எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூருவில் நீண்ட காலம் அரசுப் பணியி லிருந்து ஓய்வு பெற்றவர், சுயமரியாதை வீராங் கனையாகிய திருமதி. சொர்ணா அரங்கநாதன் அவர்கள்.

நாளை (11.9.2018)  அவருக்கு 85ஆவது வயது பிறந்த நாள். பல்லாண்டு நலத்துடன் வாழ்க!

அவரும், அவரது வாழ்விணையரும் (தோழர் அரங்கநாதன்)  கருநாடக திராவிடர் கழகத்தில் இணைந்து பணியாற்றிய தொண்டறச் செம்மல்கள். தனது பேரன் - பிள்ளைக்குச் சொத்தினை வழங்கி விட்டு, எஞ்சியது தங்களது நிகழ்கால எதிர்கால வாழ்வுக்கென ஒதுக்கி, அதில் ஒரு முக்கிய பகுதியை நமது பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகத்திற்கும், நமது அறக்கட்டளைகளுக்கும் அவ்வப்போது வழங்கிக் கொண்டே இருப்பதில் தனி இன்பங் காணுபவர் இவர்கள்!

சுயமரியாதை வீராங்கனை சொர்ணா அவர்கள் எம்.ஏ. படித்து முடித்தவர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளை நன்கு அறிந்தவர்.

அவர் தஞ்சை வல்லத்தில் உள்ள நமது பல்கலைக் கழக விடுதியில் தான் தங்கி, மகிழ்ச்சியுடன் தமது எஞ்சிய வாழ்வைச் செலவழித்து, நமது கழகப் பணியை, கல்விப் பணியை எப்போதும் ஊக்குவிக்கும் ஓர் அன்புச் சகோதரியவார்.

அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பு ஆண்டுதோறும் சமூகநீதி தொண்டறத்திற்கான பாராட்டு விருதாக வழங்கி வரும் 'கி. வீரமணி சமூகநீதி விருது' ஒரு லட்ச ரூபாய் - பாராட்டுரை பட்டயத்தை நமது இனமானத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு பெரியார் திடலில் வழங்கிய அன்று, பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகத்திற்கு (அப்பல்கலைக் கழகத்தினை முதல் அமைச்சராக இருந்த நிலையில் அவர்தான் 12 ஆண்டுகளுக்கு முன்பே அதைத் தொடங்கி வைத்தவர்) மானமிகு திருமதி. சொர்ணா ரங்கநாதன் அவர்கள் பல்கலைக் கழக வளர்ச்சிக்கு 30 லட்ச ரூபாய் காசோலையை கலைஞர் கையில் கொடுத்து நம்மிடம் வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

என்னிடம் மேடையில் கலைஞர் அவர்கள் இவரைப்பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து மகிழ்ந்தார். இவர் பெரும் பணக்காரரோ, தொழில் அதிபரோ, செல்வத்தில் புரளும் செல்வந்தரோ அல்ல. நடுத்தரக் குடும்பத்தினர்; ஓய்வு பெற்ற ஓர் அரசு அதிகாரி - ஓய்வூதியத்தை வைத்து வாழுபவர்.

அவர் தமது சேமிப்பிலிருந்து ஒரு பகுதியாக 30 லட்ச ரூபாய்களை நம் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக வளர்ச்சிக்குத் தந்தார் என்றால், அது எத்தகைய பெரு உள்ளம் கொண்ட செயல்! அதுபோலவே அவருக்குக் கொடுத்து மகிழ்வதில்தான் எத்தனை எத்தனை இன்பம்!

அதனைத்தான் 'ஈத்துவக்கும் இன்பம்' என்று கூறி மகிழ்ந்தார் வள்ளுவர் பெருமான்!

பணம், கொடை தருவதற்கு முக்கியமாக வேண்டியது பணம் அல்ல நண்பர்களே - மனம், மனம், மனம்! எத்தனையோ பெரும் பணக்காரர்கள் ஏன் பண முதலைகள்கூட நாட்டில் ஏராளம் உண்டு. அவர்கள் இரு வகைப்பட்டவர்கள்.

ஒருவகை, பணத்தைச் சேர்த்து வைத்து 'வைத்திழக்கும் வன்கண்வர்கள்' வைக்கோல் போரினை காக்கும் குக்கல்கள் போன்ற குறுகிய புத்தியாளர்கள் - கொடை அறியாத தடை மனத்தவர்! கடை மனிதர்கள்!

மற்றொரு வகை, சேர்த்த பணம் தவறான வழியில் ஈட்டப்பட்டது என்பதை அறிந்து. 'தன் நெஞ்சே தன்னைச் சுடும்' என்பதால், அதை திருப்பதி ஏழுமலையானுக்கு வைரத்தோடு, ஏதோ அவர் துரித நகைக்கடை வைப்போர் போல என்றோ, அல்லது அணிந்து கம்பீர நடை போடுவார் என்றோ கருதாமல், உண்டியலில் போட்டு, பாவத்திற்குக் கழுவாய் தேடி, மோட்சத்திற்கு டிக்கெட் வாங்கிட முந்துபவர்கள்! அறவிலை வணிகர்கள்!!

ஆனால் சொர்ணா அரங்கநாதன் போன்ற பகுத்தறிவாளர்கள் தாராள மனம் படைத்தவர்கள் மட்டுமல்ல; எங்கே எவரிடம் இதைக் கொடுத்தால் அது சுயநல வாய்க்காலில் செல்லாமல், பொது நலப் பயன்பாட்டு வயலுக்குப் பயன்படும் என்றே தெளிவாக திட்டமிட்டு நன்கொடை தருவார்கள்.

நேற்று முன்னாள் (8.9.2018) வல்லத்தில் பல்கலைக் கழக வளாகத்தில் நடை பயிற்சியின்போது அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றபோது, ரூபாய் 50 ஆயிரம் கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும், ரூபாய் 20 ஆயிரம் நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கும், (இரண்டும் திருச்சியில் பல ஆண்டுகளாக இயங்கும் மனிதநேய மய்யங்கள் ஆகும்) நன்கொடையளித்தார்! நாம் நன்றி கூறினோம். அவரது மகிழ்ச்சி ஊற்றெனப் பெருகியது.

என்னே தொண்டறம்! இவரைப் போலவே மதுரை திருநகர் பகுதியில் வாழும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஓய்வு பெற்று, ஒற்றை தனி மரமாய் ஓங்கி நிற்கும் தொண்டறச் செம்மல் ஆசிரியர் இராமசாமி அவர்களும் தனது சேமிப்பினை நமது அறக் கட்டளைகள் நடத்தும் கல்வித் தொண்டிற்கு வாரி வழங்கி தோன்றாத் துணையாக  உள்ள மற்றொரு தொண்டறச்செம்மல்.

அவர்பற்றி நாளை எழுதுவோம். 'விடுதலை' எழுத்துக்களை வரிவரியாய் படித்து மனதிற்கோடிட்டு, மகிழ்ச்சியுடன் மற்றவர்களிடம் பகிரும் ஈத்துவக்கும் பணியில் இன்பங்காணும் எளிமையின் ஏந்தல் அவர்!

இவர்களைப்  பெற்றது பெரியாரின் வாழ்நாள் மாணவன் ஆகிய எம்மைப் போன்றோர்க்கு எத்துணை எத்துணைப்   பேறு - வற்றாத ஆறுபோன்ற பேறு! என்பேன்! மகிழ்வேன்.

(அவர்பற்றி நாளை)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner