எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறிவியல் தொழில் நுட்பம் வேகமாக வளரும் இந்நாட்களில் சராசரி ஆயுளும் முன்பைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பெருகியுள்ளது.

அதுபோலவே புதுப்புது வகை தொற்றுநோய்களும் ஒரு நாட்டிலிருந்து கிளம்பி, மற்ற நாடுகளுக்குப் பரவி, எளிதில் படையெடுப்பை வெற்றிகரமாக ஆக்கி மருத்துவ உலகிற்குச் சவால் விடுகிறது!

முன்பு காற்று, நீர், நில வெளி எல்லாம் தூய்மையாகவே இருந்தன. சுற்றுச்சூழல் மாசுபடவில்லை; இன்றோ வெப்ப சலனம் ஒரு பக்கம் - காடுகளை அழித்த மனிதர்களின் கொடுஞ் செயல் மற்றொரு பக்கம்! இவைகளால் புதிய நோய்களும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இளம் வயதுக்காரர்கள்கூட இதய நோயால் தாக்குண்டு இறந்து விடும் நிகழ்வுகள் இப்போது மிகச் சர்வ சாதாரணமாகியுள்ளது!

இளையவர்கள் இதிலிருந்து தங்களைக் காப்பாற்ற நல வாழ்வு வாழ; மிகுந்த அக்கறையும், கவனமும் உடல் நலத்திற்காக காட்டிட முன் வருதல் அவசியமாகும்!

இளையர்களுக்குக்கூட இதோ ஒரு 10 வழிகள்: இதனை நாள்தோறும் கடைப்பிடித்து வந்தால் நலவாழ்வு நீண்ட வாழ்வாக ஆக முடியும்.

1. முதலில் நீங்கள் 'தனிக்காட்டு ராஜா'வாக இல்லாமல், நல்ல, கலகலப்பாகப் பேசிப் பழகும் நண்பர்கள் குழாத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் அவசியம். அதுவே உயிர்க் காப்பான் தோழன் என்ற உண்மையை உங்கள் வாழ்க்கையுடன் அமைத்துத் தரும்.  இளவயதினருக்கும்கூட மன அழுத்தம் - இறுக்கம் - பணிச் சுமையினாலோ  அல்லது எதிர்பார்த்த வேலை கிட்டாததாலோ, கிட்டிய வேலையும் முழு மன நிறைவைத் தராததாலோ, அல்லது நிரந்தரமல்ல என்ற பயம் காரணத்தாலோ, அந்த அழுத்தம் கூடக் கூடும்.

அதற்குச் சரியான மருந்து, நல்ல நண்பர்கள் வட்டம்தான். நகைச்சுவை உணர்வு வாழ்க்கைச் சாப்பாட்டின் உப்புப் போன்றது. அவ்வுணர்வுடன் சில நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்; வாய்விட்டுச் சிரியுங்கள். மன அழுத்தம் மலையென வந்தாலும் பணியென உருகிக் கரைந்தோடி  விடும். அவர்கள் நீங்கள் விரும்புபவர்களாகவும், உங்களை அவர்கள் நேசிப்பவர் களாகவும் இருப்பதே முதல் தகுதி அதற்கு.

2. அண்மைக் காலத்தில் விஞ்ஞான விந்தையான தகவல் தொழில் நுட்பப் புரட்சியினால் விளைந்த மின்னணுவியல் கருவிகள், அவைகளை வைத்து சமூக ஊடகங்களில் (Social Media)  அதிகமான நேரம் செலவழித்து, உங்களின் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொள்ளாமல் தேவையான அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டுங்கள். உங்களுக்கு அது கட்டுப்பட்டதாக வேண்டும். அதற்கு நீங்கள் கட்டுப்பட்டவராக மாறிட வேண்டாம்!

3. உங்களின் நலத்தில் நீங்கள்தான் தனி அக்கறை எடுத்துக் கவனிக்க வேண்டும்; உடல் நலத்தைப் பேண 'வாய்தா' வாங்கும் முறை - 'நாளை பார்த்துக் கொள்ளலாம்' என்று தள்ளிப் போட்டு தன்னையே இழந்து   விடாதீர்கள். அவ்வப்போது உடனுக்குடன் அதனைச் சரி செய்து கொள்ளுங்கள். பழுதடைந்த வாகனங்களைக்கூட உடனே சரி செய்தால்  பயணத்தை மேலும் தொடர முடியும்? தள்ளிப் போட்டால் பயணம் இல்லை என்றாகிவிடாதா? - சிந்தியுங்கள். மேலும் 'நாளை' என்பது நம் திட்டப்படி சரியாக வருமா? அவசர நிகழ்வுகளின் குறுக்கீடு வருமா? யாரும் கூற முடியாது!

'இன்று' என்பது முழுக்க நம் கைகளில் மட்டுமே உள்ளது!  எனவே விரைந்து காலதாமதம் இன்றி உடல் நலம் பேணுங்கள்.

4. இளைஞர்கள் முதல் முதியோர்வரை அவரவர் உடலுக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப உடற்பயிற்சி செய்ய - உணவு உண்ணுதலைப் போலவே நேரம் ஒதுக்கி செய்யப் பழகிக் கொள்ளுங்கள்!

நாளும் தவறாமல் செய்யும் பழக்கம் உடலைப் பாதுகாக்கும். பழக்கம் பிறகு வழக்கமாகி சோம்பலை அதுவே விரட்டி விடுவதில் தனி வெற்றி காணும்.

5. கடினமாக உள்ளது நாம் செய்யும் வேலை என்று கருதி ஒதுக்காதீர்; தள்ளிப் போடாதீர்!

முதலில் எதுவும் கடினமாகவே தோன்றும்; பிறகு செய்யச் செய்ய அது உங்களுக்கு எளிமையாகி விடுவது உறுதி! கடின வேலையைத் தேடுங்கள். இலகுவான வேலை வேலையே அல்ல என்று மனதில் உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிக்கலைத் தீர்ப்பது தான் சிறந்த அறிவின் வெளிப்பாடு. கடினமான பணி மூளைக்கும், உடலுக்கும் - இரண்டுக்குமே நல்லதொரு பயிற்சிக் களம், மறவாதீர்!

(திங்கள் தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner