எழுத்துரு அளவு Larger Font Smaller Font


லண்டன், ஏப்.16 இங்கிலாந்து வாழ் தமிழர்கள், லண்டன் இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுத்தார்கள். தமிழ் நாட்டு சமூக நீதிக்கு சவால் விடும் ‘நீட்’ சட்டம் கிழித்துக் குப்பை தொட்டியில் போட்டும், எரித்தும் போராட்டம் நடை பெற்றது. மேலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, இந்திய அரசமைப்புச்சட்டத்தைக் கிழித்துக் குப்பை தொட்டியில் போட்டும், எரித்தும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தமிழர் உரிமைகள் பல வழிகளில் பறிக்கப்படுகிறது

மத்திய பாஜக அரசாங்கத்தை கண்டித்து மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் ஒருங்கிணைத்தார்கள். இதற்காக இங்கிலாந்து வாழ் தமிழர்கள், இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போர் ஆர்ப்பாட்டத்தை  நடத்தினார்கள். லண் டனில் நேற்று (15.4.2018) இந்திய தூதரக அலுவலகம் முன்பாக இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு

சமூக நீதியை சவக்குழியில் தள்ளும் கட்டாய ‘நீட்' தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ‘நீட்' சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றம் ஒருங்கிணைந்து இயற்றிய இரண்டு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ‘நீட்’ சட்டத்தை சுக்கு நூறாக கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டும் எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழர் இசையான பறை இசையோடு எழுச்சியுடன் குழுமி தங்கள் ஒருமித்த குரலை வெளிப்படுத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம்

தமிழக விவசாய உரிமையான காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலி யுறுத்தினர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து குப்பை தொட்டியில் போட்டும், எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழக விவசாய நிலங்களை பாலைவனங்களாக்கும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரினர்.

தமிழர் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 60 பைசாவை மத்திய அரசு கபளீகரம் செய்வதை கண்டித்தனர். தமிழக எல்லைக்குள் விவசாய நிலங்களை அபகரித்து ஊடுருவி செல்லும் கெயில் குழாய் திட்டத்தை கைவிடக் கோரினர். காற்றில் நச்சை கலந்து தமிழரை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தினர். தமிழ்நாட்டு இயற்கை வளத்தை பாதித்து, நீர் வளத்தை உறிஞ்சப் பார்க்கும்  நியூட்ரினோ திட்டத்தை நிறுத்தக் கோரினர். செம்மொழி தமிழை தொடர்ந்து ஆதிக்கம் செய்ய நினைக்கும் இந்தித் திணிப்பை கண்டித்தனர். சமத்துவ சமுதாயம் வாழ விழையும் தமிழர் மத்தியில் சமஸ்கிருத வேத கலாச்சாரத்தை திணிப்பதை கண்டித்தனர். தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழருக்கு முன்னுரிமை வழங்கக் கோரினர். தமிழர் கடலில் கொல்லப்படும் மீனவர்களை பாதுகாக்க வலி யுறுத்தினர்.

‘சாகர் மாலா’ திட்டத்தை எதிர்த்து, தமிழர் கடலில் துறைமுகம் அமைத்து இயற்கை வளங்களை சூறையாட நினைப்பதை தடுக்க வலியுறுத்தி, மீனவர் கிராமங்களை அப்புறப் படுத்த முனைவதைக் கண்டித்தனர்.

தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வழக்காட உரிமை கோரினர். தமிழ் நாட்டில் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்தனர். தமிழ் நாட்டில் போராடும் போராளிகளின் உணர்வுகளை உரிமைகளை மதிக்க, பாதுகாக்க வலியுறுத்தினர். இப்படி தமிழர் படும் எண்ணிலடங்கா இன்னல்களை போக்க, ஒரு குரலில் ஓங்கி ஒலித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் இந்திய பிரதமர் மோடி லண்டன் வருகையால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிற ஆர்ப்பாட்டமாக அமைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் நரேந்திர மோடி போல் வேடம் அணிந்து, நரேந்திர மோடி குரலில் பேசி தமிழ் நாட்டை வஞ்சிப்பதை உணர்ச்சிப் பூர்வமாக நாடக பாணியில் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் லண்டன் வரும் மோடியை வரக் கூடாது #நிஷீஙிணீநீளீவிஷீபீவீ என்று வின்னை முட்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இறுதியில் தமிழர் யாவரும், ஒரே குரலில் ஆங் கிலத்தில், தாம் சமூக பொறியாளராக இயங்கி தமிழர் நலன் காக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். போராட்ட முடிவில் சுவையான மாட்டுக்கறி உணவு கலந்து கொண்ட தோழர்களுக்கு பகிரப்பட்டது. மேலும் தோழர்கள், காமன்வெல்த் மாநாட்டிற்கு லண்டன் வர இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் நாட்டில் தரப்பட்ட கருப்புக் கொடி எதிர்ப்பைப் போலவே லண்டனிலும் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை காட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட அமைப்புகள் அறப்போரில் கலந்து கொண்டார்கள்.

அய்க்கிய ராஜிய தமிழ் மக்கள் Tamil people in the UK, தமிழ் தோழமை இயக்கம் (Tamil Solidarity), பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (Periyar Ambedkar Study Circle), தமிழர் முன்னேற்றக் கழகம் (Thamilar Munnetra kazhagam), மில்டன் கீன்ஸ் மக்கள் (Milton Keynes Makkal), உலகத் தமிழர் அமைப்பு World Tamil Organizatio) இலண்டன் தமிழ்ச்சங்கம் (Loondan Tamil Sangam)

மேலும் பிற அமைப்புகளும், அமைப்பு சாரா தமிழர்கள், பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner