எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘திருமணம் - பொதுக்கூட்டம் - சந்திப்புகள் என்று

திகட்டா நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சியில் திளைத்தோம்!’’

 

கடந்த வாரம் முழுவதுமே நமக்குப் பணிச் சுமைகள் அதிகம். மார்ச் மாதம் என்றாலே ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகப் போராட்டங்களும், பரப்புரைகளும், கழகப் பணியின் ஆக்கபூர்வத் திட்டங்களும் நமது அனைவரது உழைப்பையும் பன்மடங்கு பெருக்கி விடுகின்றன.

நமது கழகக் குடும்பத்தினர் எவரும் இதனைச் சுமை யாகக் கருதாது, சுகமாகவே அனுபவித்து மகிழ்வதைக் கண்டு, உங்களில் ஒருவனான நானும், புத்தாக்கமும், புத்தெழுச்சியும் பெறுகிறேன்.

ஜனநாயக உரிமைகள்

பாதுகாப்பு

மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஒத்தக் கருத்துள்ள கட்சிகளின் கொள்கைச் சங்கமத்தில், வரும் ஆபத் துக்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் புது வியூ கத்தினையும்பற்றி ஆலோசித்து, ஒரு திட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது.

‘‘ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு’’  என்பது காலத்தின் கட்டாயம்; எதிர்கால நம்பிக்கையை பெரும்பாலோருக்குத் தரக்கூடியதாகும். இம்முயற்சிக்கு ஒத்துழைப்பும், பேராதரவும் தர முன்வந்தமைக்கு அத்துணைக் கட்சி, இயக்கங்களின் தலைவர்களான பெருமக்களுக்கு திராவிடர் கழகம் தனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

குமரிமுனையில்

கொள்கைப் பொதுக்கூட்டம்

கடந்த 29, 30 ஆகிய இரு நாட்களில் தென்கோடி குமரிமுனையில் நமது கழகக் கொள்கைப் பிரச்சாரம் நடைபெறும் வகையில், குமரி மாவட்டம் கருங்கல் பாறை என்ற ஊரில் மிக அருமையான பொதுக்கூட்டத்தை, மாவட்டச் செயலாளர் தோழர் மானமிகு கிருஷ்ணேசுவரி அவர்களது சீரிய முயற்சியோடு,  பொதுக்குழு உறுப்பினர் தயாளன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும், மண்டல இளைஞரணி செயலாளர் வெற்றிவேந்தன், மற்றும் நமது கழக ஆதரவாளர்களின் ஒத்துழைப்போடு மிக அருமையான வகையில் ஏற்பாடு செய்ததும் அதன் கனிந்த பலனும் தொலைதூரப் பயணக் களைப்பை  அகற்றிவிட்டது!

நாகர்கோவில்

கழகப் பெருமக்களே...!

நாகர்கோவிலில் மூத்த பெரியார் பெருந்தொண்டர் நூறு ஆண்டு கண்டுள்ள மானமிகு பெரியவர் முகம்மதப்பா அவர்களைச் சந்தித்து அளவளாவிய மகிழ்ச்சியும், வடிவீசுவரத்தில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரான மானமிகு அய்யா பழனிவடிவேலு அவர்களது மறைவிற்குப் பின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தோழர் ப.சங்கரநாரயணன் அவர்களும் இயக்கத்திற்கு மாவட்டத் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி புகழுடன் மறைந்தார். துயரத்திலிருந்த அவரது வாழ்விணையர் திருமதி அருணாசங்கரன், மகன் பழனி, மருமகள் சுதா, சம்பந்தி தூத்துக்குடி தி.பா.பெரி யாராடியான், திருமதி தமிழ்மணி, அவரது அன்பு சகோதரர் ஓய்வு பெற்ற ஸ்டேட் வங்கி அதிகாரி ப.தமிழ் மணி குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி, உரையாடி திரும்பியது நமக்கும் ஆறுதலாக இருந்தது.

சுயமரியாதைச் சுடரொளிகளின் மறைவு என்பது சமூக விஞ்ஞானிகளின் மறைவு ஆயிற்றே!

அங்கே முதுமையில் தள்ளாடும் அய்யா பாஸ்கர் அவர்கள் ஓடோடி வந்து கட்டி அணைத்து மகிழ்ந்தார். இயக்கத்தின் வலிமை இந்த உறவில்தானே உள்ளது?

மாவட்டக் கழகத் தலைவர்

மணி அவர்களின் இல்லத் திருமணம்

மாவட்டத் தலைவரும், சீரிய கொள்கைக் குடும்பத் தலைவருமான ஆரல்வாய்மொழி மணி அவரது வாழ்விணையர் திருமதி இந்திரா ஆகியோரின்  இல்ல மணவிழா ஒரு மாநாடு போல் நடைபெற்றது! அவரது சம்பந்திகள் ஆரல்வாய் மொழி திருவாளர்கள் பெரியசாமி-இசக்கியம்மாள் ஆகியோரது ஒத்துழைப்பும் பெரிதும் பாராட்டத்தக்கது.

அனைத்துத் தரப்பினர், கட்சியினர், மதத்தினர் சிறீ நாராயண குரு தர்ம பரிபாலன அடிகளார், பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா அடிகளார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இசக்கி, காமராசர் அறக்கட்டளைத் தலைவர் இராமசாமி, ஊர் பெருந்தனக்காரர் ஆறுமுகம் பிள்ளை, மேனாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் முதலியவர்களும், கழக முக்கிய பொறுப்பாளர்களும் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மண்டலப் பொறுப்பாளர்கள் அத்துணை பேரும் அந்தக் குடும்ப விழாவில் குதூகலத்துடன் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத் தோழர்கள், பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர் காசி, பெரியாரடியான், மண்டல செயலாளர் கனகராசு, மண்டலத் தலைவர் பால்.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் முனியசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வராசு, ஆழ்வார், இராஜபாளையம் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டேவிட், செல்லதுரை, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வீரன், நெல்லை மண்டல மாணவரணி செயலாளர் சவுந்திரபாண்டியன், நெல்லை மாவட்டத் தலைவர் காசி, மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன், அவரது துணைவியார் இப்படி தென்மாவட்டங்களின் கழகக் குடும்ப சங்கம சந்திப்பாக இருந்தது - உற்சாகம் கரைபுரண்டோடியது!

ஆரல்வாய் மொழி முடித்து, நெல்லை வந்து பாளையங்கோட்டையில் பேராசிரியர் பெரியார் சிந்தனையாளர் மானமிகு தொ.பரமசிவம் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து திரும்புவதாகத்தான் திட்டம்.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியான நிகழ்ச்சிகளால், அதன்மூலம் எல்லோரும் பெற்ற எல்லையற்ற மகிழ்ச் சியும்தான்! இந்தப் பயணத்தில் மறக்க முடியாதவை, ஏற்கெனவே திட்டமிடப்படாத புதிய சந்திப்புகள் ஆகும்.

மார்ச் 29 காலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், இரண்டு மணிநேரம் தாமதாகச் செல்லும் நிலையில், காலையில் நெல்லை சந்திப்பில் செய்தித்தாள் வாங்கித் தந்தனர் தோழர்கள்.

‘குமார விலாஸ்’ பிரம்மநாயகம் அவர்களின் இல்லத்தில்...

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக பல ஆண்டுகள் இருந்தவரும் - தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார், திராவிடர் இயக்க முன்னோடிகள், பிரச்சாரகர்களுக்கு அக்காலத்தில் உணவுக்கூடமாக இருந்த பிரபல உணவு விடுதியான ‘குமாரவிலாஸ்’ உரிமையாளருமான க.மு.பிரம்மநாயகம் (பிள்ளை) அவர்களது 117 ஆம் ஆண்டு பிறந்த நாள் திராவிட திலகம் என்ற வாசகங்களுடன் அவரது இளைய மகன் தோழர் முத்து இருளப்பன், அவரது வாழ்விணையர் கனகாமுத்து இருளப்பன், குடும்பத்தினர் அளித்திருந்த ஒரு விளம்பரத்தை அந்தச் செய்தித்தாளில்

கண்டேன்.

70 ஆண்டுகளாக விட்டது துளிர்த்தது!

உடனே தோழர்கள் மூலமாக நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் இராசேந்திரன், நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி ஆகியோரிடம்,  அக் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளச் சொல்லி, ‘‘நாளை (மார்ச் 30 ஆம் தேதி) நான் அங்கே வந்து அவர்கள் இல்லத்தில்  உள்ள அய்யா பிரம்மநாயகம் அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில்,  அவருடைய படத்திற்கு மலர்மாலை அணிவிக்க வருவதாக சொல்லச் சொன்னேன்.

‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ பிரம்மநாயகம் அவர்களது தொண்டறச் சிறப்புப்பற்றி ‘‘உலகத் தலைவர் பெரியார்’’ வாழ்க்கை வரலாற்றில் 3 ஆவது தொகுதியிலும் எழுதப்பட்டுள்ளதுபற்றி நான் கூறி மகிழ்ந்தேன். எனது வாழ்விணையர் மோகனா அந்தப் புத்தகப் பிரதியை அவர்களுக்குத் தந்தால் மகிழ்ச்சி அடைவார்களே என்று கூறினார், அவ்வாறே அந்நூலும்  அளிக்கப்பட்டது.

(‘‘அய்யாவின்அடிச்சுவட்டில்’’என்றுநான் எழுதியுள்ள நூலிலும் பிரம்மநாயகம் அவர்களைப் பற்றிய குறிப்புகள் விரிவாக (முதல் பாகத்தில் உள்ளது).

நாங்கள் அவர்களின் வீட்டுக்கு வருவதை சுவ ரொட்டிமூலம் முத்து இருளப்பனார் குடும்பத்தினர் விளம்பரப்படுத்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர்.

பகல் ஒன்றரை மணியளவில் அங்கு சென்றபோது மகிழ்ச்சி, அன்பு, உபசரிப்பு, உற்சாகம் அனைத்து குடும்ப உறுப்பினர்கள், தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுவானவர்கள் எல்லாம் குழுமி கலந்து வரவேற்றனர். பெருநிகழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது. இடையில் தொய்வுடன் இருந்த கொள்கை உறவு மீண்டும் புதுப்பித்துக் கொள்வதாக அமைந்தது!

அது மட்டுமா? மற்றொரு இன்ப அதிர்ச்சி - மகிழ்ச்சி!

மற்றொரு இன்ப அதிர்ச்சி

சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மையார் மருத்துவமனை - 30 ஆண்டுகளுக்கும்மேலாக இயங்கி ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதும், அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை முகாம்களை தக்க மருத்துவர்களின் தொண்டறத்தோடு நடத்திவரும் மருத்துவமனை. இதில் ஊதியத்தைக்கூடப் பெரி தாகக் கருதாது, தொண்டு மனப்பான்மையுடன் பணிபுரிந்தவர்கள் பலர் உண்டு.

அவர்களில் ஒருவர் டாக்டர் திருமதி சாரதா - அவரது வாழ்விணையரும் டாக்டர். இருவரும் தற்போது நெல்லையில் மருத்துவத் தொண்டு புரிகின்றனர். இது எனக்கு அப்போது நினைவில் இல்லை. அவர் சென்னையில் பல்வேறு மருத்துவக் கல்லூரி - பல்கலைக் கழகங்களில் பணிபுரிகிறார் என்றே நினைத்திருந்தேன்.

அவர் நெல்லைக்குச் சென்று தெற்கு ரத வீதியில் ஒரு அருமையான கிளினிக் அமைத்து, புற்றுநோய் பரிசோதனை - சிகிச்சை பல ஊர்களில் முகாம் என்று இப்படி பணி செய்து வருகின்றனர்.

ஒரு நண்பர் மூலம் தெரிந்து, பிரம்மநாயகம் அவர்கள் இல்லத்திற்கு முன் தெருவில்தான் தனது ‘கிளினிக்‘ உள்ளது, வந்தால் மகிழ்ச்சியடைவோம் என்று சொல்லி தகவல் அனுப்பினார்கள். அந்த அழைப்பு எங்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது; நானும், எனது வாழ்விணையரும் தோழர்களுடன் சென்றோம்; மிகுந்த பாசம், நன்றியுணர்ச்சியுடன் கலந்த மகிழ்ச்சி - இவைகளைக் காட்டி டாக்டர் சாரதா அவர்கள் மதியம் ஒரு மணிக்கு வரவேற்று தனது மருத்துவமனையைக் காட்டி ஒரு அன்பு வரவேற்பினைத் தந்தார்.

எங்களுக்கும் மகிழ்ச்சி - நன்றி உணர்வின் வெளிச்சம்போல் பளிச்சிட்டது! பெற்றோரைக் கண்ட மகளின் அன்பு வெளிப்பட்டது. பிறகு அய்யா பிரம்மநாயகம் அவர்களது இல்லம் சென்றோம்.

பேராசிரியர் தொ.ப.இல்லத்தில்...

பிற்பகல் சிறிய ஓய்வுக்குப் பின்னர் பாளையில் உள்ள பெரியார் சிந்தனையாளர் பேராசிரியர் மானமிகு தொ.பரமசிவம் அவர்களது இல்லத்திற்குச் சென்று உடல்நலம் விசாரித்து உரையாடி மகிழ்ந்தோம்.

தி.மு.க.தலைமைச் செயற்குழு உறுப்பினர் பகுத் தறிவாளர் பாளை சுப.சீதாராமன் மற்றும் தி.மு.க. தோழர்களும் அப்பகுதிவாழ் ஏனைய கட்சிப் பிரமுகர் களும் அன்புடன் எங்களை வரவேற்றனர்.

பேராசிரியர் தொ.ப. அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் உள்ளார். அவரது வயது 69தான். எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. தமிழ்நாட்டில் இவரைப் போன்ற ஆய்வறிஞர்கள் மிகவும் அரிதிலும் அரிது. இவர் ஒரு பல்கலைக் கொள்கலன். பெரியாரிய சிந்தனையாளர்.

எனது வாழ்விணையரும், நானும், தோழர்களும் அவர்களது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் பேசி மகிழ்ந்தது பெரிய மனநிறைவைத் தந்தது.

உடல்நலக் குறைவு என்றாலும், அவரது உள் ளத்தின் உறுதியையோ, கருத்து திண்மையையோ, பளிச்சென்று பதில் அளிக்கும் பாங்கையோ அதன் மூலம் பாதித்துவிடவில்லை. அவர் போன்ற அறிஞர் பெருமக்களின் வாழ்வு பொதுச் சொத்தல்லவா? போதுமான அளவு பாதுகாக்கப்பட வேண்டாமா?

கலைஞர் உடல்நிலைபற்றி அவர் கவலையோடு நம்மிடம் விசாரித்தார். தொ.ப. உடல்நிலை பாதிப்புக்கு எது காரணம் என்று கேட்டதற்கு, புகைப் பிடித்ததும், சர்க்கரை நோயும்தான் என்று கூறினார். உடல்நலம் பேண இவைகளிடமிருந்து பாதுகாப்போடு இருப்பது அவசியம் என்ற பாடத்தையும் போதித்தார்!

கழகத் தோழர்களுடன் நாங்கள் உரையாடலுக்குப் பின் பிரியா விடைபெற்றுத் திரும்பினோம். ‘விடுபூக்கள்’ என்ற புதிய நூல் பிரதிகளை எமக்களித்தார். பெரியார்  நூல்கள் - புதிதாக பதிப்பிக்கப்பட்டவைகளை அவரி டம் தந்து விடை பெற்றோம்!

கண்டறியா இன்பங் கண்டோம்!

இந்த இரண்டு நாள் தென்மாவட்டப் பயணம் அடுக்கடுக்கான நிகழ்ச்சிகளின் அணிவகுப்புதான் என்றாலும், அயர்வு தராத, புது உற்சாகத்தினைப் பொழிந்த ஒரு மாமருந்தாக நமக்கும், நமது தோழர் களுக்கும் அமைந்தது!

கண்டறியாத இன்பம் கண்டோம்!

இந்த இனிய அனுபவங்களை என்றும் மறக்க முடியாது!

பயணங்கள் முடிவதில்லை -

லட்சியங்கள் தோற்பதில்லை.

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.


3.4.2017
சென்னை



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner