நல்ல உடல் நலமும், பாதுகாப்பும் வளமும் துணிவும் - அடக்கத்துடன் கூடிய வீரமும் ஆழ்ந்த கல்வியறிவும், தேர்ந்த பகுத்தறிவுச் சிந்தனையும் தேக்கி வளர்த்து வருபவர்கள் திராவிடர் கழக இளைஞர்களும் மாணவர்களும் என்றே அமைதல் வேண்டும் என்பது நமது விழைவு ஆகும்.
எனவே கழகக் குடும்பத்தவர்களும், கழக நண்பர்களும், பொறுப்பாளர்களும் பெரியார் வீரவிளையாட்டுக் கழக அமைப்பின் பணிகளை மேலும் தீவிரப்படுத்துங்கள்.
கோடை விடுமுறையில் பகுத்தறிவுப் பயிற்சி வகுப்புக்களை ஆங்காங்கே ஏற்பாடு செய்வது போலவே,
வீரவிளையாட்டு பயிற்சிகளையும், கிராமங்கள் - நகரங்கள் - சிற்றூர், பேரூர்களில் எல்லாம் வாய்ப்பு உள்ள ஊர்களில் நடத்துங்கள்.
சடுகுடு (கபாடி), சிலம்பாட்டம், மல்யுத்தப் பயிற்சி, கராத்தே, டேக்வாண்டே முதலியவற்றை இருபால் இளைஞர்களுக்கும் - கணினிப் பயிற்சி - இணையப் பயிற்சி போல கற்றுத் தர தனித்தனியே முயற்சி எடுங்கள்.
பேராசிரியர் ப.சுப்பரமணியம் தலைமையில் உள்ள குழுவினர் இதனை மேற்கொண்டு முன் எடுத்துச் செல்ல ஆயத்தப்பணிகளைத் துவக்குவர்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்