எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 8- தமிழுக்காகவும், தமிழர்களின் நல்வாழ் வுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட முத்தமிழ் அறிஞர் தி.மு.க. தலைவர் கலைஞர் (வயது 94) அவர்கள் நேற்று (7.8.2018) மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார்.

பின்னர் அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் மயிலாப்பூர் சி.அய்.டி. காலனியில் உள்ள அவரது துணைவியார் இல்லத்திலும், பின்னர் சென்னை ராஜாஜி அரங்கில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

மறைவுற்ற கலைஞர் அவர்களின் உடலுக்கு திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (8.8.2018) காலை நேரில் சென்று மலர் மாலை வைத்து திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் கலைஞரின் குடும்பத்தார் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

கலைஞரின் மறைவு தகவல் அறிந்ததும் தமிழகத் திலும் மற்றும் இந்தியாவின் பிற மாநில கட்சித் தலை வர்கள், முதலமைச்சர்கள் நேரிலும் இரங்கல் அறிக்கையின் வாயிலாகவும் தங்களின் மரியாதையை தெரிவித்தனர்.

பிரதமர் மோடி மரியாதை

இந்திய பிரதமர் மோடி அவர்கள் இன்று (8.8.2018) முற்பகல் சென்னை வந்து கலைஞர் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

டி.ராஜா மரியாதை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அவர்கள் இன்று (8.8.2018) முற்பகல் சென்னைக்கு வந்து கலைஞர் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியா செலுத்தினார்.

மம்தா மரியாதை

நேற்று (7.8.2018) இரவு கோபாலபுரத்தில் வைக்கப்பட் டிருந்த கலைஞரின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் கலைஞர் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். கலை உலகை சேர்ந்தவர்கள், இலக்கியவாதி கள் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்தவர்கள் நேரில் வந்து கலைஞர் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதுமிருந்து திமுக மற்றும் பல்வேறு கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக வந்து கலைஞர் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

தேர்வுகள் ரத்து

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மரணம் அடைந்த தால் பல்கலைக்கழகம் சார்பில் இன்று (8.8.2018) நடைபெற இருந்த எழுத்துத் தேர்வுகள மற்றும் செயல் முறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என அறிவித்துள்ளார்.

தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை

கலைஞர் உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். தேசிய துக்க நாளாக அறிவிப்பு

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள் ளது. இன்று மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், மாநில தலைநகரங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏழு நாள் அரசு முறை துக்கம்

கலைஞர் மறைவை முன்னிட்டு புதன்கிழமை (ஆகஸ்ட் 8) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத் தியநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும். முன்னாள் முதல்வர் கலைஞரின் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 8) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும்.

ராணுவ மரியாதையுடன்

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவும், அந்தத் தருணத்தில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், கலைஞரின் மீது தேசியக் கொடி போர்த்தி, ராணுவ மரியாதையுடன் குண்டு முழங்க மரியாதை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சார்ந்த விழாக்கள் ரத்து செய்யப்படும். தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

புதுவையில் 3 நாள்கள் துக்கம்

திமுக தலைவர் கலைஞரின் மறைவையொட்டி, புதுவை அரசு சார்பில் 3 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப் படும் என்றும், மாநிலத்தில் புதன்கிழமை (ஆக.8) பொது விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்க ளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்த பேட்டி: தமிழர்களின் தலைவராக 50 ஆண்டுகள் ஏற்றத் தாழ்வு களை சந்தித்து 5 முறை முதல்வராக இருந்தவர் கலைஞர். தமிழக மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றியதுடன், தேசிய அரசியலில் முக்கிய இடம் பிடித்தவர்.

அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் சென்றார். பிரதமர்களை உருவாக்கியவர். பொது வாழ்க் கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இத்தகைய பெருமைகளை கொண்ட கலைஞர் மறைவு தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு என்று கூறினார்.

பொது விடுமுறை: திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி, புதுவை மாநிலத்தில் புதன்கிழமை (ஆக.8) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு சார்பில் 3 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

இரு நாள்கள் துக்கம் அனுசரிப்பு

கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்த 2 நாள் துக்கம் அனுசரிக்கிறது பீகார் மாநில அரசு. இரு நாட்கள் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து, தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

தேசியத் தலைவர்கள் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி : பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்த துயரமான நேரத்தில், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் அவரது எண்ணிலடங்கா தொண்டர்களுடன் என் எண்ணங்கள் இணைந்திருக்கும். கலைஞரின் மறைவு இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. கருணாநிதியுடன் பல சமயங்களில் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தி ருக்கிறது. சமூக நலனின் கொள்கையையும், முக்கியத்து வத்தையும் புரிந்து கொண்டவர் அவர். ஜனநாயக கோட் பாடுகளை உறுதியுடன் கடைபிடித்த கலைஞர், நாட் டின் அவசர நிலை பிரகடனத்தை கடுமையாக எதிர்த்து நின்றது என்றும் நினைவில் நிற்கும்.

பிராந்திய நலனுக்காக பாடுபட்ட கலைஞர் கருணா நிதி, தேசிய வளர்ச்சிக்கும் துணை நின்றவர். தமிழர்களின் நலனில் உறுதியுடன் இருந்த அவர், தமிழகத்தின் குரலாக ஓங்கி ஒலித்தவர். அப்படிப்பட்ட தலைவர் காலமானது மிகவும் சோகத்தை தருகிறது.  நாட்டின் மூத்த தலைவர் அவர். ஆழமாக வேரூன்றிய மாபெரும் தலைவர், மிகச் சிறந்த சிந்தனையாளர், திறமையான எழுத்தாளர், தைரியமிக்க மற்றும் ஏழைகள், அடித்தட்டு மக்களின் நலனுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த தலைவரை நாம் இன்று இழந்து விட்டோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: கலைஞர் கருணாநிதியின் மறைவு இந்திய அரசியலில் மிகப்பெரிய இழப்பு. தமிழ் சமுதாயம், தமிழ்நாட்டுக்கு அவர் செய்த பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும். அவர் ஏழைகள், உதவி தேவைப்படுவோருக்காக பணியாற்றி தன்னையே தியாகம் செய்தவர். அவரது மறைவுக்கு எனது இரங்கலையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சுமித்ரா மகாஜன் (மக்களவை சபாநாயகர்): திமுக  தலைவர் கலைஞர் கருணாநிதியின் நீண்டகால  அரசியல் வாழ்வில், வியத்தகு தலைமை பண்புகளுடன் இயங்கிய வர். மக்களின் நலனுக்காக  பாடுபட்டவர். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படும் மிகப்பெரிய மக்கள் தலைவர். தனது வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர். மிக்சிறந்த அரசியல் தீர்க்கதரிசியாகவும்,  நிர்வாகியாகவும் அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். நிதின் கட்கரி (மத்திய அமைச்சர்) : திமுக தலைவர் கலைஞர் காலமானார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். தமிழக மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் ரூபானி (குஜராத் முதல்வர்): தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் டாக்டர்.மு.கருணாநிதி மறைந்து விட்டார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி யது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார் : தமிழ்நாட் டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர்  மு.கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். இந்திய அரசியல் சாம்ராஜ்யத்தில் வெகுஜன மக்களின் தலைவராக அவர் என்றும் நினைவில் நிற்பார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத் தினருக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன் என்று கூறியுள்ளார்.

தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ்: கலைஞ ரின் மறைவு இந்திய அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். அரசியல் பற்றி பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்திய ஒரு சில தலைவர்களில் கலைஞரும் ஒருவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தின ருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன்.

கருநாடகா முதல்வர் குமாரசாமி: தனது வாழ்நாள் முழுவதும் தமிழர்கள் நல்வாழ்வு, தமிழகத்தின் மேம் பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, நாட்டில் மாநில கட்சிகள் பலமாக வளர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரின் இழப்பு தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தேசத்திற்கும் பேரிழப் பாகி உள்ளது. நமது நாடு மூத்த தலைவரை இழந்துள்ளது. அவர் வாழும் காலத்தில் வரலாறாக வாழ்ந்து மறைந்து உள்ளார்.

கேரள ஆளுநர் சதாசிவம்: கலைஞர் கருணாநிதி மறைவு தமிழ்நாட்டுக்கு பெரும் இழப்பாகும். அவரு டைய ராஜதந்திரமும், பன்முக திறமையும் ஒருங்கே பெற்றவர். அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும், ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலும் இருந்தன.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: இந்திய அரசியல், கலை, இலக்கியம், திரைப்பட துறைக்கு கலைஞர் கருணாநிதியின் மறைவு பெரிய இழப்பாகும். அவரது மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது இதயம் சார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கி றேன். இந்திய அரசியல் அரங்கில்  கலைஞர் மறக்க  முடியாத இடத்தை பிடித்துள்ளார்.  ஈடு இணையில்லாத பங்களிப்புகள் மூலம் தமிழ் திரை உலகிலும், இலக்கிய துறையிலும் அவர் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர்: பொது வாழ்வின் மூலம் தமிழகத்துக்கும், தேசத்துக்கும் பெரும் சேவை ஆற்றியவர் திமுக தலைவர் கலைஞர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என்இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரகுபர் தாஸ் (ஜார்க்கண்ட் முதல்வர்): கலைஞரின் மறைவால் இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றி டத்தை இனி எப்போதும் நிரப்ப முடியாதது.

நிதிஷ் குமார் (பீகார் முதல்வர்): ஜனநாயகத்தின் மதிப்பையே எப்போதும் உச்சமாக கருதும் மிகப்பெரிய அரசியல் தலைவரை நாடு இழந்து விட்டது.

தேவேந்திர பட்நவிஸ் (மகாராஷ்டிரா முதல்வர்): கலைஞரின் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு. தமிழக அரசியலை புதிய திசைக்கு மாற்றிய புகழ்மிக்க தலைவர் அவர்.

தலைவர்கள், பிரமுகர்கள் இரங்கல்

திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெவித்துள்ளனர்.

பொன். ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க. மத்திய அமைச் சர்): அரசியல் நிலையை தனது புத்திக் கூர்மையான செயல்பாட்டின் மூலமாக எத்திசைக்கும் இழுத்துச் செல்லும் வல்லமை படைத்தவருமான திமுக தலைவர் கலைஞர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு எவராலும் நிரப்ப இயலாது.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): அரசியல் இமயம் சரிந்தது, ஓய்வறியா உதய சூரியன் ஓய்வெடுக்கச் சென் றது. தமிழன்னை தன் தலைமகனை, முத்தமிழ் அறி ஞரை, செம்மொழிக் காவலரை இழந்து கண்ணீர் சிந்து கிறாள். தமிழினமும், தமிழ் மொழியும் உள்ளவரை கலைஞரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக): தமிழக அரசியலில் ஒரு வரலாறு முடிந்து இருக்கிறது. இன்னொரு அரசியல் வரலாறு அவரைப் போன்று இன்னொருவர் எழுத முடியாது என்பதை அவரே எழுதிச் சென்றிருக்கிறார்.

இரா.முத்தரசன் (இ.கம்யூ): வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி கண்ட கலைஞர், தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நீங்காமல் நிலைத்து நிற்பார்.

கே.பாலகிருஷ்ணன்(மா.கம்யூ): பெண்களுக்கு சொத் தில் சம உரிமை, சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர் சிலை என கலைஞரின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளம். அவரது மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பாகும்.

விஜயகாந்த் (தேமுதிக): இந்த யுகத்தின் ஈடு இணையில்லா தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன்.

வைகோ (மதிமுக): கோடான கோடி தமிழர்களின் உள்ளங்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு கலைஞர் உயிரி ழந்துவிட்டார்.

ராமதாஸ் (பாமக): அவரது ஆட்சியில்தான் அதிகாரத் தின் உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப் பட்ட மக்கள் அமருவதற்கான படிக்கட்டுகள் அமைக்கப் பட்டன. கலைஞரின் மறைவு திமுகவுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். நடிகர் ரஜினிகாந்த்: என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். கவிஞர் வைரமுத்து: கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கி தொழுகிறேன்.

பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): கலைஞர் மறைவு தமிழக பொதுவாழ்வுக்கு பேரிழப்பாகும். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி (பாமக): தமிழக அரசியலில் எத்த னையோ புயல்கள் வீசிய போதிலும், அவற்றுக்கெல்லாம் அசையாமல் 50 ஆண்டுகள் தலைவராக களப்பணி ஆற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

ஜி.கே.வாசன் (தமாக): தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் அவர் ஆற்றிய பங்கு மிகச்சிறப் பானது. கலைஞரின் மறைவுக்கு கனத்த இதயத்தோடு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ருமாவளவன் (விசிக): சமத்துவத்தை நிலைநாட்டு வதற்காக தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரம் அமைத்தவர் திமுக தலைவர் கலைஞர். அவரது மறைவுக்கு கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்.

டிடிவி தினகரன் (அமமுக): தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், அய்ந்து முறை முதலமைச்சராக இருந்தவருமான கலைஞர் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது.

சரத்குமார் (சமக): மிகக் குறுகிய காலத்தில் கட்சியில் தனது திறமையை நிரூபித்து அறிஞர் அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்குப் பின்னர் திமுக என்ற மிகப் பெரிய கட்சியின் தலைவராக தன்னை உயர்த்திக் கொண்டவர்.

தி.வேல்முருகன் (தவாக): இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவருமான கலைஞரின் மறைவு, உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி): சமூகநீதி என்றால் இடஒதுக்கீடு என்ற அளவில் முடிந்து போய் விடக்கூடியது அல்ல; எல்லா நிலையிலும் எவரும் சமத்துவம் என்ற நிலையை எய்துவதே என்ற புரிதலை கலைஞர் கொண்டிருந்தார்.

கே.எம்.காதர் மொகிதீன் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்): காயிதே மில்லத் பெயரால் கல்லூரிகள், காயிதே மில்லத் மணிபண்டம் அடிக்கல் நாட்டு விழா, மீலாது விழாவுக்கு அரசு விடுமுறை என பல சமூக நலத்திட்டங்களை சிறுபான்மை சமுதாயங்களுக்கென்றே வகுத்து நடைமுறைப்படுத்திய மாபெரும் மனிதநேய தலைவர் கலைஞர்.

தொழிலதிபர் ஜெம் வீரமணி: அரசியல் பணி மட்டு மின்றி, தமிழ்ப் பணி, சமுதாயப் பணிகளில் சாதனை படைத்து தொழில் துறை வளர்ச்சிக்கும் வித்திட்டவர் கலைஞர். மாநில சுயாட்சிக்காகப் போராடியவர். தொழில் துறைக்கும் தமிழ் துறைக்கும் பல்வேறு சாத னைகளைச் செய்திருக்கிறார். கை ரிக்ஷா முறையை ஒழித்தவர். தமிழகத்துக்கு அவர் கொண்டு வந்த பல முன்னோடித் திட்டங்களை இன்றைக்கு பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. அவரது மறைவு உலக தமிழ்ச் சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும்.

தென்னிந்திய நடிகர் சங்கம்: ஒரு எழுத்தாளராக சினி மாவில் அவரைப்போல் சாதித்தவர் எவரும் இல்லை. திமுக தலைவர் கலைஞருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய தேசிய லீக் தேசியப் பொதுச் செயலாளர் எம்ஜிகே நிஜாமுதீன், தமிழக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் க.ஜான்மோசஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு ஏஅய்டியூசி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், சிஅய்டியூ மாநிலக் குழுவின் தலைவர் அ.சவுந்தரராஜன், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், டில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இந்து பாலா, பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, சமூக சமத்துவத்துக் கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner