எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கஜா புயல் என்ற திடீர் இயற்கைப் பேரிடர் பற்றிய நெஞ்சைப் பிளக்கும் துன்பச் செய்திகளைக் கேட்டும், காட்சிகளைப் பார்த்தும் உள்ளம் வேதனையில் வாடுகிறது.

இயற்கைச் சீற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இயற்கையை சீண்டும் மனித குலத்துக்கு அது அவ்வப் போது தக்க பாடங்களைக் கற்பித்துக் கொண்டே வருகிறது! ஆனால் மனிதர்கள் தான் உரிய பாடங்களைக் கற்றுத் திருந்தி வாழ ஏனோ மறுக்கிறார்கள்!

என்றாலும் மனித நேயம் இந்த வாய்ப்புகளில் பெருக்கெடுத்தோடவும் தவறுவதே இல்லை; கட்சி, ஜாதி, மதம், வட்டாரம் என்ற குறுகிய வட்டங்களி லிருந்தும், பொந்துகளிலிருந்தும், கூடுகளிலிருந்தும் மனிதர்கள் வெளியே வந்து அனைவரும் உறவாக யாவரும் கேளிர் என்று செயல்படுவது, பாலைவனத்தில் ஒரு சோலை ஊற்று போலல்லவா?

பூகம்பமும், புயலும், மழை வெள்ளமும், கடல் சீற்றமும் - இயற்கையின் சோக உற்பாதங்கள் அனைத்துமே மனிதர்களைப் பிரித்துப் பார்க்காமல், அனைவருக்கும் அனைத்துத் துன்பங்களையும் பிரித்தே வழங்குகிறது என்று துணிந்து கூற முடியாது. ஏழைகளின் குடிசைகளைத் தூக்கும் காற்று, பணக்காரர்களின் மாட மாளிகையிடம் நெருங்கவே  அஞ்சுகிறதே! பெரு முதலாளி கண்டு பல அரசுகளும் தான் அஞ்சுகின்றனவே!ஆனால் துன்பத்தை அவர்களுக்கு அளிக்கவில்லையே என்பதற்காக நாம் இதனை எழுதவில்லை; மாறாக அவர்களுக்கு அவர்கள் பல வழிகளில் - குறுக்கு வழிகள் உட்பட சம்பாதித்த செல்வம் - வீடு நிரந்தரம் அல்ல - இந்த செயற்கையான, நிலையற்ற, சொத்து சேர்ப்பை இயற்கையாகிய யான் நீதி வழங்கி உங்களை ஒரே நாளில் 'அனாதைகளாக' ஆக்கிவிட முடியும் என்ற பாடத்தைப் போதிக்கக்கூட ஏன் அவர்களை நெருங்க முடியவில்லை என்று கேட்கிறோம், அவ்வளவுதான்!

பல "மல்டி மில்லியனர்கள்" கோடீசுவரர்கள் உட்பட அனைவருக்கும் பாடம் போதிக்கும் வன்மையும், ஆற்றலும் எனக்குப் புயல் காற்றைவிட அதிகம் என்று கூறாமல் கூறுகிறது பூகம்பம்!

ஆம். பூகம்பம் கட்டடங்களை உள்வாங்கி, தக்க முன்னெச்சரிக்கையையும் - அதிர்வுகள் மூலம் - தந்து, மனிதர்களே வெளியேறி விடுங்கள்; இவை  நிரந்தரப் பாதுகாப்பு என்று நினைத்து சொத்துக்களைக் குவிக்கும் பைத்தியக்காரராக ஒரு போதும் இருக்காதீர்கள் என்று போதிக்கிறது  - தன்னுடைய பெருஞ்சினத்தால் - இல்லையா?

'சுனாமி' ஆழிப்புயல் அதற்கெல்லாம் பெரியண்ணன். இயற்கையைச் சுரண்டியே வாழும் மனிதகுலம், பாதுகாக்கத் தவறி, அலட்சியத்தாலும், அகம்பாவத் தாலும் இயற்கை வளங்களை சீரழித்து சின்னா பின்னமாக்கி, வெப்ப சலனத்திற்கு "சிவப்புக் கம்பளம்" விரிக்கும் இந்த மனித குலத்தினை ஏன் கட்டடங் களிலிருந்து மரங்கள் - பயிர்களிலிருந்து வேறுபடுத்தி பாரபட்சம் காட்டுகிறாய் என்று பூகம்பத் திடம் கேள்வி கேட்பது போல அனைத்தையும் மனிதன், மிருகம், செடி, கொடி, வீடு வாசல் எல்லாவற்றையும் அழித்து கோரத்தாண்டவம் ஆடி நமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதே - கற்றுக் கொண்டோமா?

தொலைக்காட்சி ஒன்றில் ஓலமிடுகிறார் ஒரு பரிதாபத்திற்குரிய இழப்பாளர்; "அய்யா, நான் வளர்த்த மரமே என் வீட்டின்மீது விழுந்து குடும்பத்தாரின் உயிர் பறிப்புக்குக் காரணமானதே!" என்ற வற்றாத கண்ணீ ருடன், கட்டிய வீடே சரிந்து விழுந்து அந்தக் குடும்பத் தினரின் மரணத்திற்கு எழுதப்பட்ட மரணவோலையாகி விட்டதே என்று அழுது புலம்புகிறார் மற்றொருவர்.

இந்த இழப்புகள் மறைமுகமாக என்ன பாடம் புகட்டுகின்றன தெரியுமா? கற்றுக் கொள்ளத் தவறாதீர்கள்.

முதலாவது, நம்முடைய இயக்கங்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் நம்மால் வளர்க்கப்பட்டவர்களாலேயே நமது வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும், தாழ்ச்சியும், வீழ்ச்சியும் ஏன் சில நேரங்களில் வீட்டுச் சுவரே குடும்பத்தவர்களைக் கொன்று தீர்த்ததுபோல் ஆகலாம்; ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக, நயவஞ்சக நாடகம் ஆடி, சுமந்து  பெற்ற தாயும், தந்தையும்கூட தனது வயது வந்த மகளை - படித்து புதுவாழ்வு பெற்ற மகளை கூலிப்படையைக் கொண்டும் கொலை, எரித்துக் கொலை செய்யும் வெறித்தனத்தனத்தைப் போன்றது அல்லவா?

இரண்டாவது பாடமும் உண்டு!

எதற்குச் சேர்ப்பது, நம்முடன் வராத ஒன்றுக்கு என்று எண்ணாமல், நமது சந்ததியினரை சோம்பேறி களாக்கவும், அகம்பாவ ஆணவக்காரர்களாக்கவும் பயன்படுகின்ற செல்வம் - "வீடுமனை, காடு, தோட்டம், துரவு, நகை நட்டுகள்" எல்லாம் நமக்குக் குடிக்கத் தண்ணீரும், பசித்தவயிற்றுக்கு உணவும் இதுபோன்ற புயல், பூகம்பம், சுனாமி காலங்களில் ஒருபோதும் உதவாது. மீண்டும் இயற்கையின் சொத்து இயற்கைக்கே போய் சேரும்.

ஆதலால் மனிதர்களே, மனிதர்களே ஈதல் இசைபட வாழுங்கள்.

தேவைக்கு வைத்துக் கொண்டு, ஆடம்பரத்தைத் துறந்து, தொண்டறப் பணிகளில் ஈடுபடுங்கள்.

வாங்குவதைவிட கொடுப்பது நம் சுமையைக் குறைத்து, சுகத்தை வாழ் நாள் முழுவதும் வழங்கும். மகிழ்ச்சி ஊற்றும், மனநிறைவு எருவும் நம் வாழ்க்கையை வளர்த்து, ஈடிலா இன்பம் பெற்றவர்களாக உங்களை ஆக்கும்!

கொடுப்பதில் இன்பம் சுரக்கும்!

காப்பதால் துன்பச் சுமை இறுக்கும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner