எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதவாதத்திற்கு எதிராக நமது குரல் தொடரும்
தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கை முழக்கம்

 

சென்னை, செப்.13-   ஒரு கவுரி லங்கேஷைக் கொன்று விடுவதால் பகுத்தறிவுக் கொள்கையைத் தடுத்து நிறுத்தி விட முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

10.9.2017 அன்று  சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற கருநாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படத்திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார். அவரது உரை வருமாறு:

கொள்கை உறுதியோடு சொன்ன அந்த
வீர மங்கை இன்றைக்குப் படமாகி விட்டார்

மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஒரு சோக நிகழ்வாக நடத்தப்பட்ட பெருமதிப்பிற்குரிய கருநாடகத்தில் சீரிய பகுத்தறிவுப் பத்திரிகையாளராக, அதுவும் ஒரு பெண் துணிச்சல் உள்ளவராக, மற்றவர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக, சில ஆண்களே கோழைகளாக இருக்கிற நேரத்தில், எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்பதற்காக நான் பின்வாங்கமாட்டேன் என்று கொள்கை உறுதியோடு சொன்ன அந்த வீர மங்கை இன்றைக்குப் படமாகி விட்டார்.

எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத ஒரு சூழல்

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் நிகழ்விற்கு, நம்முடைய அழைப்பை ஏற்று இங்கே வந்து படத்தினை திறந்து வைத்து, நாட்டில் இருக்கக்கூடிய பத்திரிகைக்காரர்களுக்கு, முற்போக்குச் சிந்தனையாளர் களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது, கொலையாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார் கள், கருத்தாளர்கள் பாதுகாப்புக்கிடையே இருக்கவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதை இங்கே சுட்டிக் காட்டிய இந்துக் குழுமத் தலைவர் அருமை நண்பர் திரு.என்.ராம் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக அறிமுகவுரை யாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

அடுத்தபடியாக, இங்கே சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்த தோழர் முனைவர் நம்முடைய மேனாள் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன் அவர்களே,

அருமை சகோதரர் சிறந்த ஒரு ஆய்வுப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தோழர் திருமிகு ‘நக்கீரன்’ கோபால் அவர்களே,
அருமை நண்பர் ‘தீக்கதிர்’ பொறுப்பாசிரியர் குமரேசன் அவர்களே,

‘ஜனசக்தி’ ஆசிரியர் இந்திரஜித் அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் இணைப்புரை வழங்கிக் கொண்டி ருக்கக்கூடிய திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியுமான குமரேசன் அவர்களே,

குறுகிய காலமானாலும் இங்கே திரண்டு வந்திருக்கின்ற பத்திரிகையாளர்களான சகோதரர்களே, ஊடகவியலாளர் களே, அருமைத் தோழர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழப்புக்குப் பின்னால் இருக்கக்கூடிய பின்னணி என்ன?

மறைந்தும் மறையாமலும் நம்முடைய நெஞ்சங்களில் நிறைந்தவராகிவிட்ட கவுரி லங்கேஷ் அவர்கள், தன்னு டைய உயிரைத் தியாகம் செய்திருக்கிறார். இந்த உயி ரிழப்புக்குப் பின்னால் இருக்கக்கூடிய பின்னணி என்ன? என்பது ஆய்வு செய்யப்படவேண்டும் என்பதை இங்கே பேசியவர்கள் அத்துணை பேரும் சுட்டிக்காட்டினார்கள்.

என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் கழகம் இதனை முந்திக்கொண்டு செய்ததற்கு இரண்டு காரணம் உண்டு.

பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்று இருக்கிறோம்

ஒன்று, லங்கேஷ் பத்திரிகை நடத்தக்கூடிய லங்கேஷ் அவர்கள் சீரிய பகுத்தறிவாளராக கருநாடகத்தில் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அந்தப் பணியை செய்த என்னுடைய அருமை நண்பர். நாங்கள் சந்தித்திருக்கிறோம். கருநாடகத்தில் நடைபெற்ற பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்று இருக்கிறோம்.

இங்கே பேராசிரியர் நாகநாதன் அவர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல, அவர்கள் கொள்கை வயப்பட்டவர்களாக மாறுவதற்குக் காரணமாக இருந்தவர்கள், குறிப்பாக கவுரி லங்கேஷ் அவர்கள், அவருடைய குடும்பத்தவர்கள் வரு வதற்குக் காரணமாக இருந்தவர்கள், இரண்டு ஆசிரியர்கள் என்று சொன்னார்கள்.

சமரசமற்ற பத்திரிகையாளர்
கவுரி லங்கேஷ்

ஆம்! நாங்கள் எல்லாம் பகுத்தறிவு குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஏ.டி.கோவூர் ஆனாலும், அதேபோல, பெங் களூரு பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர், சீரிய பகுத்தறிவாளர் நரசிம்மய்யா அவர்களானாலும், நாங்கள் எல்லோரும் பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறோம். லங்கேஷ் அவர்களே மிகத் தீவிரமானவர். அவர் மறைந்த நேரத்தில், அவருடைய மகள் அந்தப் பணியை நிறுத்தி விடலாம் என்று நினைக்காமல், டில்லி ஜவகர்லால் பல் கலைக் கழகத்தில் அவர்கள் பத்திரிகைத் துறையில் பயின்று, சிறப்பாக கருத்துகளை எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில், அவர் ஒரு சமரசமற்ற பத்திரிகையாளர் - அது தான் அவருடைய தனித்தன்மை.

அவர் எடுத்துக்கொண்ட எந்தப் பிரச்சினையானாலும் அதில் சமரசத்தை ஒருபோதும் அவர் விரும்பவில்லை. இது என்ன குற்றமா? இங்கே அவரைப்பற்றி நிறைய சொன்னார்கள். நான் தனிப்பட்ட முறையில், அதைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை.

கவுரி லங்கேஷ் பேசுகிறார்

அவர் சொன்ன ஒன்று, இன்றைய ஏடுகளில் வந்திருக் கிறது.

கவுரி லங்கேஷ் பேசுகிறார், அவருடைய குரலை கேளுங்கள். எதற்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், அவருடைய வாக்குமூலத்தை, அதனுடைய கருத்தை இன்றைக்கு ஏடுகளில் வந்திருக்கின்ற செய்தியை நாம் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

கவுரி லங்கேஷ் பேசுகிறார், ‘‘ஒரு இந்திய குடிமகளாக பாஜகவின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து அமைப்பில் உள்ள ஜாதிய அமைப்பை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நம் அரசியல் அமைப்பு சட்டம் எனக்கு மதச் சார்ப்பின் மையைத்தான் கற்றுக்கொடுத்தது. எனவே மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பது என்னுடைய அடிப் படை உரிமையாகும்’’ என்று அவர் துணிந்து பிரகடனம் செய்தார்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று குற்றவாளிகளிடமே கேட்பதுபோன்ற ஒரு சூழ்நிலை

அதனால்தான் அவர் இன்றைக்குப் படமாகிவிட்டார். எனவே, படமாகிவிட்ட கவுரி லங்கேஷ் அவருக்கு நாம் வெறும் மரியாதை செலுத்தினால் மட்டும் போதாது. குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று குற்றவாளி களிடமே கேட்பதுபோன்ற ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு அவர்களிடம் நாம் கோரிக்கை வைப்பது எந்த அளவிற்குப் பயன்படும் என்பது, ஏற்கெனவே 2013 ஆம் ஆண்டிலிருந்து வரிசையாக சொன்னார்கள்.

மகராஷ்டிராவில் தபோல்கர் -
அதற்கடுத்து, கோவிந்த் பன்சாரே,

அதற்கடுத்து துணைவேந்தராக இருந்த மிகப்பெரிய கல்வி அறிஞர் கல்புர்கி,

அடுத்தது அந்த வரிசையில், கவுரி லங்கேஷ் அவர்கள் என்று வருகிறபோது, இதில் குறிப்பாக சுட்டிக்காட்ட வேண்டிய செய்தி என்னவென்றால்,

திரு.ராம் அவர்கள் இங்கே சொன்னார்கள், பயங்கர வாதம் என்பது இருக்கிறதே, அதனுடைய தத்துவமே அச்சுறுத்தல் என்பதுதான்; மிரட்டுவது - இந்தக் கருத்திலிருந்து நீ பின்வாங்கிக் கொள்; இனிமேல் அதைப்பற்றி பேசாதே, எழுதாதே - அப்படி நீ எழுதினால், அவருக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதுதான் உனக்கும் ஏற்படும் என்று மற்றவர்களுக்குச் சொல்வதற்காக, அந்தப் படு கொலையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். ஒரே முறையில்தான் கொலைகள் நடைபெற்று இருக்கின்றன.

அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன், நாம் பத்திரிகைகளில் படிக்கும்பொழுது, பொது அறிவு உள்ளவர்கள் எவருக்கும் தெரிகின்ற செய்தி,

நான் கிரிமினல் வழக்குரைஞர் - கிரிமினல் அலுவல கத்தில் முதலில் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். அப் பொழுது ஒன்றைச் சொல்வார்கள், கொலைகள் ஆனாலும், கிரிமினல் ஆக்ட் எதுவானாலும், அவர்கள் ஒரே மாதிரி தான் செய்வார்கள்; ஒரே ஒரு குழுதான் அதனை செய்யும்.

செயினை அறுக்கிறவன்,

செயினை மட்டும்தான் அறுப்பான்

சிலர் செயினை அறுக்கிறார்கள் என்றால், செயினை அறுப்பதுதான் அவர்களுடைய வேலையாகும். அவர்கள் எப்படி கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், அவர்கள் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் பெரிய வெற்றி என்று சில நாள்களுக்கு முன் செய்தி வந்தது. நாமெல்லாம் செய்தியாக அதனைப் படித்திருக்கிறோமே தவிர, படித்துப் பாடம் பெறவில்லை.

செயின் அறுத்து, பங்களா வாங்கியிருக்கிறார்கள், செயினை எப்படி அறுப்பது என்பதுபற்றி பயிற்சி கொடுத் திருக்கிறார்கள். விமானத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து செயினை அறுத்துவிட்டு, திரும்பவும் விமானத்திலேயே செல்வார்களாம். தங்குவதற்க பெரிய பெரிய ஓட்டல் களில்தான் தங்குவார்கள். இதுபோன்று கொள்ளைக் காரர்கள் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் தங்கி கொள்ளை யடிப்பது என்பது சிறப்பான சாதனை -அண்மைக்கால சாதனையாகும்.

அதுபோன்று, செயினை அறுக்கிறவன், செயினை மட்டும்தான் அறுப்பான்.

சிலர் பூட்டியிருக்கும் வீட்டில், சாவி போட்டு திறந்து கொள்ளையடிப்பார்கள் பாருங்கள், ஒரு குழு மட்டும்தான் அதுபோன்ற திருட்டுகளை செய்யும். விசாரணை செய் யும்பொழுது காவல்துறையினர் சரியாகச் சொல்வார்கள் இந்தக் குழுதான் அதனை செய்திருக்கும் என்று.

அதேபோன்று கொலை செய்யும் முறையில்கூட, இந்தக் குழுதான் அதுபோன்று செய்யும் என்று தெளிவாகத் தெரியும்.  மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து சுட்டுக் கொல்வது என்பது ஒரே மாதிரியான முறையில் நடை பெற்று இருக்கிறது என்பதைப் பார்க்கும்பொழுது, அதனைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றால், ஒரு நொடிப் பொழுதில் கண்டுபிடிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் காவல்துறையினர். மனம் இருந்தால், மார்க்கமுண்டு. ஆனால், மனமில்லையே, அதுதானே மிக முக்கியமானது.

எனவேதான், இந்தச் சூழ்நிலையில், எது அவரைக் கொன்றது? மத வாதத்திற்கு எதிரான அவரது போர். கடவுள் மறுப்பாளர் அவர். அதுமட்டுமல்ல, நக்சலைட்டு களை மனம்மாற்றி, மிகப்பெரிய அளவிற்கு அவர்களுக்குப் புதுவாழ்வு கொடுத்தார்கள். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்குக் கருத்தை சொன்னார்கள் என்றெல்லாம் வருகிறபொழுது, அதனுடைய அடிப்படை என்ன? இந்தக் கொள்கை வந்துவிடக்கூடாது. ஒரு அச்சுறுத்தல். நாட்டிலே எப்படிப்பட்ட அச்சுறுத்தல் என்பதைப்பற்றி சொல்லும் பொழுது, இங்கே ஒன்றை சொல்லவேண்டும்,

‘‘நாட்டிலே கருத்துச் சுதந்திரம் இல்லை: அமர்த்தியாசென்

அமர்த்தியாசென் நோபல் பரிசு பெற்ற ஒரு அறிஞர். அவர் சொன்னார், ‘‘நாட்டிலே கருத்துச் சுதந்திரம் இல்லை’’ என்று சொன்னார்.
நாளந்தா பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்கள், அவர் அதனுடைய தலைவராக இருந்தார்; அந்தப் பதவி யில் அவர் தொடர முடியவில்லை - வெளியில் வந்தார். அதற்கடுத்தபடியாக, அவரே பரிந்துரைத்த, சிங்கப்பூர் நாட்டினுடைய அமைச்சராக இருந்து, தேசிய பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர், அடுத்தபடியாக நாளந்தா பல்கலைக் கழக வேந்தராக வந்தார். அவரும் தொடர முடியாத அளவிற்கு வந்து, காவி முத்திரை, காவிக் கறை யாருக்கு இருக்கிறதோ, அவர்கள் மட்டும்தான், கல்வித் துறையில், தகுதியுள்ளவர்களாக தொடர முடியும் என்பது மிகத் தெளிவாக தெரிந்துவிட்டது.

குடியரசு துணைத் தலைவராக இருந்தவரின் கருத்து!

எனவே, அறிஞர்கள் - இன்னொரு பக்கம் பத்திரிகை யாளர்களுக்கு அச்சுறுத்தல். அவ்வளவு தூரம் போக வேண்டிய அவசியமில்லை. குடியரசுத் துணைத் தலை வராக இருந்த, பெருமதிப்பிற்குரிய சீரிய கல்வியாளர் என்று கருதப்படுகிற அமீத் அன்சாரி அவர்கள், பதவியை விட்டுப் போகின்ற நேரத்தில் என்ன சொன்னார்?

‘‘நாட்டில் சிறுபான்மை மக்கள் எல்லாம் அச்சத்தோடு வாழவேண்டிய சூழல் இருக்கிறது. அந்த சூழல் விரும் பத்தக்கதல்ல’’ என்று

அவர் கருத்துச் சொன்னார்.

அவருடைய அந்தக் கருத்துக்காக, நிறைய கண்ட னங்களைத் தெரிவித்தவர்கள் காவிக்காரர்கள். அவரு டைய கருத்து பொதுவான கருத்தாகும். நாட்டினுடைய நிலையை, அதிலும் நீண்ட காலமாக குடியரசு துணைத் தலைவராக இருந்த ஒருவருக்கே கருத்து சொல்ல உரிமையில்லை. அவருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படக் கூடிய நிலை இருக்கிறது. எனவேதான், அந்த அச்சுறுத்தல் பல இடங்களில் தொடர்கிறது. அடுத்து கருநாடகாவில் தேர்தல்  நடைபெறவிருக்கிறது.

எனவே, அதுமட்டுமல்ல, அவர்கள் துணிந்து, பல மாநிலங்களில் ஆளுங்கட்சியாக வர விரும்புகின்ற காவிக் கட்சியைப்பற்றி எழுதியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் சொல்கின்ற நேரத்தில், அந்த அச்சுறுத்தல்கள் வரும்.

எனவேதான், நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அந்த அச்சுறுத்தல்கள் ஒரே மாதிரிதான் - தபோல்கராக ஆனாலும் சரி, அல்லது கல்புர்கியாக இருந்தாலும் சரி, கோவிந்த் பன்சாரேவாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரிதான் நடைபெற்று இருக்கிறது.

ஆனால், இதற்கெல்லாம் என்ன காரணம்? குற்ற வாளிகளை கண்டுபிடிங்கள் என்று கேட்டு, அப்படி கண்டு பிடித்து இரண்டு பேரை தண்டிப்பதினால்,  அவர்களுக்கு தண்டனை கொடுத்து விடுவதால் இது சரியாகிவிடும் என்று நினைக்கக்கூடாது.

காந்தியார் இறந்தவுடன்
தந்தை பெரியார் சொன்னார்

காந்தியார் இறந்தவுடன், எல்லோரும் ஆவேசப்பட்ட நேரத்தில், தந்தை பெரியார் சொன்னார்:

‘‘துப்பாக்கியைத் தண்டிப்பது புத்திசாலித்தனமல்ல; அந்தத் துப்பாக்கியை எந்தக் கை பிடிக்க வைத்ததோ, அதைக் கண்டுபிடித்து, அதைக் கண்டிப்பதும், அதனை ஒழிப்பதுதான் மிகவும் முக்கியமானது’’ என்றார்.

அதற்கு என்ன அடிப்படை? மதவெறி, மதவாதம். எனவேதான், இந்த மதவாதத்திற்கு எதிரான ஒரு போர் நடக்கின்ற நேரத்தில், அவர்கள் கருத்தாளர்களா? எழுத் தாளர்களா? அல்லது அறிஞர்களா? நோபல் பரிசு பெற்ற வர்களா? என்று நாங்கள் எதையும் பார்க்கமாட்டோம்.

பாசிசம் என்று சொன்னால், எங்களுக்கு எதிராக யார் கருத்தை சொன்னாலும், அவர்களுக்கு எதிராக, அந்தக் கருத்தை நாங்கள் உள்வாங்கிக் கொண்டு, அவர்களை அணைத்துப் பார்ப்போம். அணைத்துப் பார்க்க, சமரசத் துக்குக் கொண்டுவர - சில பேர் அண்மையில் விலை போகிறார்கள் அல்லவா - விலைக்கு தங்களை விற்றுக் கொள்பவர்கள் - நல்ல விலைக்கு விற்றுக்கொள்ளுங்கள் என்று பெரியார் அவர்கள் சொல்வார். நேரம் ஆக ஆக, மீன் விலை குறையும் மாலை நேரத்தில். காலை நேரத்தில் இருக்கின்ற விலை, மாலை நேரத்தில் இருக்காது. அதுபோன்று வந்த விலையை கொடுத்துவிடுங்கள், காசு வந்தால் போதும் என்று நினைக்கக்கூடிய பல பேர் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில், பல பேர் இருக்கக்கூடிய அந்த எண்ணங்கள் இன்றைக்கு வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், சமரசம் செய்துகொள்ளமாட்டேன் என்று சொன்னால், உங்களுக்கு இந்தக் கதிதான்வரும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அச்சுறுத்தலான ஒரு சூழல் இன்றைக்கு வந்திருக்கிறது.

மதவாதத்திற்குத்
தமிழ்நாட்டில் இடமில்லை!

எனவே, கல்புர்கி, தபோல்கர், கோவிந்த் பஞ்சாரே, கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு வெறும் அனுதாபம் தெரி விப்பதற்காக இங்கே கூடவில்லை. எந்தக் கை, எந்தத் துப்பாக்கிகள், எந்தெந்த கொலையாளிகளுக்கு மூல காரணமோ, அந்த நோய்நாடி, நோய் முதல் நாடவேண்டும். ஒரு நோய் வந்தது என்று சொன்னால், அந்த நோய்க்குரிய கிருமிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்தக் கிருமிதான் மதவாதம் - அந்த மதவாதத்திற்குத் தமிழ்நாட்டில் மட்டு மல்ல, இந்தியாவிலே இடமில்லை என்று சொல்லக்கூடிய நிலை வந்தால்தான், இதுபோன்ற கருத்துகளைச் சொல்லக்கூடியவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படும்.

அவர்கள் என்ன பெரிய குற்றத்தை செய்துவிட் டார்களா? அரசியல் சட்டம் எனக்கு அளித்திருக்கின்ற உரிமை என்றுதானே பத்திரிகையாளர்கள் நினைக்க வேண்டும். அவர்கள் என்ன சமூக விரோதமாக ஏதாவது கருத்தை சொல்லிவிட்டார்களா? அரசியல் சட்டத்தி னுடைய முதல் பகுதி என்ன? சோசலிஸ்ட், செக்குலர் என்றுதானே ஆரம்பிக்கிறது.

அது எல்லாவற்றையும்விட அடிப்படை உரிமை என் பதைவிட, அடிப்படைக் கடமை என்று ஒன்று இருக்கிறது என்பதே யாருக்கும் நினைவிற்கு வருவதில்லை. அடிப் படை உரிமை ஒரு குடிமகனுக்கு, ஒரு குடிமகளுக்கு எவ் வளவு முக்கியமோ, அதுபோலத்தான், 4 ஆவது பிரிவில் ஒரு பகுதி சேர்த்திருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தில் இருக்கின்ற

அடிப்படைக் கடமைகள்

அதற்கு அடிப்படைக் கடமைகள் - அதில் என்ன இருக்கிறது?

ஒவ்வொரு குடிமகன், குடிமகளுக்கு இருக்கின்ற உரிமைகளைப்பற்றி சொல்லிக் கொண்டே வரும்பொழுது,

மிt sலீணீறீறீ தீமீ tலீமீ பீutஹ் ஷீயீ மீஸ்மீக்ஷீஹ் நீவீtவீக்ஷ்மீஸீ ஷீயீ மிஸீபீவீணீ tஷீ பீமீஸ்மீறீஷீஜீ tலீமீ sநீவீமீஸீtவீயீவீநீ tமீனீஜீமீக்ஷீ, லீuனீணீஸீவீsனீ ணீஸீபீ tலீமீ sஜீவீக்ஷீவீt ஷீயீ வீஸீஹீuவீக்ஷீஹ் ணீஸீபீ க்ஷீமீயீஷீக்ஷீனீs

இதைத்தான் அவர்கள் செய்தார்கள். அவர்கள் செய்த குற்றமென்ன? ஏன் மற்றவர்கள் அதனை சகித்துக் கொள்ள முடியவில்லை.
இந்திய அரசியல் சட்டத்தில், ஒரு பத்திரிகையாளர், லட்சிய ரீதியாக, அவர்கள் ஒரு குடிமகனாக இருந்து, கவுரி அவர்கள் செய்தது - அறிவியல் மனப்பான்மையோடு - அரசியல் சட்டம் விதித்திருக்கிற கடமைப்படி செய்திருக் கிறார்.

பகுத்தறிவாளர்களைத் தவிர, முற்போக்குவாதிகளைத் தவிர - அடிப்படைக் கடமை என்ற ஒன்று இருக்கிறது என்று யாரும் நினைப்பதில்லை.

ஜாதி இருக்கும் வரையில் எப்படி மனிதநேயம் இருக்க முடியும்?

ஒருவன் தொடக்கூடாதவன் - ஒருவன் தொடக்கூடி யவன்

ஒருவன் படிக்கக்கூடாதவன் - ஒருவன் படிக்கக்கூடி யவன்

ஒருவன் உத்தியோகத்திற்குப் போகத் தகுதியுள்ளவன் - ஒருவன் உத்தியோகத்திற்குப் போவதற்குத் தகுதியில் லாதவன்.
உயர்ஜாதி - கீழ்ஜாதி என்று இருக்கும்பொழுது, மனித நேயம் எப்படி இருக்க முடியும்?

எனவே, மனிதத் தன்மைக்கு ஜாதி எதிரான என்ற அடிப்படையில், அவர் ஜாதியை எதிர்த்தார்.

ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? என்பதுதானே பகுத் தறிவு வாதம்.

கவுரி லங்கேஷ்  தன் கடமையைச் செய்தது மிகப்பெரிய குற்றமா?

எனவே, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற கடமையை கவுரி லங்கேஷ் அவர்கள் செய்ததுதான் மிகப்பெரிய குற்றம் என்று சொல்கிறார்கள், இது குற்றமா?

இந்தப் பணியை செய்தால், உன்னை வாழ அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லக்கூடிய மதவாத சக்திகள் இந்த நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்று சொன்னால், அதனை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றுவது தான் ஒரே வழி. அதைத்தான் இந்த நேரத்தில் உறுதி மொழியாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கவுரி லங்கேஷ் கொலையாளிகளைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னால், எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும், அவர்களைக் கண்டுபிடிக்கப் போவதில்லை.

இந்நேரத்தில், மிக அருமையாக நண்பர்கள் இங்கே பேசும்போது சொன்னார்கள்,

இது பெரியார் பூமி - இந்தப் பெரியார் பூமியில் இன் றைக்கும் ஊடுருவவேண்டும், இன்றைக்கும் வெளிப்படை யாக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இங்கே ஏன் பிள்ளையாரை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை? இங்கே ஏன் இராமனை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை?

கலவரம் இல்லாத ஒரே ஒரு பூங்காவாக இருந்தது தமிழ்நாடு

இராம ஜென்ம பூமி என்று சொல்லிக்கொண்டு, பாபர் மசூதியை இடித்த நேரத்தில், இந்தியா முழுவதும் கலவரம் நடந்தபோது, கலவரம் இல்லாத ஒரே ஒரு பூங்காவாக இருந்தது தமிழ்நாடு ஒன்றுதான் என்று பத்திரிகையாளர்கள் எழுதினார்கள். இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில், தாமஸ் என்பவர் எழுதினார்:

‘‘பெரியார் மண்ணை திராவிட இயக்கங்கள் பக்குவப் படுத்தி இருக்கின்றன; இங்கே கலவரங்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று.’’
இராமனைக் காட்டி அரசியல் நடத்தினார்களே, விளைவு என்னாயிற்று? இராமனை செருப்பாலடித்த வர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய அளவிற்குப் பிரச்சாரம் செய்தார்கள். காமராசர் பிறகு வருந்தினார்.

அந்தத் தேர்தலின் முடிவு என்ன? அதற்கு முன்னால், 138 இடங்கள் என்றால், இராமனை செருப்பாலடித்த பிறகு 184 இடங்கள் என்று வரக்கூடிய அளவிற்கு வந்தது என்றால், இந்த மண்ணில் பெரியார் எவ்வளவு தொலை நோக்கு உள்ளவர் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

பெரியார் ஏன் இராமாயணப் பிரச்சாரம் செய்தார்?

பெரியார் ஏன் இராமாயணப் பிரச்சாரம் செய்தார்? யாரையும் துன்புறுத்துவதற்காக அல்ல; இந்த மண்ணை பக்குவப்படுத்த, மக்களைப் பக்குவப்படுத்த, இந்த மண் ணிலே ஒருங்கிணைப்பதற்கு அது பயன்பட்டதே தவிர வேறொன்றுக்கும் கிடையாது.

அன்றைக்குக்கூட புரியாத சிலர், அது கொச்சை நாத்திகம், இது அறிவியல் பூர்வமான நாத்திகம் இல்லை என்று சொன்னார்கள். அவர்கள் இப்பொழுதுதான் உணர் கிறார்கள், இது பச்சை நாத்திகம் என்று.

நான் நாத்திகன் என்றார் இந்து ராம்!

நம்முடைய ராம்கூட இங்கே வெளிப்படையாக சொன்னாரே, நான் நாத்திகன் என்று.

உடனே இதற்குப் பதில் என்ன சொல்வார்கள் தெரி யுமா? ஓகோ, இவர்கள் அவர்களிடம் சேர்ந்துவிட்டாரோ என்று சொல்லமாட்டார்கள்.

இது என்னங்க பெரிசு? எங்களுடைய இந்து மதத்தில் ராமனுக்குப் பக்கத்தில் ஜியாபலி என்கிற ஒரு நாத்திகன் இருந்தான் என்று சொல்வார்கள்.

அதுமட்டுமல்ல, அந்தக் காலத்திலேயே இந்து மதத்தில் பிரகஸ்பதி யாருங்க? அவர் பெரிய நாத்திகருங்க. அது மட்டுமல்ல, அன்றைக்குப் பெரிய அளவில் சாருவாகனர் என்று இருந்திருக்கிறார்களே? என்பார்கள்.

பிறகு ஏன் நாத்திகர்களைக் கொல்கிறீர்கள்? கடவுள் மறுப்பாளர்களை எரிக்கிறீர்கள்?

இது எவ்வளவு பெரிய முரண்பட்ட வாதம். ஆகவே தான், இதனை எச்சரிக்கையாக இருந்து புரிந்துகொள்ள வேண்டிய செய்தி - இந்த மண்ணில்தான் அப்படிப்பட்ட பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதலில் எதிர்ப்பார்கள்;
பிறகு அணைத்து அழிப்பார்கள்!

மிக அழகாக இங்கே சொன்னார்கள், முதலில் எதிரியை அவர்கள் அப்படி அணுகுவார்கள் என்றால், முதலில் எதிர்த்துப் பார்ப்பார்கள். கொஞ்சம் திரிபுவாதம் செய்து பார்ப்பார்கள். அது எடுபடவில்லை என்றதும், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், இதெல்லாம் தேவைதான் என்பார்கள்.

எதிர்ப்பது - பிறகு ஏற்றுக்கொள்வது - பிறகு அணைத்து அழிப்பது என்பதுதான் அவர்களின் நிலை.

அப்படித்தான் அம்பேத்கர் அவர்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறோம் என்று அவர்கள் சொல் கிறார்கள். ஆனால், பெரியாரை, அம்பேத்கர் போன்று அணைக்க முடியாது. அதுதான் மிக முக்கியம். அதற்காக என்ன செய்தார்கள் - ஆளை குளோஸ் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள்.

அது மற்ற இடங்களில் நடக்கும் - இந்த மண்ணில் நடக்காது. நடந்தாலும், நாங்கள் துணிந்தவர்கள்.

கொள்கைக்காக நம்மைத் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்

பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்பொழுது என்ன சொன்னார் என்றால்,

‘‘நாங்கள் வீட்டிலிருந்து வரும்பொழுதே, வரவு கணக் கில் எங்களை வைக்கவேண்டாம் - செலவு கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் வரவில் வையுங்கள் - திரும்பி வருவோம் என்று நம்பிக்கைப் படவேண்டும் என்று சொல்லி, கொள்கைக்காக நம்மைத் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்’’ என்று சொன்னார்.

பெரியாருடைய துணிவு,
மற்றவர்களுக்கு ஒரு பெரிய பாடம்!

இந்த நேரத்தில், பெரியாருடைய துணிவு, மற்றவர் களுக்கு ஒரு பெரிய பாடமாக இருக்கவேண்டும்.

அய்யாதான் சொல்வார், பொதுவாழ்க்கையில் ஈடுபடு கிறவர்கள் பயப்படக்கூடாது. எனக்குப் பாதுகாப்பு வேண் டும் என்று கேட்டுக்கொண்டு, சிலர் ஏ.கே.47 துப்பாக்கி பாதுகாப்போடு வந்து, வீரம் பேசுகிறார்கள்.

கொள்கைக்காக இறந்தால்...
பெரியார்தான் சொன்னார்,

‘‘நோயினால் சாகக்கூடாது; விபத்தினால் சாகக்கூடாது - கொள்கைக்காக இறந்தால், அதைவிட பெருமையான சாவு வேறொன்றும் கிடையாது’’ என்றார்.

சாக்ரட்டீசுக்கு விஷம் கொடுத்தார்கள் - எத்தனை ஆண்டுகள்  ஆகின்றன? சாக்ரட்டீஸ் மறைந்தாரா? வாழு கிறாரா?

பகத்சிங்கை தூக்குமேடையில் ஏற்றினார்கள் - பகத்சிங் இன்றைக்கு வாழுகிறாரா? இல்லையா?

கொள்கையில் சமரசம் செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை

எனவேதான், கவுரிகள் வாழுகிறார்கள்-  லங்கேஷ்கள் வாழுகிறார்கள் - கவுரி லங்கேஷ் வாழ்வார்கள் - அப்படிப் பட்ட உணர்வை நாம் பெறவேண்டும். அதற்காக எதையும் எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். சட் டத்தை நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசிய மில்லை. சட்டம் அதனுடைய கடமையை செய்ய வற்புறுத்த வேண்டும். என்றாலும், நாம் அதற்காக கொள்கையில் சமரசம் செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.

லட்சியப் பாதையில் எது வந்தாலும் ஏற்போம் என்கிற துணிவோடு, பத்திரிகைக்காரர்களே, நீங்கள் முதுகெலும் போடு எழுதுங்கள். அப்படிப்பட்ட பத்திரிகைக்காரர்களை ஊக்கப்படுத்தவேண்டும். அவர்களின் பக்கத்தில் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் கூட்டம்.

சமரசமற்ற கொள்கைப் பயணத்தில்
வெற்றி காண்போம்!

எனவே, அவர்களுடைய நினைவைப் போற்றி, உறுதி யைப் பெறுவோம் - கொள்கைப் பயணத்தைத் தொடரு வோம் - சமரசமற்ற கொள்கைப் பயணத்தில் வெற்றி காண்போம்!

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வாழ்க கவுரி லங்கேஷ்கள்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


கவுரி லங்கேஷ் பேசுகிறார்,

‘‘ஒரு இந்திய குடிமகளாக பாஜகவின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து அமைப்பில் உள்ள ஜாதிய அமைப்பை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நம் அரசியல் அமைப்பு சட்டம் எனக்கு மதச் சார்ப்பின்மையைத்தான் கற்றுக்கொடுத்தது. எனவே மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பது என்னுடைய அடிப் படை உரிமையாகும்’’ என்று அவர் துணிந்து பிரகடனம் செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner