எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நேற்று, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவர் ‘பாரதிதாசன் பரம்பரை' என்பதன் முன்னோடிக் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்களை வெளியிட ‘‘அவரது தமிழுற வான'' புரவலர் அய்யா முதியவர் சஞ்சீவி அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், இந் நூற்றாண்டின் இணையற்ற இனமானக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஒரு புது நூலைத் தந்தார்!

படித்தேன்  - சுவைத்தேன்!

‘மாற்று மனிதம்‘ என்ற தலைப்பில், பல ஏடுகளில், பற்பல வாய்ப்புகளில் வார்த்தெடுக்கப்பட்ட சிந்தனைச் சாட்டையின் சொடுக்குகள் அவை! அவற்றில்தான் எத்தனை மிடுக்குகள்! எளிதில் விடை காண முடியாத கேள்வி அடுக்குகள்கூட!

மனிதர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். ஆனால், ‘‘மனிதம்‘’ குறைந்தே வருகிற நிலையில், அந்த மனிதம்கூட லாப, நட்டக் கணக்கின் அடிப்படையில் இயங்கும் தரம் தாழ்ந்த நிலைக்கு சமூகம் அதனை வலுக்கட்டாயமாக இழுத்தே செல்லுகிறது.

நீதித்துறை என்ற உலகத்திலும்,  இதனை உயர்த்திட வேண்டிய, ஊடக உலகமாயினும் ‘‘மாற்று மனி தத்தின்’’ தேவை நாளும் அதிகமாகியே வருகிறது என்பதனை பல கவிதைகள் மூலம் படம் பிடித்துக் காட்டும் பாங்கு வியக்கத்தக்கவை; போற்றத்தக்கவை.

‘‘விரல்கள்'' என்ற தலைப்பில்,

‘‘பொய்க் கையெழுத்துப் போடாத

காந்தளின் அழகிய விரல்களை

இயற்கையே

தன் கையில் ஏந்திக் கொள்கிறது.

ஊரார் கையெழுத்தைப்

போடுவதற்காகவே

எழுதக் கற்றவன் விரல்கள்

கழுக் கம்பங்களின்

முழுப் பிம்பங்களே! வேறு என்ன?

அடையாள மையிடப்பட்ட விரல்கள் யாவும்

தேர்தல் ஆணையத்தின் தணிக்கைக்காகக்

கொண்டு செல்லப்பட்டுள்ளன

இலவச விரல்களை நிவாரண அடிப்படையில்

அரசு வழங்கவேண்டும் என்று

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன

தீப்பெட்டித் தொழிற்சாலைகளும்

பட்டாசுத் தொழிற்சாலைகளும்

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புக்கு அஞ்சி

இனிமேல்

விரல்கள் உள்ள குழந்தைகளுக்குப் பதிலாகக்

குழந்தைகள் இல்லாத

விரல்கள் வேலைக்கு அமர்த்தப்படும் என்று

அறிக்கை வெளியிட்டன

ஏகலைவர்களிடம் மிகைக்கட்டை

விரல்கள் இருப்பில் இருப்பது

தெரிந்த

துரோணர்கள்

குருகுலங்களை மூடிவிட்டனர்

உச்சநீதிமன்றமும்

ஓர் அவசர உத்தரவு போட்டது

போலி ஆவணங்கள்

தயாரிப்பதைத் தடுப்பதற்காக

இறந்தவர்கள் கட்டை விரல்களைத்

தாமதமின்றி இறப்பதற்குச்

சற்று முன்பாகவே

உச்சநீதிமன்றத்தில்

ஒப்படைக்க வேண்டுமாம்.''

மாற்று மனிதம் - ஏமாற்றும் மனிதத்திற்கு மாற்றாக இப்போது தேவைதானே!

‘‘வெறுங்கை என்பது மூடத்தனம் -

விரல்கள் பத்து என்பது மூலதனம்''

என்ற கவிஞர் தாரா பாரதியினையும் நினைக்க வைத்தது இக்கவிதை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner