எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அமராவதி, ஏப்.16 ஆந்திர மாநிலத் துக்கு பிரதமர் மோடி வந்தால், தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவித்ததைப்போல் கடுமை யாக எதிர்ப்போம். இதில் மாற்றமில்லை என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதித் தொகுப்பும் அளிப்பதாக வாக்குறுதி அளித்த மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள். மத்திய அமைச்சர் பதவிகளையும் ராஜினாமா செய்து, பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தனர். மேலும், நாடாளுமன்றத்திலும் கடந்த 23 நாட்களாக தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி அவையை முடக்கினார்கள்.

இந்நிலையில், தலைநகர் அமராவதியில் உள்ள மங்களகிரியில் காவல்துறை தொழில்நுட்ப மய்யத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று (13.4.2018) திறந்து வைத்தார்.

அங்கு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ‘’வரலாற்றில் எங்கேயாவது நாடாளுமன்றம் முடக்கப்பட்ட தற்காக ஒரு நாட்டின் பிரதமர் உண்ணாவிரதம் இருந்து பார்த்திருக்கிறீர்களா? நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் போனது மத்திய அரசின் இயலாமைத்தனம், செயலற்ற போக்கு. அதற்கு உண்ணாவிரதம் இருந்தால் அனைத்துக்கும் தீர்வு வந்துவிடுமா?

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு கடந்த 4 ஆண்டுகள் காலம் பொறுமையாக இருந்தோம். ஆனால், மத்திய அரசு எங்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இனிமேலும், பாஜகவுடன் இருந்தாலும் பயனில்லை என்பதால், ஆட்சியில் இருந்து வெளியேறினோம். ஆந்திர மாநிலத்துக்கு எந்தவிதமான அறிவிப்பையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. இப்போது, எங்களுக்கு எதிராக மோடி உண்ணாவிரதம் இருக்கிறார். மோடிக்கு எதிரான எங்களுடைய எதிர்ப்பு தொடரும்.

சென்னைக்கு மோடி சென்றபோது தமிழக மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தார்களோ அதேபோன்ற எதிர்ப்புதான் மோடி ஆந்திர மாநிலம் வந்தாலும் கிடைக்கும். அதைக் காட்டிலும் அதிகமான எதிர்ப்பைத் தெரிவிப்போம், என்னைப் பொறுத்தவரை ஆந்திர மாநிலத்துக்கு வரும் அளவுத்து துணிச்சல் கிடையாது.

சென்னைக்கு பிரதமர் மோடி வந்தார் என்றால் தமிழகத்தில் நடப்பது பாஜகவின் கைப்பாவை ஆட்சி. அதனால், தமிழகத்துக்கு துணிச்சலாக பிரதமர் சென்றார். முன்னர், அனைவரும் பிரதமர் மோடியைப் பார்த்து அச்சப்பட்டனர். ஆனால், இப்போது அனைவரும் துணிந்துவிட்டனர். மோடி அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டனர்.’’
இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner