எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி,  ஜூலை 3 இந்திய ராணுவத்தில் அக்னி-5 ஏவு கணை விரைவில் சேர்த்து கொள்ளப்பட இருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது அக்னி-5 ஏவுகணை. இந்தியாவிடம் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக இது கருதப்படுகிறது. இந்த ஏவுகணை மூலம், சீனாவிலுள்ள பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங் உள்ளிட்ட எந்த நகரங்களையும் இந்தியாவால் தாக்க முடியும்.

அக்னி-5 ஏவுகணையை கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியா முதன்முதலில் சோதித்து பார்த்தது. இதையடுத்து, 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2ஆவது முறையாக அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பின்னர் 3ஆவது முறையாக 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், 4ஆவது முறையாக 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் அக்னி-5 ஏவுகணை சோதிக்கப்பட்டது.

இதையடுத்து, அக்னி-5 ஏவுகணை 5ஆவது முறையாக கடந்த ஜனவரி மாதம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த 5 சோதனைகளும் வெற்றிகரமாக அமைந்தன.

அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தில் அக்னி-5 ஏவுகணை விரைவில் சேர்த்து கொள்ளப்பட இருக்கிறது. இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறுகையில், “இந்திய ராணுவத்தில் உள்ள எஸ்.எஃப்.சி. படைப்பிரிவிடம் அக்னி-5 ஏவுகணை விரைவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பு மேலும் சில முறை அந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்படவுள்ளது. இதேபோல், சுகோய் 40 போர் விமானத்தில் இருந்து செலுத்தப்படும் வகையில் பிரமோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் பணியும் நடந்து வருகின்றன’ என்றன.

அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், வடகொரியா போன்ற சில நாடுகளிடம் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் இருந்தன. அக்னி-5 ஏவுகணையை உருவாக்கியதன் மூலம், அந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்திய ராணுவத்தில் அக்னி-5 ஏவுகணை சேர்த்து கொள்ளப்பட்டால், அது நமது நாட்டு ராணுவத்தின் திறனை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner