எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓர் இயக்கமானாலும், நிறுவனம் ஆனாலும், ஏன் - குடும்பமானாலும் எந்த நிர்வாகத்தினைச் சிறப்புடனும், திறமையுடனும், நாணயத்துடனும் நடத்துவதற்கு நல்ல பொறுப்பான மேலாண்மையாளர்கள் தேவை.

நம்பிக்கைத் துரோகம் என்ற நோய் தாக்கப்படாத வளர்ந்து முற்றிய கதிர்கள் உள்ள நெற்பயிர்களைப் போல் அத்தகையவர்கள் அமைந்தால்தான் எவ்வளவு சிறப்போடு, எவ்வளவு ஆர்வத்தோடு, எவ்வளவு எதிர்பார்ப்போடு துவக்கப்படும் நிறுவனங்கள் - அமைப்புகள் ஆனாலும் அவை வெற்றி பெற்றிட தெளிவான முறையில் தேர்வுகள் நடைபெறுதல் முதல் தேவையாகும்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்          (குறள் - 517)

அது மட்டுமா? அந்த 'இவன்' எப்படித் தேர்வு செய்வது, ஆளுமையில் எப்படிப்பட்ட அணுகுமுறை பயனுறு வகையில் அமையக் கூடும் என்பதையும் திருவள்ளுவப் பேரறிஞர் துல்லியமாக விளக்குகிறார்.

இப்போது MBA என்ற (Master of Business Management) வகுப்புகளுக்கெல்லாம் இதனை (ஆங்கில மொழி பெயர்ப்புடன்) வைத்து, படிப்பாளிகளைப் பக்குவப்படுத்தலாம்.

பெரியார் அறக்கட்டளையின் தலைவரும் (மறைந்த),  சீரிய சிந்தனையாளருமான சிவகங்கை ஏழை மக்கள் வழக்குரைஞர் மானமிகு ஆர். சண்முகநாதன் அய்யா  அவர்கள், தன் பிள்ளைகளுக்கு முதற்கொண்டு அனைவருக்கும் சொல்லிக் கொடுத்த, ஒழுகச் சொன்ன குறள்கள் இதோ:

"தெரிந்து தெளிதல்" என்ற அதிகாரத்தில் ஓர் குறள்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்               (குறள் - 509)

பொருள்: யாரையும் ஆராய்ந்து பார்க்காமல், ஒருவர் அப்படியே நம்பி விடக் கூடாது. அவ்வாறு ஆராய்ந்து பார்த்தபின், நம்பத் தக்கவைகள் எவையோ, அவற்றை மட்டும் அய்யுறாது நம்புதல் வேண்டும்.

அதுபோலவே மற்றொரு வழிகாட்டும் பாடம் நம்மில் பலருக்கும் இதோ:

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுறவும்

தீரா இடும்பை தரும்                    (குறள் - 510)

பொருள்: ஒருவனை நன்கு ஆராய்ந்து பார்க்காமல் நம்புவதும், ஆராய்ந்து பார்த்த பிறகு நம்பிக்கையுடையவனிடத்து அய்யப்படுதலும், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களைத் தவிர, இக்குறளைக் கடைப்பிடித்த தலைவர் எவரையும் யாம் கண்டதில்லை.

தந்தை பெரியார் தம், நம்பிக்கையை எவரும் எளிதில் பெற்று விட முடியாது; யாருக்காவது முக்கிய பொறுப்புக் கொடுக்க அவர்கள் நினைத்தால், எளிதில் முடிவு எடுத்துவிட மாட்டார்; பல சோதனைகளையும் (மறைமுக), பல்வேறு இக்கட்டான சூழலில் அத்தகையவர்கள் நடந்து கொண்ட முறைகள், சராசரி ஆசாபாசங்களைத் தாண்டி அத்தகைய நபர் நடக்கிறாரா? என்றெல்லாம் கூர்ந்து, பார்ப்பார். ஒரு பார்வையிலே ஓங்கி மனிதர்களை அளந்து விடும் "நுண்மாண் நுழைபுலம்" படைத்தவர் அய்யா என்றாலும்கூட பல்வேறு கோணங்களில் யோசித்து வைப்பார்.

பொறுப்பில் வைத்தபின் எளிதில் சந்தேகப்பட மாட் டார்; முழு நம்பிக்கை வைத் திருப்பார்! பல புகார்கள் - தவறுகள் குற்றச் சாற்றுகள் அப்பொறுப்பாளர்மீது கூறப்பட்டாலோ, எழுப்பப்பட்டாலோ அவற்றை நிதானமாகக் கேட்டபிறகு, அவசரப்பட்டு நடவடிக்கையெடுத்து நீக்குவதோகூட அவருடைய முறை அல்ல.

ஆங்கிலச் சொற்றொடரானது 'Giving the long rope, or giving  long margin' என்றபடி மேலும் ஓரிரண்டு முறை பொறுத்துப் பார்ப்பார்; அதன்மீதே நடவடிக்கை பாயும்.

தெரிந்தபின் அய்யுறுவுதான மனித வாழ்வில் பலர், மனைவியைக்கூட சந்தேகப்படும் கணவன்களும், தொண்டர்களைச் சந்தேகப்படும் தலைவர்களும் உயிருக்குயிரான நண்பர்களையே ஒரு வகையாகப் பார்க்கும் விசித்திர நண்பர்களும்கூட உண்டே! அன்றாட வாழ்வின் அவலங்களை - செய்தித்தாளில் பார்க்கிறோம். சில உண்மைகள் அப்பக்கத்தில் இருக்கக் கூடும் என்றாலும்,

நம்பிக்கைத் துரோகமும், நயவஞ்சக நாடகமும் மலிந்து வரும் இக்கால கட்டத்தில் தெளிந்த நட்பும், நன்றி உணர்வும் - நம்பிக்கையை நியாயப்படுத்தும் பொறுப்பாளர்களும், நண்பர்களும், அத்திப் பூக்களே!

 

- கி.வீரமணி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner