எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ. 13- தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில், 40 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால் பணிகளை செய்வதில் பிரச்னைகள் ஏற்படுகிறது. மின் உற்பத்தி கரி கிடைப்பதில் தாமதம் ஆகிறது. எழுத்துப்பிரிவில், 10,000 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் மின்சாரச் சட்டத்தால் மேலும் பல பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை கண்டித்து, 17ஆம் தொழிற்சங்கங்கள் சேர்ந்து வரும் டிசம்பர், 7ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், மின்சார அலுவலகங்களுக்கு முன்பு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

நேரு அருங்காட்சியகம், நூலகம் அமைந்த வளாகத்தை அழிக்க முயற்சி

மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, நவ. 13- ஜவகர்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைந்துள்ள தீன்மூர்த்தி பவனின் அடையாளத்தை மத்திய அரசு அழிக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாஜக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்கு அடங்காமல் சென்றது மட்டுமல்ல, அதற்கான வரி நிர்ணயங்களின் மூலம் ரூ. 11 லட்சம் கோடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசின் கருவூலத்துக்குச் சென்றுள்ளது. சர்தார் வல்லபபாய் படேலுக்கு ரூ. 3,000 கோடியில் சிலை வைத்து பாஜக கொண்டாடுகிறது. இந்தச் சிலை பாஜக-வின் உண்மை நோக்கத்தை பிரதிபலித்திருக்கிறது.  காந்தியார் பிறந்த குஜராத் மாநிலம் என்பதை மாற்றி, "படேல் பூமி' என்று சித்திரிப்பதன் மூலம் தேச தந்தை காந்தியின் புகழை மறைக்கலாம் என கனவு காண்கின்றனர்.

இதேபோன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் புகழை அழிக்கும் வகையில், நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைந்துள்ள தீன் மூர்த்தி பவன் வளாகத்தை, அனைத்துப் பிரதமர்களுக்கான நினைவு இல்லமாக மாற்ற பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது. தீன்மூர்த்தி பவனில் மாற்றங்கள் செய்யக் கூடாது என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ. 13- மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, மருத்துவ மனைகளில் போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு வைப்பதோடு, சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித் தும், டெங்கு-பன்றி காய்ச்சல் நோய் பாதிப்புக்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என்பது குறித்தும் அறிக்கையை வருகிற 20ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டு வருகிற 20-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner