எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உக்ரைன், டிச. 6- ஆசோவ் கடல் பகுதியில் தங்களது கப்பல்களுக்கு விதித்திருந்த தடையை ரசியா தளர்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, உக்ரைன் போர்க் கப்பல்களை ரசியா சிறைப்பிடித்து, அந்த நாட்டு வீரர்களைக் கைது செய்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் சற்று தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் வோலோடிமீர் ஓமல்யான் கூறியதாவது:

ஆசோவ் கடல் வழியாக எங்களது பெர்டியான்ஸ்க் மற்றும் மாரிபோல் துறைமுகங்களுக்கு உக்ரைன் கப்பல்கள் செல்வதற்கு ரசிஷியா அனுமதி அளித்துள்ளது. கெர்ச் ஜலசந்தி வழியாக எங்களது கப்பல்கள் துறைமுகங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பகுதியில் போக்குவரத்து ஓரளவுக்கு மீண்டும் தொடங்கியுள்ளது.

எனினும், எங்களது 17 கப்பல்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இன்னும் சில நாள்களில், எங்களது துறைமுகங்களுக்குச் செல்லும் வழியில் ஏற்படுத்தியுள்ள தடையை ரசியா முழுமையாக விலக்கிக் கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

கடந்த 2013-ஆம் ஆண்டில், உக்ரைன் அதிபராக விக்டர் யானுகோவிச் பொறுப்பு வகித்து வந்தார். ரசிய ஆதரவாளராக அறியப்படும் அவரது ஆட்சிக்கு எதிராக அய்ரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிர்க்கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உக்ரைன் அரசு முடங்கியது.

இந்தச் சூழலில், உக்ரைனின் அங்கமாக இருந்த கிரைமீயா வுக்கு கடந்த 2014-இல் படைகளை அனுப்பிய ரசியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதை யடுத்து, புதிய அதிபர் பெட்ரோ பொரொசென்கோவின் அரசுக்கு எதிராக, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.

ரசிய ராணுவ உதவியுடன் சண்டையிட்ட அவர்கள், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினர்.

இதனால், ரசியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில், கிரைமீயா அருகே கடந்த வாரம் வந்துகொண்டிருந்த உக்ரைன் போர்க் கப்பல்கள் மீது ரசிய கடலோரக் காவல் படை தாக்குதல் நடத்தி, அவற்றை சிறைப்பிடித்தது. மேலும், அந்தக் கப்பல்களில் இருந்த 24 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தப் பிராந்தி யத்தில் இதுவரை நடந்திராத இந்தச் சம்பவத்தால், ரசியாவுக் கும், உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஆசோவ் கடல் பகுதி வழியாக தங்களது துறைமுகங்களுக்கு தங்கள் கப்பல்கள் செல்ல ரசியா தடை விதித்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில், இந்தத் தடை பகுதி அளவில் விலக் கிக் கொள்ளப்பட்டதாக உக்ரைன் தற்போது தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner