எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

முக்கால் நூற்றாண்டுகளுக்கு மேலான பொதுவாழ்க்கை; அரை நூற்றாண்டு காலம் கட்சியின் தலைமை; 13 முறை சட்டமன்ற உறுப் பினர்; 5 முறை தமிழ்நாடு முதலமைச்சர் முதலிய பொறுப்புகளை ஏற்று, அவற்றில் முத்திரைகளை பதித்த மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்கள் இன்று மறைவுற்றார் என்பது மிகப்பெரும் துயரத்திற்குரிய செய்தியாகும்.

தமிழ்நாட்டின் பொதுவாழ்விலும் திராவிட இயக்க வரலாற்றிலும் நின்று நிலைத்துப் பேசப்படும் பெருமைக்குரிய பெருமகன் தலைவர் கலைஞர் ஆவார்.

தன்னை மிக மிக பிற்படுத்தப்பட்டவன் (எத்தனை “மிக மிக” வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்) என்று சட்டப்பேரவையிலே அறிவித்த மானமிகு கலைஞர் அவர்கள் எவரும் எளிதில் எட்டமுடியாத இமயத்திற்கு உயர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவரின் யாருடனும் ஒப்பிடமுடியாத உழைப்பு! உழைப்பு!! உழைப்பே!!!

தந்தை பெரியார் அவர்களின் சீடராக “குடிஅரசில்” பணியாற்றி திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக பேச்சாளராக பரிணமித்து, இலக்கிய உலகின் எழுத்துலக வேந்தராக ஒளிவீசி ஆட்சித்துறையில் நிகரற்ற நிர்வாக திறமை கொண்ட - எதிலும் விரைவாகவும் விவேகமாகவும் செயல்படும் பேராற்றலின் முழுவடிவம் தான் நமது கலைஞர் அவர்கள்.

நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார் அந்தப் பகுத்தறிவாளர்! அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தங்கள் தலைவரை உயிரினும் மேலாக மதிக்கும் திமுக தோழர்களுக்கும்  குறிப்பாக திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன், செயல்தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு வாரத்திற்கு துக்கம் கடைபிடிக்கும் வகையில் திராவிடர் கழகக் கொடி அரைக்கம்பத்தில் இறக்கப்படும். கழக நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப் படுகின்றன.

திராவிட இயக்கத் தீரருக்கு திராவிடர் கழகம் தன் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மானமிகு கலைஞர் உடலால் மறைந்திருக்கலாம். அவர் எந்தக் கொள்கைக்காக இலட்சியத்திற்காக  திராவிட இயக்கத்திற்காக உழைத்தாரோ அதை குன்றாது மேலும் ஒளிவீசித் திகழ்ந்திட உறுதிமொழி எடுப்பதே நாம் அவருக்குக் காட்டும் மிகப்பெரிய மரியாதையாகும்.

கலைஞர் மறைந்தார் அவர் போற்றிய கொள்கைகள் ஓங்குக!

கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் குறிப்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோரின் சிறந்த மருத்துவ உதவிகளுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

(கி.வீரமணி)

தலைவர், திராவிடர் கழகம்

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner