எழுத்துரு அளவு Larger Font Smaller Font


'தனிமை இனிமை தரும்' என்பது எப்போது, எவருக்கு? - இந்தக் கேள்வி முக்கியம்!
கடுமையான உழைப்பாளிகள், இயக்கங்களில் ஈடுபட்டு ஓய்வறியாது உழைப்பவர்கள் - இவர்களுக்கு தனிமை. அது கூட சில மணி நேரம் அல்லது சில நாள்கள்! தனிமை இனிமை தரும்; ஏன் 'இனிமை' மட்டுமா? ‘வலிமை‘யும் தரும்!

இளைப்பாறுதலில் ஒரு பகுதி என்ற அளவில் மட்டுமே வரையறைக்குட்பட்ட தனிமை விரும்பத்தக்கதே!

ஆனால் எப்போதும் பிறருடன் - நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் - இவர்களிடையே கலந்து கலகலப்பாகப் பேசி, சிரித்து, மகிழ்ந்து வாழ நாம் அனைவரும் கற்றுக் கொள்வதுடன்; பிறருக்குப் பயன்படும் வகையில் அந்த நட்புறவு பயன்படவும் வேண்டும்; காரணம் மனிதன் ஒரு சமூகப் பிராணி அல்லவா?

'உம்முணா மூஞ்சிகளாகவும்‘, 'சிடுசிடு', 'கடுகடு' என்றே எப்போதும் உள்ளவர்கள், தெருவார்க்கும் பயனற்ற சிறிய 'வீணர்கள்‘ என்பது பலருக்கும் புரிந்தாக வேண்டும்.

எப்போதும் தனிமை என்பது தனிமைச் சிறையாகும்!

தனிமையே எப்போதும் என்பது மன இறுக்கத்தின் ஊற்றுக்கண் ஆகும்!

தற்கொலை உணர்வுக்கும் தூண்டும் - சிற்சில நேரங்களில்.

இன்று வந்த ஆங்கில நாளேடான "டைம்ஸ் ஆஃப் இஃந்தியா"வில் ஒரு வாழ்வியல் செய்தி!

அதன் தலைப்பு என்ன தெரியுமா?

'உடல் பருமன் எவ்வளவு சாவுக்கு அழைப்போ அதுபோன்றதே தனிமையில் கிடப்பதும்!‘

'Loneliness as deadly as obesity'
'social isolation also tied
to increased risk of premature death'

சமூகத்தில் ஒதுக்கி ஒருவரை ஒளிமயமாக்கி வைத்தால் அது சாவை விரைவு படுத்தி விடும் அபாயத்தை உருவாக்கி விடும் ஆபத்து! என்று எழுதியுள்ளது!

இது சம்பந்தமானதொரு நீண்டதோர் ஆய்வினை, அமெரிக்காவில் உள்ள பிர்ஹாம் யங் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜுலியானே ஓல்ட் லன்ஸ்டாட்(Julianne Holt - Lunstad) அவர்கள் செய்து மேற்கண்ட கருத்தினைத் தெரிவித்து எச்சரிக்கை வழங்கியுள்ளார்!

இது வயதான முதியவர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தங்களை அதிமேதாவிகள், தங்கள் தகுதிக்கு ஏற்ப பழகும் தன்மை கொண்டவர்கள் எவருமே இல்லை என்று தலைக்கனத்துடன் தனித்தே ஒதுங்கியிருக்கும் அறிவு ஜீவிகளுக்குத் தக்கதோர் எச்சரிக்கையாகும்!

இரண்டு ஆய்வுகளிலிருந்து இதை நிரூபிக்கும் புள்ளி விவர வகைகளை பேராசிரியர் ஜுலியானே அவர்கள் கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல; இப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதலோ, அல்லது சிறைச் சாலையில் ஒருவரை நீண்ட கால தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதோ அவரது ஆயுளைக் குறைத்து சாவின் விளிம்பில் தள்ளும் மனிதாபிமானற்ற செயலாகும்!

இந்த இடத்தில்தான் நண்பர்கள் அதுவும் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் - மகிழ்ச்சியை ஏற்படுத்த தேவை! தேவை!

நம்மைச் சுற்றி நல்லவர்களான நண்பர்கள் இருப்பதை விட நமக்கு வேறு நல்ல பாதுகாப்பு கேடயம் வேறு எது?

நாம் அவர்களிடமிருந்து ஏதும் பெறாவிட்டாலும்கூட, நமக்கு அவர்கள் சிறந்த வழிகாட்டுபவர்களாகவும், மகிழ்ச்சி, நல்வழி எது என்று போதித்திடுபவர்களாகவும் இருக்கப் பெரிதும் உதவிடச் செய்யும் என்பது உறுதி!

கைமாறு கருதாத நட்பு வட்டமே நாம் பெறும் செல்வங்களில் தலையாய செல்வம்! எனவே தனிமையைத் தவிர்த்து நீண்ட காலம் வாழலாம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner