
திருவனந்தபுரம், ஆக. 19-கேரள மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல இடங்களிலும் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் நிலச்சரிவு மற்றும் கிராமங்களில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் இடுக்கி அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேலும் அணையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம், தொடு புழா, பைங்கோடு, பைங் கூட்டூர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 5 பேர் உயிர் இழந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து வலுவடைந்து வரும் மழையால் மடக்காப்புளி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குஞ்சச்சா மற்றும் நளினி என்ற பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர் . இதனால் சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த 5 பேரின் உடல்களை தீயணைப்பு வீரர்களும், துணை ராணுவத்தினர் மற்றும் கப்பல் படையினர் இணைந்து தேடி வருகின்றனர். இடுக்கி, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல இடங்களிலும் மழையின் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டன.
கடவூர் என்ற இடத்தில் நேற்றிரவு பெய்த மழையால் 3 வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. திருவனந்தபுரம், காசர் கோடு, பத்தினம்திட்டை ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. கோவளம், சங்குமுகம் கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக சுற்றுலாப்பயணிகள் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.