எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நம்மில் பலர் எதை அவசியம் தெரிந்து வைத்து அவசர நெருக்கடி, விபத்து - போன்றவற்றில் அது பயன்படுமோ அதைத் தெரிந்து வைப்பதே இல்லை.

தான் எந்த ஜாதி, அதில் எந்தப் பிரிவு? இத்தியாதி விவரங்களைத் துல்லியமாகக் கூறும் வழக்கமுடைய நம்மக்களில் பலர், தங்களது ரத்தப் பிரிவு (Blood Group) எப்பிரிவு என்பதை அறிந்து தங்கள் சட்டப் பையிலும், மனதிலும் அதைப் பதிய வைத்துக் கொள்ளுவதே இல்லை.

அது மட்டுமல்ல, நம்மில் பலரும் தங்களது அடையாளம் முகவரி, போன்றவற்றை  I.C. . என்ற மேலை நாடுகளில் உள்ள Identity Card வைத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை.

"ஆதார் அட்டை" இப்போது இவைகளுக்கு ஓரளவு பயன்படுகிறது. ஆனால் அது எப்போதுமா 'நம் சட்டைப் பையில் உள்ளது?

மயக்கம் போட்டு விழுந்தாலோ, விபத்துக்கள் ஏற்பட்டாலோ, நம்மல் பலர் பற்றிய விவரங்கள் இல்லாது, இழப்புக்கு ஆளான குடும்பத்தினருக்குக்கூட உடனடியாக தகவல் தர இயலாத பரிதாப நிலை உள்ளது.

இதுபற்றி நன்கு யோசித்து அருமையான தொண்டறப் பணியை, பிரபல வயிறு, செரிமான மருத்துவர்  டி.எஸ்.சந்திரசேகரின் மெடிந்தியா அறக்கட்டளை அருமையான ஒரு திட்டத்தை வெறும் பேச்சால் அல்ல, செயலால் செய்து ஆளுநர் அவர்களின் பாராட்டும் பெற்றுள்ளார்.

இதைப்பற்றி அனைவரும் அறிந்து, நிறுவனங்கள், அமைப்புகள், குடும்பங்கள், தொழில், கலை, அலுவலங்கள் இதனை செயல்படுத்திடலாம். அதிக செலவாகி விடாது. வசதி இல்லாத ஏழை, எளியவர்களுக்கு வசதி படைத்தவர்கள் தாராளமாக முன் வந்துஉதவிடலாமே!

அதுபற்றிய விவரங்கள் இதோ:

அவசர கால மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு அட்டை Emergency Medical Care Card)
பொது மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, "அவசரகால மருத்துவ சிகிச்சைக்கான அட்டை (EMC2)" தயார் செய்யப்பட்டு உள்ளது.

'பத்மசிறீ விருது பெற்றுள்ள டாக்டர் டி.எஸ். சந்திரசேகர்,   MD, DM, D.Sc., FRCP(அறங்காவலர், மெடிந்தியா அறக்கட்டளை  மற்றும் தலைவர், மெடிந்தியா மருத்துவமனைகள், நுங்கம்பாக்கம், சென்னை) அவர்களால் இம்மருத்துவ அட்டை உருப் பெற்றுள்ளது.

Laminated செய்யப்பட்டுள்ள இந்த ஆரஞ்சு நிற நூதன அட்டையின், முன்பக்கத்தில் சிறிய அழகிய அட்டை வைத்து இருப்பவரின் பெயர், வயது, இரத்தப் பிரிவு (Blood Group) கைப்பேசி எண் மற்றும் அவரது விலாசம் ஆகியவை அச்சிடப்பட்டு இருக்கும். மேலும் அட்டை வைத்து இருப்போர்க்கு நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய வியாதிகள், கல்லீரல், வியாதிகள், சிறுநீரக வியாதிகள், ஒவ்வாமை, வாந்தி மற்றும் ஆஸ்துமா போன்ற வியாதிகள் ஏதேனும் உள்ளதா என்ற விவரமும் அச்சிடப்பட்டு இருக்கும்.

மேலும் இந்த அட்டையில் அவரது நெருங்கிய உறவினர் அல்லது தகவல் தெரிவிக்க வேண்டியவரின் பெயர், விலாசம் மற்றும் கைபேசி எண்ணும் அச்சிடப்பட்டு இருக்கும்.

அட்டை வைத்து இருப்போர் தனியாக பயணம் செய்யும்பொழுது, திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது விபத்தில் சிக்கி  மயக்கம் அடைந்தாலோ, அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வியாதிகள் அடிப்படையில் மருத்துவர்களால் உடனடி சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும். மேலும் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்டவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய உதவிகள் உடனே கிடைத்திட வழி வகைகள் நல்கும்.

பாதிக்கப்பட்டவருக்கு இவ்வாறு உடனடி சிகிச்சை (Golden hour treatment) செய்து,  பல உயிர் இழப்புகளை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புகள் அடங்கிய, இந்த சிறப்பு அட்டையை, மெடிந்தியா மருத்துவமனைகள் (83, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் சென்னை) மூலம் தொடர்பு  கொண்டு இலவசமாக பெற முடியும் அட்டையைப் பெற முன்னரே பதிவு செய்ய வேண்டும்.

தொலைபேசி எண்கள்: 044-28312345,
செல்பேசி: 9480993132, 9840993135

இந்த அட்டையானது இலாப நோக்கம் ஏதுமின்றி சேவை செய்யும் மனப்பான்மையுடன் மெடிந்தியா அறக்கட்டளை நுங்கம்பாக்கம் சென்னை மூலம் வழங்கப்பட ஆயத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

முகவரி: டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் அவர்கள்

பத்மசிறீவிருது, (2016) மருத்துவர்

தலைவர், மெடிந்தியா மருத்துவமனை, கவுரவத்தலைவர், அகில இந்திய ஜீரண நலத்துறை சங்கம், நுங்கம்பாக்கம், சென்னை - 34
அறங்காவலராக உள்ள மெடிந்தியா அறக்கட்டளை இதற்கான முயற்சியை  மேற்கொண்டுள்ளது.

"இருட்டைக் குறை கூறிக் கொண்டிருப்பதைவிட ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றி வெளிச்சத்தைத் தரும்  பாராட்டத்தக்க அரிய முயற்சி! இம்முயற்சி முதலில் சிறிதாக துவங்கினாலும் இது பெரிதாக வளர்ந்தால் வயது முதிர்ந்தவர்கள் உட்பட, அனைவருக்கும் இது உயிர் காக்க, வாழ வைக்கும் பாதுகாப்பு அரணாகத் திகழும்! பயன் பெறுக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner