
மாஸ்கோ, ஆக.18-ரஷியாவின் அதிபராக விளாடிமி புதின் பதவி வகிக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது தடவையாக அதிபராகி உள்ளார். இதற்கு ரஷியாவின் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது அதிபர் புதினுக்கு எதிராக பாடல் பாடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து அந்த பாடலை பாடிய பாடகர் குழுவை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிபர் புதினுக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மரினாசிரோவா குற்றம் சாட்டப்பட்ட 3 பெண்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
இதற்கு ஐரோப்பிய வெளியுறவு தலைவர் காத்ரீன் ஆஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதவிர ரஷியாவில் நூற்றுக்கணக்கானோர் கண்டன பேரணியும் நடத்தினார்கள்.