எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நட்பின் வலிமை சிறப்பானதுதான்; ஆனால், அதே நட்பு கூட நமக்குப் பல நேரங்களில் வலியை - தீராத வலியை உருவாக்கி, மன உளைச்சலைத் தந்து விடுகிறதே!

நாம் அந்த நண்பரை - நட்புறவைப் புரிந்து கொண்ட அளவு அவர் நம்மைப் புரிந்துகொள்ளாமல் பிழைபட உணர்ந்து, பெருத்த பள்ளத்தை நட்பில் உருவாக்கி அவரும் தனிமைப்படுத்தப்பட்டு பிரிந்து வாழும் அல்லது துறந்த அல்லது இறந்த நட்பாக மாறி விடுகிறதே என்று எண்ணுகிற போதுதான் வள்ளுவரின் ‘நட்பு ஆராய்தல்’ அதிகாரம் நமக்குத் தக்க விடையைத் தருகிறது!

‘‘நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்பின்
வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு (குறள் 791)

‘‘நட்பு உடையவர்களிடம் நட்பு செய்துகொண்ட பின், அதனை விட்டு விடுதல் என்பது ஒருவருக்கு இயலாது; ஆதலால் முன்கூட்டியே ஆராயாது நட்புச் செய்தல் என்பது கூடாது. அப்படி செய்தால், அதைவிடக் கேடு பயப்பது வேறொன்றுமில்லை.’’

இந்த அதிகாரம் நட்புக்கான ‘எச்சரிக்கை ஒன்று’ என்று நம்மை ஆயத்தப்படுத்தும் அறிவுரை பொதிந்த பாடம் என்றால் மிகையல்ல.
மற்றொரு குறளும் சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

‘‘குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு (குறள் 793)

‘‘ஒருவர், பிறருடைய சிறந்த பண்பையும், உயர்ந்த குடிப்பிறப்பையும் (பண்பால், பிறப்பால் அல்ல), குற்றங்குறைகளின் தன்மையையும், தரங்குறையாத சுற்றத்தாரின் பாங்கினையும் நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே, அவரோடு தக்க முறையில் நட்பு கொள்ளவேண்டும்.’’

இதில் இன்னொரு கடும் எச்சரிக்கையாக இதற்கு முதலில் உள்ள குறளில் அதாவது (792 இல்) கூறப் பட்டுள்ளது.

தவறான நட்புத் தேர்வு எந்த அளவுக்குச் செல்லும் தெரியுமா?

சாவிற்கும்கூட காரணமாக அமைந்துவிடுமாம்! எத்தகைய அனுபவப் பிழிவுள்ள அறிவுரை! அன் றாடச் செய்திகள் இதற்கு எடுத்துக்காட்டு அல்லவா?

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான்கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும் (குறள் 792)

‘‘பலகாலும், பல முறைகளிலும் ஆராய்ந்து மீண்டும் ஆராய்ந்தும் (சலித்தும், புடைத்தும், வடிகட் டியும்) பார்த்து நட்பு கொள்ளாதவனின் நட்பு, முடிவில், அவன்தானே சாவதற்குக் காரணமான துன்பத்தினையும் உண்டாக்கி விடும்.’’

- சரி எப்படி சலித்து, புடைத்து, வடிகட்டி நல்ல நட்புறவைத் தேடுவது? அதற்கும் குறள் ஆசான் வழிமுறை - விடை கூறத் தயங்கவில்லையே!

‘‘அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல் (குறள் 795)

‘‘முறையல்லாத செயல்களை ஒருவர் செய்ய முற்படும்போது, அவர் அழும்படியாக அவருக்கு அறிவுரை கூறியும் (தன் தவறுக்குத் தானே வருந்தி அழும் அளவுக்கு நயம்பட உரைத்தும்), மீறிச் செய்தால், அவர் மீண்டும் செய்யாதபடி அவரைக் கண்டித்துரைத்தும், உயர்ந்தோர் கொள்ளும் வழக்கு இன்னதென்று உணர்ந்து, அதனை அறிவிக்க வல்லாருடைய நட்பை ஆராய்ந்து அறிந்த பிறகு, ஒருவன் பெற்றுக் கொள்ளவேண்டும்.’’

இதனைப் பின்பற்றாமல் பல்வேறு துன்பம், தொல்லை,  இழப்பு, அவதூறு, அவமானம் - இவை களைப் பெற்ற அனுபவம் என் வாழ்விலும் உண்டு; உங்கள் வாழ்விலும் உண்டு. ஏன்? அனைவரது வாழ்வில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டே இருக்கும் - இல்லையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner