எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டின் தலையாய பணி திராவிடர் இல்லந்தோறும் போர்வாளாம் 'விடுதலை'யைக் கொண்டு சேர்ப்போம்!

கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர்  உருக்கமான அறிக்கை

திராவிடர்களின் இன உரிமைப் போர் வாளாம் 'விடுதலை'யை ஒவ்வொருவர் வீட்டிலும் கொண்டு சேர்க்கும் பணியே தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆண்டில் கருஞ்சட்டைத் தோழர்களின் தலையாய பணியாகும். கழக அமைப்புகள் சங்கிலித் தொடர் பிணைப்பில் ஒன்றிணைந்து செயல்பட்டு இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத்தினர்களே,

பெரியார் பற்றாளர்களான பெருந்தகைகளே! நமது அறிவு ஆசான் தந்த அறிவாயுதமாம் 'விடுதலை' தனது 84ஆம் ஆண்டிலும் நடுங்கா நடைபோட்டு, ஒடுங்கா உரிமைக் குரலாய் நாளும் தவறாது மணியோசையாக ஒலித்துக் கொண்டுள்ளது!

1962இல் தந்தை பெரியார் கட்டளையேற்றுப் பணியாற்றி வருகிறேன்

1962இல் நம் தலைவர் தந்தை பெரியார் 'விடுதலை'யை நாளேடு என்பதை நிறுத்தி விட்டு, 'வார ஏடாக'  நடத்தி விடுவது என்ற வேதனை முடிவினை மேற்கொள்ள இருந்த கட்டத்தில், இனமானப் பேராசான் சக்தி வாய்ந்த ஏவுகணையாக திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்த இந்த பெறற்கரிய அறிவுச் செல்வத்தை நாளும் மக்கள் பெற்றால் ஒழிய விடுதலை வாழ்வு அவர்களுக்கு எளிதில் கிட்டாது என்பதால், அய்யாவின் கட்டளையை ஏற்று நான் முழு நேரப் பணிக்கு என்னை ஒப்படைத்து, இன்று வரை - 56 ஆண்டுகளாக - உற்சாகம் குறைவின்றி இதில் பணியாற்றி மனநிறைவு "ஊதியத்தை"  ஏராளம் பெற்று என் உழைப்பை தாராளமாகச் செலவிடுகிறேன்.

'விடுதலை'யின் சாதனைகளும், பணியாளர்களின் பணியும்

இவ் 'விடுதலை' நாளேட்டின் அன்றாடச் சாதனைகள் அளப்பரியன; அறிவீர்கள் நீங்கள். இதற்கு உழைக்கும் குழுவினர்கள் - அனைத்துத் தோழர்களும் தன்னலம் மறுத்த தகைசால் தோழர்கள். முன்பு உழைத்து தவிர்க்க இயலாத காரணங்களால் சென்றவர்கள்கூட "நான் அய்யாவின் 'விடுதலை'ப் பணிமனையில் பணியாற்றினேன். அது எனது வாழ்நாளில் பெற முடியாத பேறு; மறக்க முடியாத அனுபவம்" என்கின்றனர் மகிழ்கின்றனர்!

'என் ஏகபோகத்தில் 'விடுதலை'யை  விடுகிறேன்' என்று சொன்னவர் தந்தை பெரியார்

அத்தகைய 'விடுதலை'யை "எனது ஏகபோகத்தில் விடுகிறேன்" என்று அறிக்கைகளை ஒரு முறை அல்ல, இரண்டு முறை எழுதியதோடு, 1962 ஆகஸ்ட் 23ஆம் நாள் என்னை அய்யாவே சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த பழைய 'விடுதலை' பணிமனையில் நாற்காலியில் அமர்த்தி, எதிரில் என் ஆசான் அமர்ந்த காட்சியைவிட நான் வேறு எதைப் பெரிதாகச் சம்பாதித்து விட முடியும்; மகிழ்ச்சிக் கண்ணீர் என் எழுத்துக்களை நனைய வைக்கின்றது. உங்களை நம்பி, இப்பெரும் பணி ஏற்றேன்.

எவ்வளவு நம்பிக்கை! எத்தனை ஊக்கமூட்டல்!! அந்த நம்பிக்கை நான் - நாம் - காப்பாற்றி அந்த 'ஏகபோகம்' எல்லா இல்லங்களிலும் 'விடுதலை' என்று செய்ய நித்தநித்தம் நேர்மையுடன் உழைத்திட வேண்டாமா?

பெரியாரிஸ்டுகளின் முதல் கடமையும் - பணியும்

தோழர்களே,

'விடுதலை' சந்தா சேர்ப்பு, 'விடுதலை' பரப்புதல் நமது கழகத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பெரியாரிஸ்டுகளின் முதற் கடமையாகும்!

அதன் தாக்கம் - அதைப் படிக்கத் துவக்கியவர்கள்மீது வெகுவாக பகுத்தறிவு ஒளி - இனமான உணர்வு பரவிட நாளும் நலிவுறாத நன் மருந்தாக அமையும். 'விடுதலை' நாளேடு - வெறும் செய்தித்தாள் அல்ல! நிமிராத நம்மின மக்களுக்கு தோள் கொடுத்து நிமர்த்தி நேர்கொண்ட பார்வையை, நிமிர்ந்த தனி நடையை பேர்கொண்ட ஏடுகளால் செய்ய முடியாத - துணிவில்லாத களம் காண எந்த விலையும் தர எந்நாளும் உழைக்கும் பார்கண்ட பகுத்தறிவு நாளேடு!

நம் இனமானத்தின் சுவாசப்பை; எம்மின ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் மின்தூக்கி!

- இதன் கருத்துக்கள் முதலில் வாசிக்கப்படும். பிறகு சுவாசிக்கப்படும் -

எனவே, இதனைப் பரப்புதல் என்ற பணி கழகக் கொடியை ஏற்றுவதைவிட, கறுப்புச் சட்டையை அணிவதைவிட, களத்திற்குச் செல்வதைவிட முக்கிய இன்றியமையாப் பணி - மறவாதீர்!

பொருள் நட்டத்தைக்கூட பொறுத்த இதன் பயணம் நடைபெறலாம்; கொள்கை பரவிட கடமை தவறாத உணர்வை கழகக் குடும்பத்தினர் ஆற்றிடத் தவறலாமா தோழர்களே?

ஒவ்வொரு திராவிடர் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஏடு

எனவேதான் இந்த முக்கிய தருணத்தில் எதற்கும் முன்னோட்டம் காட்டும் இந்த முனை மழுங்காத பெரியாரின் ஆயுதம் ஒவ்வொரு திராவிட இனத்தவர் தம் இல்லங்களில் பாதுகாப்புக் கேடயமாய், அறியாமை தொற்று நோய் தடுப்பு மாமருந்தாய் இருக்க வேண்டாமா?

எனவேதான் இதனைப் படித்து முடித்தவுடன் ஓடோடிச் சென்று ஒன்றிரண்டு சந்தாக்களை - புதிய வரவுகளுக்கு வரவேற்புக் கூறி கேளுங்கள்.

கழகப் பொறுப்பாளர்களுக்கு இது கடமை உணர்வு மட்டுமல்ல; கடினமான பணியும் அல்ல. எப்படி என்று கேட்கிறீர்களா?

சங்கிலித் தொடர்போல பணிகள் நடக்கட்டும்!

மண்டலக் கழகம் - மாவட்டக் கழகம் - ஒன்றியக் கழகம் - நகரக் கழகம் - கிளைக் கழகம் ஆகியவைகளை வெறும் பேரளவுக்குரியதாகக் கருதாமல் 'செயல்' வேகத்தைக் காட்டுங்கள்.

Net Working - சங்கிலித் தொடர்போல கமிட்டிகளைக் கூட்டி - ஒவ்வொரு பொறுப்பாளர்களும் ஒன்றிரண்டு, அய்ந்து, பத்து, அவரவர் வாய்ப்புக்கும், வசதிக்கும் ஏற்ப - காலக்கெடு வைத்து கடமையாற்றிட முன்வந்தால் -  மாமலைபோல் தெரிந்த ஒன்று - ஓர் சின்ன கடுகு போன்று எளிதாக அமைந்து விடுமே!

பாராட்டத்தக்க தோழர்களின் பணி

இப்படி உழைப்பவர்கள் நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் குறிப்பாக பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயகுமார்,  மாணவர் கழக மாநிலப் பொறுப்பாளர் அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் தர்மபுரி ஊமை ஜெயராமன், (திருப்பத்தூர், தருமபுரி, கிருட்டிணகிரி மண்டல, மாவட்டக் கழக அனைத்து பொறுப்பாளர்களும்) வி. பன்னீர்செல்வம், ஈரோடு சண்முகம், வே. செல்வம், தஞ்சை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், அரியலூர்  நீலமேகம், திண்டிவனம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் க.மு. தாஸ் ஆசிரியர் கந்தசாமி, அரக்கோணம் லோகநாதன், ஜீவன்தாசு போன்றவர்கள் தேனீக்களாக உழைக்கும் நிலையில்,

இதில் மிகவும் சிறப்பான பெருமையை

தஞ்சை                       -          225

தருமபுரி                      -         106

கிருட்டிணகிரி             -         105

திருப்பத்தூர்                -         103

அரியலூர்                    -         75

விருத்தாசலம்            -         70

ஈரோடு                        -         55

கன்னியாகுமரி           -        52

பட்டுக்கோட்டை         -       51

போன்ற மாவட்டங்களில் சந்தா பணி சடுதியில் முடிக்கும் பணியாக நடைபெறுவது அறிய மகிழ்ச்சி.

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பது கழகக் கருஞ்சட்டைத் தோழர்களே, இது வெறும் பேச்சல்ல - வீர சூளுரை! வேகமாக நடைபெறட்டும்!

'விடுதலை'யை பரப்புவது அறிவுப் புரட்சியை நாளும் விதைப்பது என்பதல்லவா!

கடந்த பல ஆண்டுகளாக, மதுரை மண்டல செயலாளர் தோழர் பவுன்ராசா, குமரி மாவட்ட செயல் வீரர் வெற்றிவேந்தன் ஆகியோர் என்னைப் பார்க்கும்போது வணக்கம் தெரிவிப்பதே சந்தா பட்டியலுடன்தான்! என்னே அவர்தம் உழைப்பு! திடசித்தம்!

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு தலையாய பணி

'விடுதலை வளர்ச்சி நிதி'க்கு சந்தா தொகை அளவு தர இயலாதவர்கள், துண்டு, மாலை, புத்தகங்களுக்கு பதிலாக வெறும் நிதியாகவே பெற்று 'விடுதலை'க்கு அனுப்பி, 'விடுதலை'க்கு உரமிடுங்கள்.

விரைந்து நடக்கட்டும் 'விடுதலை' பரப்பும் தலையாய பணி!

140 ஆண்டு பெரியார் வாழ்வின் முதற் கடமை முடித்துப் பெருமை பெற முந்துங்கள் தோழர்களே!

 

கி. வீரமணி,

ஆசிரியர்

'விடுதலை'

சென்னை

24.9.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner