எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோழர் பாண்டியன் படைத்த அமுது!

 

நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்டியன் அவர்கள் எழுதி முடித்து இம்மாத வெளி யீடாக வந்துள்ள "பெரியார் என்னும் இயக்கம்" என்ற நூலைக் கொடுத்தார். அவர்தான் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்! அணிந்துரை, மிகவும் சுருக்கமாகவும் செறிவானதாகவும் அமைந் துள்ளது.

நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி)லிட் வெளியிட்டுள்ள இந்நூல் 92 பக்கங்கள் கொண்டது, விலையும் குறைவு 80 ரூபாய்தான்.

நேற்று இரவே இதனைப் படிக்க எடுத்து முழுவ தையும் ஒரே அமர்வில் தொடர்ந்து படித்து முடித்தேன். சுவைத்தேன் - கொம்புத்தேன் போன்று சுவைத்தேன்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி எத்தனையோ நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. என்றாலும் மிகவும் தனித்த சுவையுடனும், கருத்தாழத் துடன், பெரியார் பற்றிய நுனிப்புல் மேயும் பலதரப்பட்ட விமர்சகர்களுக்கும் தக்க பதிலுரைகளும் அடங்கிய, இன்றைய இளைஞர்கள் படித்து முடித்து அசை போட்டுச் சிந்திக்க வைக்கும் அற்புத அறிவுக் கருவூலம்.

ஒரு மாறுபட்ட அணுகுமுறையில் அய்யாவை பல் வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுவதோடு, அவர் எப்படி ஒரு தனித்த சாதனை செய்த புரட்சியாளர் - ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் என்பதை அவர் தொகுத்துச் சொல்லும் முறை - எடுத்த நூலை கீழே வைக்கவே மனமின்றி தொடர்ந்து படித்து வைக்கின்ற ஈர்ப்பினை உருவாக்குகிறது!

1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகிய பின், தந்தை பெரியார்தம் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திருச்சியில் கலந்து கொண்டு - 18 ஆண்டு பிரிவுக்குப் பின் ஒரே சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்தகாலை நிகழ்த்திய வரலாற்றுப் பெருமை வாய்ந்த வாய்மைப் பேருரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஆங்கிலத்தில் 'Putting Centuries into a capsule' பல நூற்றாண்டுகளை ஒரு சிறு குளிகை மருந்துபோல, உள்ளடக் கியது தந்தை பெரியாரின் தன்னிகரற்ற தொண்டு" என்றார்.

அதுபோல 95 ஆண்டு காலம் வாழ்ந்து, எதிர் நீச்ச லடித்து, அவரது லட்சிய வெற்றிக் கனிகளை அவரே சுவைத்த ஒரு வீர காவியமான  "தந்தை பெரியார் ஒரு தனி மனிதரல்ல, ஒரு சகாப்தம் ஒரு கால கட்டம், ஒரு திருப்பம்" என்றவர் அவரது தலைமாணாக்கர் அறிஞர் அண்ணா.

'மண்டைச் சுரப்பை உலகு தொழும் ' ஒரு ஒப்பற்ற புரட்சியாளர்பற்றி தோழர் பாண்டியன் படைத்துள்ள இந்நூல் ஒரு புதுமை படைப்பு, சீர்மை நிறைந்த சிற்றிலக்கியம் ஆகும். எட்டு வடிவம் என்பதுபோல எட்டு அத்தியாயப் (Octagonal) பரிமாணத்தில் பெரியார் பற்றிய ஓர் உயிரோவியமான கருத்தோவியம் இது!

தோழர் பாண்டியனின் பேச்சு சிறந்ததா? எழுத்து மிகுந்ததா என்ற தலைப்பிட்டு வாதிட்டால் இரண்டும் தான் என்று எந்த நடுவரும் தீர்ப்பளிப்பர்.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு அரிய கருத்து முத்து இதோ

"...அவர் உயிருடன் வாழ்ந்த காலம் முழுவதிலும், அவரைப் பலரும் சந்தித்து மடக்கிக் கேள்வி கேட்டு, அவரை பதில் கூற முடியாது தடுக்க முயல பார்த்தனர். ஆனால் கேள்விகளைக் கேட்கத் துண்டியே பதில் கூறும் வகையில், பாடமே கற்பித்து வந்த பேராசான்தான் தந்தை பெரியார். அவரது மறைவுக்குப் பின் அவரது குரல் கேட்பது இல்லை ஆனால், அவருக்குப் பதிலாக விஞ்ஞானிகள் அவர் கூறிய அரியக் கருத்துக்களை நிறுவிக் காட்டி வருகின்றனர்.

விஞ்ஞானம் மனிதனை வளர்க்கும் பாதை ஆகும். ஏற்றுக் கொள்பவர்களை, விஞ்ஞானம் வளரும்போது அவர்களையும் வளர்க்கும். அதை ஏற்காவிட்டால், விஞ்ஞானம் அத்தகையோரை உதறித் தள்ளி விட்டு, முன்னேறிச் செல்லும்.

எதிர்த்து நிற்போரை, விஞ்ஞானம் மிதித்து நசுக்கி விட்டு அது தன் வழியே செல்லும். ஏனெனில், விஞ்ஞானம் அறிவை அடிப்படையாகக் கொண்டது.  அந்த விஞ்ஞானத்தைத் தன் அறிவுக்கான கைத்தடியாய் பிடித்தவர் பெரியார்.

எனவே கும்பமேளா கூட்டத்தைப் பார்த்து, பெரியார் தோற்றுவிட்டார் எனும் சிந்திக்க மறுக்கும் சிறியரை மன்னிப்பதே நமக்கு வேலையாகிவிட்டது...."

... என்னே கருத்து. ‘Literature is the record of best thoughts என்றார் எமர்சன் என்ற அறிஞர்.

'இலக்கியம் என்பது சிறந்த கருத்துக்களின் உயர்ந்த ஆவணம்' என்றார்.

தோழர் பாண்டியன் படைத்த தக்கதோர் அமுது ஓர் இலக்கிய ஆவணம் ஆகும்.

படியுங்கள், பயன் பெறுங்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner