எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோரும், புரிந்து கொண்டோரும் ஆகிய பலரும் பற்பல நூல்களை எழுதிக் குவிக்கும் ஒரு புதுமை பூத்துக் குலுங்குகிறது!

தவறான தகவல்களோ அல்லது மேடைப் பேச்சுகளில் சில சொற்பொழிவாளர்கள் தந்தை பெரியார் இப்படி பேசினார் என்று அவர்கள் சொல்லாததையும், பொல்லாததையும் கூடப் பேசிவிடும் அவலமும் ஏற்பட்டு விடுகிறது!

43 ஆண்டுகள் முன்பாக நம்முடன் வாழ்ந்து மறைந்த தந்தை பெரியார் அவர்கள் தன்னை எவரும் எப்போதும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவன் என்று வர்ணித்து விடாதீர்கள், நான் ‘அவதாரமோ’, தெய்வீகத்தன்மை உடையவனோ அல்ல; சராசரி மனிதன். ஆனால் சுயமாகச் சிந்தித்து, எனக்குச் சரியென்று பட்டவற்றை துணிவுடன், தயங்காமல் எடுத்துக் கூறக்கூடிய ஒருவன் என்று தன்னடக்கத்துடன் கூறிக் கொண்டவர்.

முன் ஒரு முறை பேச்சாளர் ஒருவர், தந்தை பெரியார் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே பெரியார் மிட்டாய் வாங்கி வரச் சொன்னதாகவும், மிட்டாய் கடைக்காரர் பெரியார் என்பதால் குறைந்த விலைக்கு அதிக மிட்டாய் கொடுத்ததாகவும், மறுபடியும் காசு கொடுத்து அதிக மிட்டாய் வாங்கிக் கொண்டதாகவும் போன்ற கதையளந்தார் - நகைச்சுவையென்பதற்காகவும், கை தட்டல்களைப் பெறுவதற்காகவும்தான்.

கூட்டம் முடிந்து வேனில் திரும்புகையில், அருகில் அமர்ந்திருந்த எங்களிடம் ‘என்னப்பா இவர் என் முன்னிலைலேயே துணிந்து இப்படிப் பேசுகிறாரே’, என்று தனது வருத்தத்தை வெளியிட்டார்கள்!

புத்தருக்கு ஜாதகக் கதைகள் என்று வந்துள்ளது போல, பெரியாருக்கு வந்து விடக் கூடாது என்பதில் பெரியார் தொண்டர்களாகிய நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்; இருக்கிறோம்.

உடனுக்குடன் ஆதாரப்பூர்வ மறுப்புகளை வெளியிட்டு, முளை விடும் போதே அத்தகைய பொய்க் கூற்றுகளை சிதைத்து விடுகிறோம்.

ஆனால் இப்போது பெரியார் பற்றாளர்கள் பெரியார் பற்றி பல்வேறு நூல்களை சான்றுகளாகக் கொண்டு சரியான நூல் எழுதுவோரும் பல்கிப் பெருகி வருகின்றனர்

நேற்று (12.9.2017) ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் நடைபெற்ற எனது பல்கலைக்கழக நண்பர் மேனாள் தடயவியல் வல்லுநர் டாக்டர் சந்திரசேகரன், நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது, ஒய்.சி.எம்.ஏ. பட்டிமன்றத்தின் ஆற்றல் மிகு செயலாளர் அருமை நண்பர் பக்தவச்சலம் அவர்கள் எனக்கு, “பெரியாரும் பெரியோரும்” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும், பாரம்பரியம் மிக்க சுயமரியாதை முன்னோடிக் குடும்பங்களில் ஒன்றாகிய காரைக்குடி இராம.சுப்பையா - விசாலாட்சி அவர்களது குடும்ப உறவுக்காரராகிய, இன உணர்வாளரும், பகுத்தறிவாளருமான சி.நாச்சியப்பன் எழுதிய அந்நூலை எனக்கு அளித்தார். இரவு உடன் படித்தேன், மகிழ்ந்தேன்.

ஆற்றொழுக்கான நடை, அற்புதமான சுவையுடன் சலிப்பின்றி ஒரு புதினம் போன்று அய்யாவின் குடும்பம் துவங்கி, கொள்கை உறவுகள் வரை “கொள்ளை இன்பம் உலவும் கவிதை” போல் எழுதியுள்ளார்.

இவரது குடும்பத்தில் ஜாதிமறுப்புத் திருமணமும் நடைபெற்று, கொள்கை வயப்பட்ட குடும்ப விளக்குகள் பெருகியுள்ளனர்!

மனிதத்திற்கு அடையாளம் மனிதம் என்று காட்டுவது போல், தனது தந்தை இராம. சிதம்பரத்திற்கு நூலை காணிக்கையாக்கியுள்ளார்.

மணிவாசகர் பதிப்பகம், வெளியீடு - 224 பக்கங்கள் - விலை ரூ.170.

நவில்தொறும் இந்நூல் நயம்காண வாங்கிப் படியுங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner