எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இரண்டு வகையில் சொல்ல வேண்டும் என்றால் ஒன்று ஜாதி ஒழிப்பு - இரண்டாவது பெண்ணடிமை ஒழிப்பு.

இவற்றை ஒழிப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடியவை கடவுள், மதம், வேதம், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் என்று விரியும் பொழுது, அவற்றின்மீது கண்டிப்பான போர்த்தொடுப்பு என்ற ஆயுதத்தைத் தூக்கிய அறிவாசான் தான் தந்தை பெரியார்.

சுயமரியாதைத் திருமண மேடைகளில் தந்தை பெரியார் எடுத்து வைத்த கருத்துகளில் முதன்மையான இடத்தைப் பிடிக்கக் கூடியது பெண்ணுரிமையைபற்றிதான்! அவர்களை அடக்கி அடக்கி வைத்ததால், இருட்டில் பொட்டுப் பூச்சிகளாக நெளிந்து வா(டு)ழும் நிலைதான்! இந்த நிலையில் மூடநம்பிக்கைகளின் பொதிகளை அவர்கள் சுமந்துதானே தீர வேண்டும்.
இதுகுறித்துத் தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு வேறு யார் தான் சிந்தித்தார்கள்?
"பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிக மிக எளிது. ஆண்கள் உங்களைத் தான் பிற்போக்காளர்கள் என்று உங்கள்மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர் காலத்தில் "இவள் இன்னாருடைய மனைவி" என்று அழைக்கப்படாமல் (இவன் இன்னாருடைய கணவன்) என்று அழைக்கப்பட வேண்டும்."

(குடிஅரசு 5.6.1948)
என்று தந்தை பெரியார் என்னும் சமுதாயத் தாய் "அருளிய" மொழிகளை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமக்குப் பின்னாலே இந்தப் புரட்சிகரமான இயக்கத்துக்கு ஒரு பெண்ணைத் தலைமை ஏற்கச் செய்த அந்தத் தொலை நோக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் தான் அன்னை மணியம்மையார் அவர்கள் சொன்னார்கள் - தந்தை பெரியார் நினைவு நாளைப் பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று! (காரைக்குடியில் 24.1.1974)
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது தலைமைப் பொறுப்பில் அமைப்பு ரீதியாக பல அணிகளை உருவாக்கி வலிமைப்படுத்தி வருகிறார்கள்.

மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, வழக்குரைஞரணி, பகுத்தறிவுக் கலை இலக்கிய அணி, மருத்துவர் அணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை என்று பல்வேறு அணிகளை உருவாக்கி அவர்களுக்கான பணித் திட்டங்களுக்கும் அளிக்கப்பட்டு அடிக்கடிக் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
இதில் மகளிர் அணியின்மீது கூடுதல் கவனத்தைக் கழகத் தலைவர் செலுத்தி வருகிறார். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மகளிர்ப் பாசறையிலும், அதற்கு மேல் வயதுள்ளவர்கள் மகளிர் அணியிலும் இடம் பெறுவார்கள். தனித்தனியே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளான மார்ச்சு 10ஆம் தேதியன்று மாதர் தம்மை இழிவு செய்யும் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்து அதில் கழக மகளிர் மட்டுமே பங்கேற்பர் என்ற அறிவிப்பினைக்  கொடுத்தார்.
நமது கழக மகளிர் அணியினர், பாசறையினரிடம் ஒரு பணியைக் கொடுத்தால் அதனை எப்படி நிறைவேற்றிக் கொடுப்பார்கள் என்ற சோதனைக் களமாகக்கூட நினைத்திருக்கலாம்.
அதில் நமது கழக மகளிர் அணியினர், பாசறையினர் பாராட்டத்தக்க அளவில் 'தங்கப் பதக்கத்தை'த் தட்டிப் பறிப்பதுபோல் செயலாற்றினர்.

அதில் கழகத் தலைவருக்கு மனங் கொண்ட மகிழ்ச்சி, மகிழ்ச்சி! அதனை அன்னை மணியம்மையார் நினைவு நாளில் (16.3.2017) சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை மண்டல மகளிர் அணி  - மகளிர்ப் பாசறைக் கலந்துரையாடலில் வெளிப்படுத்தவும் செய்தார்.
மகளிர் அமைப்புப் பணிகள் அடுத்த கட்டத்தில் மேலும் செப்பனிடப்படும். மாவட்டம், ஒன்றியம், கிளைக் கழகம் என்கிற அளவிற்கு அமைப்புகள் விரிவாக்கப்பட வேண்டும்.
அடுத்த மாதம் ஏப்ரலில் திருச்சிராப்பள்ளியில் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பினையும் கழகத் தலைவர் கொடுத்துள்ளார்.
சென்னைக் கலந்துரையாடலில் ஆக்க ரீதியான திட்டங்களையும், ஆலோசனைகளையும் கழக மகளிர் அணியினர் எடுத்துக் கூறினர்.

1) நமது இயக்கக் கொள்கைகள் முதலில் நம் வீடுகளில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகள் எல்லோரும் கொள்கை வழி பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

2) இயக்க நிகழ்ச்சிகளுக்கு வீட்டு ஆண்கள் மட்டும் வருதல் கூடாது; கண்டிப்பாக வீட்டுப் பெண்களை அழைத்து வரவேண்டும். கலந்துரையாடல் கூட்டங்களிலும், பொதுக் குழுவிலும் இதனை ஒரு கட்டளையாக கழகத் தலைவர் அறிவிக்க வேண்டும்.

3) மகளிர்க்கென்று தனியே பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, இணைய தளப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். மகளிர் அணியினர் தங்களுக்குள் இணையதளக் குழுக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

4) இயக்க ஏடுகள் இல்லாத வீடுகளே இருக்கக் கூடாது. இதற்குக் கழக மகளிர் அணியினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

5) மாதம் ஒரு முறை மகளிர் அணி, மகளிர்ப் பாசறைக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திட வேண்டும். வெவ்வேறு இடங்களில் கழக மகளிர் இல்லங்களில் நடத்த வேண்டும்.

6) பெண்களுக்கான உடல் நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மார்பகப் புற்று நோய் பெரும்பாலும் அச்சுறுத்தலாக உள்ளது.

7) வாழ்வியல் சார்ந்த ஆலோசனைக்குழு (கவுன்சிலிங்) அமைக்கப்பட வேண்டும்.

8) பெண்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு, பிரச்சாரக் களம், தேவைப்பட்டால் போராட்டக்களங்கள் அமைக்கப்பட வேண்டும்.

9) வீதி நாடகம், கலை நிகழ்ச்சிக் குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்திட வேண்டும்.

10) கழக மகளிரிடம் இருக்கும் தனி ஆற்றல், திறமை சிறப்புகளை அறிந்து, அத்தகையவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு இயக்க வளர்ச்சிக்கு இவை பயன்படுத்தப்பட வேண்டும்.

11) குறிப்பாக தொலைக்காட்சி, ஊடகங்களில் விவாதிப்பதற்கென்றே தனிப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இறுதியாக நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கூறியவை பயனுள்ளவையாகவே உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவோம் என்று கூறி அன்னை மணியம்மையார் அவர்களின் தலைமைப் பண்பையும், அவர்கள் அய்யாவைப் பேணிக் காத்த பாங்கு குறித்தும், ஏச்சுகளுக்கும், பேச்சுகளுக்கும் மத்தியில் தமது ஒரே நோக்கும், போக்கும் அய்யாவைப் பேணிக் காப்பதே என்பதில் உறுதியாக இருந்ததையும், அய்யா மறைவிற்குப் பிறகு கழகத்திற்குத் தலைமையேற்று கம்பீரமாக நடத்திக் காட்டியது பற்றியும், 'இராவண லீலா' நடத்திக் காட்டிய தீரம் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.

அய்யா - அம்மா திருமண ஏற்பாட்டின் முழுத் தகவல்களையும் விலாவாரியாக எடுத்துக் கூறினார். ராஜாஜி ஆலோசனையின் பேரில்தான் அந்தத் திருமணம் நடந்தது என்ற பிரச்சாரம் முற்றிலும் பொய், உண்மை என்னவென்றால், அந்தத் திருமணத்திற்கு மாறான கருத்தைத்தான் ராஜாஜி ஆலோசனையாகக் கூறினார் என்பதை ராஜாஜியின் கடிதத்தை எடுத்துக் காட்டி நல்லதோர் விளக்கத்தைத் தந்தார்.

பெரியார் - மணியம்மைத் திருமணம் எனும் பெயரில் கழகம் வெளியிட்டுள்ள நூல்களை சலுகை விலைக்குக் கழக மகளிர் அணியினருக்குத் தந்தார். முக்கியமாக மார்ச்சு மாதத்திலேயே அன்னையாரின் பிறந்த நாளும், நினைவு நாளும் வருவதால் மார்ச்சு 10ஆம் தேதி பிறந்த நாள் நிகழ்ச்சியும், 16ஆம் தேதி போராட்ட நாளாகவும் அடுத்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் என்ற கழகத் தலைவரின் அறிவிப்பு முக்கியமானதாகும்.

ஒரு செறிவுள்ள கலந்துரையாடல் கூட்டமாக அது அமைந்திருந்தது என்றே சொல்ல வேண்டும். கழக மகளிர் அணி, பாசறையினர் அமைப்புப் பணி செயல்பாடுகளும் மிக வேகமாக நடைபெற அவற்றின் பொறுப்பாளர்கள் ஈடுபடுவார்களாக!

நிகழ்ச்சி
கடவுள் மறுப்பு : மரகதமணி,  
வரவேற்புரை: செல்வி,

தொடக்கவுரை: துணைத் தலைவர்
கலி. பூங்குன்றன்.

கருத்துக் கூறியோர்: வழக்குரைஞர் வீரமர்த்தினி, பா. மணியம்மை, செல்வி, செ. உமா, மோகனப் பிரியா, சுமதி, பெரியார் செல்வி, இறைவி, நெய்தல் நகர் தமிழரசி, பொறியாளர் இன்பக்கனி, கனகா, வெற்றிச்செல்வி, க. பார்வதி. நன்றி: பூவை செல்வி.

நிறைவுரை: கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.
காலை 11 மணிக்குத் தொடங்கிய கலந்துரையாடல் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு நிறைவுற்றது. அனைவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 60க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர், பாசறையினர் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை ஏ.இ. கோயில் தெருவில் நடத்தப்பட்ட மனுதர்ம எரிப்பு விளக்கப் பொதுக் கூட்டத்தைச் (7.3.2017) சிறப்பாக நடத்திட ஒத்துழைத்த தோழர்களுக்குக் கைத்தறி ஆடைகள் போர்த்திப் பாராட்டப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner