கள்

ராஜன் அய்யாவுக்குத் தெரியும் - நேர்காணல் அடிப் படையில்தான் இருக்கும்; பென்சிலில்தான் மதிப்பெண் போடுவார்கள். அப்படியென்றால், நேர்மை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத் தில், மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதுவும் வரவேற் கப்பட்டது. அதற்குப் பிறகுதான், சாதாரண குடும்பத்து மாணவர்கள், தியாகராஜனுடைய மகள் டாக்டரானார்.

அதாவது பிஸ்டூ மதிப்பெண்ணும் உண்டு; பொது நுழைவுத் தேர்வும் உண்டு. நாம் அதற்கு வைத்த பெயர், காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (டி.இ.டி). தமிழ்நாடு பாடத் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட தேர்வு அது.

பொது நுழைவுத் தேர்வை

ரத்து செய்து சட்டம்

10 ஆம் வகுப்புவரையில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள், 11 ஆம் வகுப்பை மாநில பாடத்திட்டத்தில் படிப்பார்கள். ஏனென்றால், அப்பொழுதுதான், பொது நுழைவுத் தேர்வில் அவர்கள் மதிப்பெண் பெற முடியும்.

அப்படி வரும்பொழுது, 1984 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொது நுழைவுத் தேர்வு, 2006 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களுடைய ஆட்சியில், பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏனென்றால், இந்தத் பொது நுழைவுத் தேர்விற்காக, பயிற்சி மய்யங்கள் நிறைய தொடங்கப்பட்டன. அது வியாபார மாக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய்வரையில் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சாதாரண அனிதாக்கள் அங்கே சேர்ந்து படிக்க முடியாது.

எல்லோருக்கும் ஒரே வாய்ப்பு இருந்தால்தானே, சமூக நீதி கிடைக்கும். பிறகுதான், ஒரு குழு அமைத்து, நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவெடுத்து, பிளஸ்டூ வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண்படி மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது.

10-டி என்கிற ஒரு பிரிவு

இப்படி இருக்கும்பொழுது, 2016 ஆம் ஆண்டு மெடிக்கல் கவுன்சில் ஆப் இண்டியாவில், 10-டி என்கிற ஒரு பிரிவை சேர்த்தார்கள். அந்தப் பிரிவின்கீழ்தான், நீட்டை கொண்டு வந்தார்கள். இனிமேல் இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது நுழை வுத் தேர்வின்மூலம்தான் என்று முடிவு செய்தார்கள்.

என்னுடைய கேள்வி என்னவென்றால், அதை நீங்கள் யோக்கியமாக கடைபிடித்தீர்களா? இல்லை என்பதுதான் என்னுடைய பதில்.

இதுபோன்ற நிலை, ஜிப்மரில் இல்லை, எய்ம்சில் இல்லை. பஞ்சாபில் இருக்கக்கூடிய போஸ்ட் கிராஜுவேசன் இன்ஸ்டிடியூப் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் போன்ற சில நிறுவனங்களுக்கு எதன் அடிப்படையில் விலக்குக் கொடுப்பீர்கள்?

8 கோடி மக்களின்

பிரதிநிதியாக இரண்டு சட்டம்

இரண்டவதாக, 1.2.2017 ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில், 8 கோடி மக்களின் பிரதிநிதியாக இரண்டு சட்டம் கொண்டுவருகிறார்கள் ஒருமனதாக. மெடிக்கல் கவுன்சில் ஆப் இண்டியாவில், 10-டி பிரிவின் கொண்டு வந்த நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்திற்குத் தேவையில்லை என்று.

இந்தியாவிலேயே அதிகமாக அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். காமராசர் காலத்திலேயே ஆறு மருத்துவக் கல்லூரிகள் உண்டு. மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில்கூட நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடையாது.

ஒரு ஆண்டுக்கு எம்.பி.பி.எஸ். கட்டணம்

15 ஆயிரம் ரூபாய்தான்

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஏழை, எளிய அனிதாக்கள் சேரலாம்; ஒரு ஆண்டுக்கு எம்.பி. பி.எஸ். கட்டணம் 15 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வந்ததினால், சாதாரண அனி தாக்களால் சேர முடியாது என்பதினால், 1.2.2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக இரண்டு சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் மத்திய அரசு ஒப்புதல் தராமல் இருக்கிறது.

தமிழ்நாட்டினுடைய உரிமை சம்மந்தப்பட்ட பிரச் சினை; சமூகநீதி சம்பந்தப்பட்ட பிரச்சினை; சுயமரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால், இங்கே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு எதுவும் கிடையாது. இதுதான் இப்பொழுது இருக்கக்கூடிய அடிப்படையான பிரச்சி னையாக இருக்கிறது.

‘‘நாங்களும் நீட்டை எதிர்க்கிறோம்’’ என்று சொல்கிறார்

ஓராண்டு ஆகிவிட்டது; தமிழக அமைச்சர் செங்கோட் டையனிடம் கேட்டால், ‘‘நாங்களும் நீட்டை எதிர்க்கிறோம்’’ என்று சொல்கிறார். என்னுடைய காதில் எப்படி விழுகிறது என்றால், ‘‘ஏற்கிறோம்’’ என்று கேட்கிறது.

ஏனென்றால், இவர் எதிர்க்கிறார் என்றால், எப்படி எதிர்க்கவேண்டும்; அருகிலுள்ள அய்தராபாத்தைப் பாருங் கள், சந்திரபாபுவை பாருங்கள் - எப்படி எதிர்க்கிறார்கள் தெரியுமா? அவர் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்திருக் கிறார். ஆனால், ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்டபொழுது, ஆந்திரம் - தெலங்கானா என்று பிரிந்த பொழுது, மாநில தலைமையகம் அமைப்பதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் கொடுக்கவில்லை என்பதற்காக, கூட்டணியை முறித்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறார். அவருக்கு இருப்பதோ 15 பேர்தான் எம்.பி.,க்களாக இருக் கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டை ஆட்சி செய்பவர் களுக்கோ 50 எம்.பி.,க்கள் உள்ளனர்.

50 எம்.பி.,க்களும் மாணவர்களோடு டில்லி வீதியில் இறங்கிப் போராடினால்...

ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு, சந்திர பாபு நாயுடு சொல்கிறார், நாடாளுமன்றத்தை முடக்குவேன் என்று சொல்கிறார். இங்கே தமிழ்நாட்டை ஆளுகின்ற வர்களுக்கு உள்ள 50 எம்.பி.,க்களும் மாணவர்களோடு டில்லி வீதியில் இறங்கிப் போராடினால், நீட் பிரச்சினையிலிருந்து நிச்சயமாக வெற்றி பெறுவோம் நாம். அவர் களைப் போராடுவதற்காக இறக்கவேண்டும், அதுதான் மிக முக்கியம்.

சந்திரபாபு நாயுடு மிரட்டியதும், அவரை ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள் என்கிறார்.

சரி, நான் அவசரப்பட்டு முடிவு எடுக்கவில்லை. ஆனால், நீங்கள் ஒப்புக்கொள்கின்றவரை எங்கள் எம்.பி.,க் கள் நாடாளுமன்றத்தை முடக்குவார்கள் என்கிறார். இது எங்களுடைய சுயமரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சினை; ஆந்திராவின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை என்கிறார்.

தமிழக அரசு, மத்திய அரசை அனுசரித்து சென்றால்கூட பரவாயில்லை; அடிமையாக ஏன் போகிறார்கள் என்பது தான் நமக்கு முன் உள்ள கேள்வி.

பொதுப் பட்டியல் அல்ல;

ஒத்திசைவுப் பட்டியல்

எதற்காக இந்த நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தார்கள்? நாடாளுமன்றப் பரிந்துரைக் குழு என்ன சொல்லிற்று என்றால், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ சேர்க்கைக்காக லட்சக்கணக்கில் பணம் பெறு கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். அரசு மருத்துவக் கல்லூரியில் பணம் வாங்குவதாக அவர்கள் குற்றம் சாட்டவில்லை.

அரசமைப்பு சட்டத்தில் மூன்று விதமான அதிகாரப் பகிர்வு இருக்கிறது.

1. மத்திய அரசாங்கம் சட்டம் போடுகிற பிரிவு

2. மாநில அரசாங்கம் சட்டம் போடுகிற பிரிவு

3. கன்கரண்ட் லிஸ்ட் இதை நாங்கள் எல்லாம் பொதுப் பட்டியல் என்றோம். ஆனால், அய்யா ஆசிரியர் அவர்கள் தான், பொதுப் பட்டியல் அல்ல; ஒத்திசைவுப் பட்டியல்.

ஒத்திசைவுப் பட்டியல் என்றால், மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து கூட்டாக சட்டம் கொண்டு வருவது.

இதே ஒத்திசைவுப் பட்டியலில்தான் மிருகவதை சட்டமும் இருக்கிறது. அதற்குச் சட்டம் மத்திய அரசு போட்டதுதான். ஆனால், நாம் என்ன செய்தோம், 23.1.2018 ஆம் ஆண்டு நாம் அந்த சட்டத்திலிருந்து காளையை விடுவித்தோம். அதேபோன்று ஏன் நீட்டிலிருந்து விடுவிக்க முடியவில்லை என்பதுதான் நாம் கேட்கும் கேள்வி.

தமிழக அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில்

பிரிவு 19-1-ஜியின்கீழ்

2007 ஆம் ஆண்டு வியாபம் ஊழலில், 50 பேர் இறந்து விட்டார்கள். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன வென்றால், உச்சநீதிமன்றம்தான்.

உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் முதன்முதலாக 2001 இல், கல்வி வியாபாரம் என்று சொன்னார்கள். ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 19-1-ஜியின்கீழ் இது வியாபாரம் என்று சொன்னார்கள்.

19-1-ஜியின்கீழ்

to practise any profession, or to carry on any occupation, trade or business

தொழில் செய்வதற்கான அடிப்படை உரிமை என்று தீர்ப்பு வழங்கி விட்டது.

கல்வி வியாபாரிகளுக்கு அடிப்படை உரிமை என்று சொன்னது உச்சநீதிமன்றம்

அன்றையிலிருந்துதான், தனியார் கல்லூரி என்பது அடிப்படை உரிமையாகிவிட்டது. எனக்குக் கல்வி கொடு என்று சொல்வது அடிப்படை உரிமை இல்லை. ஆனால், நம்மூரில் இருக்கக்கூடிய கல்வி வியாபாரிகளுக்கு அடிப் படை உரிமை என்று சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம். அதிலிருந்து ஆரம்பித்ததுதான் இந்தப் பிரச்சினை.

மாணவர்கள் சேர்க்கையில், ஆசிரியர் நியமனம், ஆசிரியர்மீது ஒழுங்கு நடவடிக்கைகள் போன்ற பிரச்சி னைகளில் எல்லாம் அரசாங்கம் தலையிட முடியாது. அதே போன்று, கல்வியையும், கம்பெனி என்று சொல்லிவிட் டார்கள். அதனால்தான் பிரச்சினையே வந்தது.

2007 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசு கொண்டு வந்த சட்டம்

மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை சம்பந்த மாக, 2007 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் லட்சக் கணக்கில் ரூபாய் வாங்குவதாக நிறைய குற்றச்சாட்டு வருகிறது; அதனால், நாங்கள் ஒரு நுழைவுத் தேர்வைக் கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள்.

இது தொடர்பாக வழக்கு மத்திய பிரதேச உயர்நீதி மன்றத்திற்குச் சென்றது.

அந்த வழக்கில், மாணவர்களை சேர்ப்பது எங்களு டைய அடிப்படை உரிமை - வியாபாரம்; இதில் அரசு தலையிடக்கூடாது என்று தனியார் கல்லூரிகளின் சார்பில் வாதம் செய்யப்பட்டது.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது என்றால், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அரசாங்கம் நுழைவுத் தேர்வை வைக்கலாம் என்று.

உச்சநீதிமன்ற நீதிபதிகள்

5 பேர் கொடுத்த தீர்ப்பு!

ஆனால், மாநில அரசாங்கத்திற்கு கல்வி சம்பந்தமாக நுழைவுத் தேர்வு வைப்பதற்கு அதிகாரமில்லை. கல்வி மாநிலப் பட்டியலிலும் இல்லை. பொதுப் பட்டியலிலும் இல்லை என்று தனியார் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் வாதாடினார்கள். அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள் ளுபடி செய்யப்பட்டது.

பிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த வழக்கை விசாரித்தது. அய்ந்து நீதிபதிகளும் ஒன்றாக சேர்ந்து, மாநிலத்திற்கு அந்த உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

இதைத்தான் நாமும் கேட்கிறோம்; அந்த சட்டம் நமக்குப் பொருந்தாதா? என்று.

எனவே, 1.2.2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேர வையில் இயற்றிய சட்டத்திற்கு உயிர் தருவதாகத்தான் நமது இயக்கம் இருக்கவேண்டும்.

முதலில் நீட் வேண்டாம் என்று அனைவரும் சொன்னார்கள். ஆனால், ஆட்சி ஒப்புக்கொண்ட காரணத் தினால், அடுத்த கட்ட நகர்வு என்னவென்றால், இங்கே இருக்கக்கூடிய எம்.பி.,க்கள் அனைவரும், அமைச்சர்களும் டில்லிக்கு வாருங்கள் என்று சொல்லவேண்டும். அதற்கு உதாரணமாக, சந்திரபாபு நாயுடுவை பாருங்கள் என்று சொல்லவேண்டும்.

உரிமைகள் அனைத்தும் போராடித்தான் பெறப்பட்டது!

சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், எந்த உரிமைகளும் போராடித்தான் பெறப்பட்டதே தவிர, சுலபத்தில் உரிமை கள் கிடைப்பதில்லை.

வைக்கம் தெருக்களில் நடப்பதற்கே ஓராண்டாகப் போராடினார் தந்தை பெரியார் அவர்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15(2) அய் படி யுங்கள். அதில், தெருவில் நடப்பதற்கு வைக்கம் போராட்டத் தைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

சூத்திரர்கள், பஞ்சமர்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று இருந்த நடைமுறையை, 1939 ஆம் ஆண்டு ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்றதின் காரணமாக சுக்கு நூறாக்கப்பட்டது.

தெருவுக்குள் நடப்பதற்கு உரிமை வாங்கினோம்; கோவிலுக்குள் நுழைவதற்கு உரிமை வாங்கினோம். அடுத்து கருவறைக்குள் செல்வதற்கு உரிமைக்காக தமிழ் நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இவை எல்லாம் எப்படி வந்தது? தந்தை பெரியார் அவர்கள் போராடியதினால்தான் கிடைத்தது.

நீதிக்கட்சி காலத்திலேயே இட ஒதுக்கீடு இருந்தது. கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு 15(4) பிரிவு கிடையாது.

இட ஒதுக்கீடு சட்டம் யாரால் வந்தது?

இட ஒதுக்கீடு சட்டம் 15(4) எப்படி வந்தது? தந்தை பெரியார் அவர்கள் போராடியதினால்தான் வந்தது.

தமிழ்நாட்டில், மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாத செண்பகம் துரைராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை ஏற்று, அரசமைப்புச் சட்டம் வந்த பிறகு, இட ஒதுக்கீடு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றமும் அதைத்தான் சொல் லிற்று.

பிறகுதான், பெரியார் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.  அதற்குப் பிறகுதான் 15(4) பிரிவு வந்தது.

போராட்டம்தான்

நீட்டை ஒழிப்பதற்கு ஒரே வழி!

எனவே, நீட்டை ஒழிப்பதற்கும் அதே மாதிரி போராட் டம்தான் வழி என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner