எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன்,  ஜன.17  சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு கடுமையான பொருளாதார பேரழிவை சந்திக்கும். அவர்களை பாதுகாக்க 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும். அதே நேரத்தில், குர்துகளும் துருக்கியின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை மிக பிரபலம் அடையாத அய்.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவிலும், ஈராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினர். அவர்களது அதிவேக முன்னேற்றத்தாலும், கொடூரமான போர் முறையாலும் நிலைகுலைந்த சிரியா ராணுவமும், கிளர்ச்சியா ளர்களும் பின்வாங்கினர். இதையடுத்து அய்.எஸ். பயங்கர வாதிகளின் பலம் அதிகரித்தது.

இந்த நிலையில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் உதவியுடன் சிரியாவிலுள்ள குர்து மற்றும் கிளர்ச்சிப் படையிரும், ரஷ்யாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்டு வந்த தீவிர நடவடிக்கைகளால் அய்.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த 95 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டன. அய்.எஸ்.ஸுக்கு எதிராக சண்டையிட்டு வரும் குர்துகள் மற்றும் கிளர்ச்சிப் படையினருக்கு ஆதரவாக அங்கு 2,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், சிரியாவில் அய்.எஸ்.ஸை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறிவிட்டதால், அங்கிருக்கும் வீரர்கள் அனைவரையும் திரும்ப அழைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தார். இப்போது அங்கிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவது, குர்துப் படையினரை நிர்க்கதியாக தவிக்கவிட்டு செல்வதற்கு சமம் என்று பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன.

சிரியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, குர்துப் படையினரை துருக்கி ராணுவம் வேட்டையாடும்.  அங்கு ஒரு ரத்தக் களறியான புதிய யுத்தம் ஆரம்பம் ஆகும் என்று குர்து விவகாரங்களில் தேர்ச்சி பெற்ற அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான், துருக்கிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

துருக்கி அதுபோன்ற தாக்குதல்களை தொடுக்கும்பட்சத்தில் அமெரிக்க அந்த நாட்டின் மீது மிகப்பெரிய பொருளாதார தடைகளை அமல்படுத்த தயாராக உள்ளது என்பதை டிரம்ப்பின் இந்த அறிவிப்பு எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner