
புதுடெல்லி, ஆக.20-ரயிலில் தூங்கும் வசதி பெட்டியில் பயணம் செய்வோர் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம் என்னும் விதி விரைவில் அமலுக்கு வருகிறது.
ரயில்களில் தற்போது குளுகுளு வசதி செய்யப்பட்ட ஏ.சி. பெட்டிகளிலும், தட்கல் டிக்கெட்டுகளிலும் பயணம் செய்கிற பயணிகள் மட்டும் அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும், பயணச் சீட்டு பரிசோதகர் கேட்கிறபோது காட்ட வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது.
இந்த நிலையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்பதற்கு முன்பதிவு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கற்பனையான ஒருவர் பெயரில் முன்பதிவு செய்த பயணச் சீட்டில் மற்றொருவர் பயணம் செய்கிற சம்பவங்களும் நடக்கின்றன. திடீர் விபத்துக்கள் நடக்கிறபோது, பயணச் சீட்டு யார் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ, அவர் பாதிக்கப்பட்டவராக தகவல் வெளியாகி விடுகிறது. ஆனால் அந்த பயணச் சீட்டில் அவர் பயணம் செய்யாமல் வேறொருவர் பயணம் செய்திருப்பார். இதனால் சட்டசிக்கல்கள் எழுகின்றன.
இந்தப் பிரச்சினைகளில் தூங்கும்வசதி கொண்ட பெட்டிகளில் (முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு) பயணம் செய்கிற அனைத்து பயணிகளும் பயணத்தின்போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற விதியை ரயில்வே நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
இது விரைவில் நடைமுறைக்கு வரும் என ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே தூங்கும் வசதி பெட்டியில் பயணம் செய்கிற பயணிகள் வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசு வழங்குகிற அடையாள அட்டைகள், பள்ளி-கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான அடையாளஅட்டை, ஆதார் அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ்புத்தகம் (வாடிக்கையாளர் ஒளிப்படத்துடன் கூடியது), வங்கிகள் வழங்கும் கடன் அட்டை ஆகிய 9 ஆவணங்களில் ஒன்றை அடையாள அட்டையாக வைத்திருக்க வேண்டும்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே வெளியிட்டதும், இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.