எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அறிஞர் அண்ணா அவர்களது தலைமையில் 1967இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அமைந்த அமைச்சரவையில், சட்ட அமைச்சராக பொறுப்பேற்று, பிறகு கலைஞர் அமைச் சரவையிலும் தொடர்ந்த, சுய மரியாதை வீரர் மானமிகு செ.மாதவன் அவர்கள் நேற்று (3.4.2018) தனது சொந்த ஊரான சிங்கம்புணரியில் காலமானார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தமும், துன்ப மும் அடைந்தோம்! (அவருக்கு வயது 85)

தி.மு.க.வில் அக்காலத்தில் இருந்த சட்ட ஞானம் மிக்க வழக்குரைஞர். எதிர்க்கட்சியாக தி.மு.க. இருந்த போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கும் தனிநபர் மசோதாவை தயாரித்து (காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்) சட்டப் பேரவையில் தாக்கல் செய்தவர்.

பிறகு அவரே 1967இல் அண்ணா முதல் அமைச்சரான பிறகு, அவர் ஆணையினை ஏற்று, சட்ட அமைச்சர் என்ற முறையில் தந்தை பெரியார் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் சுயமரியாதைத் திருமணங்களை, சட்டப்படி தனிச்சட்டம் தயாரித்து நிறைவேற்றச் செய்ததில் முக்கிய பங்காற்றிய செம்மல் மானமிகு. செ.மாதவன் அவர்கள். கலைஞரின் அன்புக்குப் பாத்திரமாக இறுதி வரை திகழ்ந்தவர். தந்தை பெரியாரின் பாராட்டுகளைப் பெற்றவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான பண்பாளர்; மிகுந்த தன்னடக்கம் வாய்ந்தவர். அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

அவரை இழந்து வாடும் அவர்தம் வாழ்விணையர், மகள்கள், மகன் குடும்பத்தினருக்கும், தி.மு.க.விற்கும் நமது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: மறைந்த மாதவன் அவர்களின் மகளிடம் தொலைத்தொடர்பு மூலம் இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்தார் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

1. மண்டலத்தலைவர்  காரைக்குடி சாமி.திராவிடமணி தலைமையில் மாவட்டக் கழகத் தலைவர்கள் ஆசிரியர் அரங்கசாமி மற்றும் காளாம்பூர் ராஜாராம் கழகப் பொறுப் பாளர்கள், தலைமைக் கழகம் சார்பில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்துவர்.

2. டில்லியில் நடந்த கருத்தரங்க தொடக்கத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner