எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.10 புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி எம். ராஜ்குமார்  இந்திய வனப் பணித் தேர்வில் (அய்எப்எஸ்) மாநிலத்தில் 14 பேரில் ஒருவராகத் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

இந்திய ஆட்சிப் பணி (அய்ஏஎஸ்) முதன்மைத் தேர்விலும் அவர் தேர்வாகியுள்ள நிலையில், மார்ச் 14ஆம் தேதி நடை பெறவுள்ள நேர்காணலில் பங்கேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலகக் கண்காணிப்பாளர் ஆர். மனோகரன், புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை எஸ். சிவகாமசுந்தரி ஆகியோரின் மகன் எம். ராஜ்குமார்  . ராமநாதபுரம் சையது அம்மாள் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்தபோது, மாவட்ட அளவில் இரண்டாமிடம் எடுத்த ராஜ்குமார், அண்ணா பல்கலைக்கழகத்தில் விமானப் பொறியியல் பட்டம் பெற்றார்.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணயத்தின் இந்திய வனப் பணித் தேர்வில் (அய்எப்எஸ்)  தமிழகத்தின் 14 பேர் உள்பட நாடு முழுவதும் 89 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களில் ஒருவர் ராஜ்குமார். இதுகுறித்து ராஜ்குமார் கூறியது:  பள்ளிக் கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்தான் முடித்தேன். அறிவியல் துறையில் ஆர்வமிருந்ததால் வானூர்திப் பொறியியல் முடித்தேன். அதன்பிறகு அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ் தேர்வுகளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அதற்காகப் படித்தேன். தற்போது அய்எப்எஸ் தேர்வில் தேர்வாகியுள்ளேன். வரும் மார்ச் 14ஆம் தேதி அய்ஏஎஸ் தேர்வுக்கான நேர்காணல் நடை பெறவுள்ளது. அதில் அய்ஏஎஸ் அல்லது அய்பிஎஸ் கிடைத்தால் இதைத்தான் தேர்வு செய்வேன். கிடைக்காதபட்சத்தில் தற்போது தேர்வாகியுள்ள வனப்பணியை எடுத்து இரண்டாண்டுப் பயிற்சியை முடித்து, வனப் பணிக்குச் செல்வேன்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்போர் கொஞ்சமும் கூட நம்பிக்கையை இழக்கத் தேவையில்லை, உறுதியாக எல்லா உயர்கல்விக்கும் செல்லலாம் என்றார் ராஜ்குமார்.

நிலுவைத்தாள் மாணவர்களுக்கு பெரியார் பல்கலை.யில் சிறப்புத் தேர்வு

சென்னை, பிப்.10 பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் முடிக்காமல் நிலுவைத் தாள்களை வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 8.2.2019 அன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்று தங்கள் படிப்பு வருடம் முடிந்து, அதன் பின்னரும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவைத்தாள் வைத்துள்ள மாணாக்கர்களின் நிலுவைத்தாள்களை,  தேர்வு எழுதுவதற்கான சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது.  நிலுவைத்தாள்கள் வைத்துள்ள மாணவர்கள் அவர்கள் அப்போது பயின்ற பழைய  பாடத் திட்டத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் வழக்க மான தேர்வுக் கட்டணத்துடன் ஒறுப்புக் கட்டணமாக ரூ.2000-ம் ஒவ்வொரு பாடத்தாளுக்கும் சேர்த்து செலுத்த வேண்டும். பல்கலைக்கழக இணைவு பெற்றிருந்த பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடம் பயின்று படிப்பு வருடம் முடிந்து, அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த மாணாக்கர்களின் நிலுவைத்தாள்கள் தேர்வு எழுதுவதற்கான சிறப்புத் தேர்வு நடைபெற உள்ளது. அம் மாணாக்கர்கள் பயின்ற பழைய  பாடத் திட்டத்திலேயே தேர்வு எழுதலாம்.

மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ஒறுப்புக் கட்டணமாக ரூ.1500-ஒவ்வொரு பாடத்தாளுக்கும் சேர்த்து செலுத்த வேண்டும். மேற்கண்ட மாணாக்கர்களின் தேர்வுகள் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ளது.  அதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் பெற்றுக் கொள்ளலாம். பெரியார்  பல்கலைக்கழக இணைய தளத்தின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிச்சாவரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

சிதம்பரம், பிப்.10  சிதம்பரம் அருகே பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளில் வனத் துறை சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்புப் பணியின்போது, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இனம்காணப்பட்டன.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் மாங்குரோவ் வனப்பகுதிக்கு உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக் காகவும் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன.

இப்பறவைகளை வனச்சரக அலுவலர் எம்.வெங்கடேசன் தலைமையில் பறவையியல் வல்லுநர் சம்பத்தின் நேரடி கண் காணிப்பில் கணக்கெடுக்கும் பணி வியாழன் (பிப்.7), வெள்ளி (பிப்.8) ஆகிய இரு நாள்களாக நடைபெற்றது. கணக்கெடுப்புக் குழுவில் வனவர் ஜி.ஞானசெல்வி, வளக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், ஜே.ஆறுமுகம், எம்.சங்கர், வனக்காவலர்கள் எம்.ராஜாராம், சி.ரமேஷ், கஜேந்திரன், படகு ஓட்டுநர்கள் மாரி, முத்துக்குமரன் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இந்தக் கணக்கெடுப்புப் பணியின்போது, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இனம் காணப்பட்டன. இவற்றில் 10 வெளிநாட்டுப் பறவை இனங்களும் அடங்கும்.

இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு

சென்னை, பிப்.10  இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. முதல் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு ஜனவரி 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் தாள்-1 ஜனவரி 19 ஆம் தேதியும், தாள் இரண்டு ஜனவரி 31 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. இப்போது, இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எப்போது? இந்த தேர்வானது ஏப்ரல் 7 முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண் ணப்பிக்க மார்ச் 7 கடைசியாகும்.  மேலும் விவரங்களுக்கு  இணையதளங் களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner