எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாழ்வியல் சிந்தனைகள்-கி.வீரமணி

சென்ற 24.3.2017 அன்று தஞ்சை பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகமும், குப்பத்தில் (ஆந்திர மாநிலம்) உள்ள திராவிடப் பல்கலைக் கழகமும் இணைந்து வல்லத்தில் நடத்திய மொழிப் பெயர்ப் பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

அப்போது, அங்கு பயிற்சியாளர்களுக்குப் பாடம் எடுத்த, பெரியார் உயராய்வு மய்யத்தின் வருகைப் பேராசிரியராக  உள்ள முனைவர் திருமதி மு.வளர்மதி அவர்கள், எனக்கொரு நூலை பரிசளித் தார்கள்!

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரி யராகப் பணியாற்றிய முனைவர் மு.வளர்மதி அவர்கள் எழுதி, அந்நிறுவனம் வெளியிட்ட ஓர் நூல். அற்புதமான - ஆழமான - செறிவான கருத்துக் கருவூலமான அந்நூல் முதற்பதிப்பு 1994 ஆம் ஆண்டு வெளிவந்ததாகும்!

‘‘காண்டேகரும் கா.ஸ்ரீ.ஸ்ரீயும்‘’ என்ற தலைப்பு மிகவும் சிறப்பான வகையில், மொழி பெயர்ப்பு கலை பயிலும் அத்துணை பேருக்கும் பாடம் புகட்டும் இலக்கணம் அமைந்துள்ள, அதேநேரத்தில், சிறந்த உழைப்பினால் உருவானதொரு நூல்!

காண்டேகர் மராத்திய மண்ணுக்குரியவர். தமிழ் நாட்டுக்குத் தத்துப்பிள்ளை - இலக்கிய உலகில்!

அவரை தமிழ் கூறும் நல்லுலக நேயர்களுக்கு அறிமுகப்படுத்தியவர், மொழி பெயர்ப்பு நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வே கொஞ்சமும் எழாமல், மூலத்திற்கே மெருகு ஊட்டித் தந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள்.

அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார் ஆகியோர் நானறிந்த காண்டேகர் பிரியர்கள் ஆவர். நானும் பள்ளி பருவம், கல்லூரி, பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் காண்டேகர் வாசித்தேன். பிறகு நேசித்தேன். எனது தோழர் புலவர் கோ.இமயவரம்பனும், நானும் இவரது புதினங்களின் புரட்சிபற்றி படித்துவிட்டு விவாதிப்போம்!

காண்டேகரை கோல்காப்பூர் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நாங்கள் பேசிக்கொண் டிருப்போம்!

வடநாட்டுச் சுற்றுப்பயணம் (உ.பி.) சென்றபோது,  தந்தை பெரியார் அவர்கள், எங்களது  வாகன ஓட்டுநரிடம், கோல்காப்பூர் வழி (திரும்பிடும் நிலை யில்) செல்லும்படி - அம்மாவின் விருப்பப்படி - ‘காண்டேகர் பூமி’யைக் காண்பதற்காக கூறினார்கள். நாங்கள் உறங்கிய நிலையில், ஓட்டுநர் கோல்காப்பூர் வழியை விட்டு, ஷோலாப்பூர் வழி சென்றார். அவர் உள்வாங்கிக் கொண்ட விதம் அப்படி!

எங்களுக்கு பொழுது புலர்ந்த நிலையில், மிஞ்சியது ஏமாற்றமே!

அவ்வளவு ஈர்ப்பு காண்டேகரின் கருத்தாளுமை கொண்ட கலங்கரை வெளிச்ச எழுத்துகளுக்கு!

அந்நூலை பல கோணங்களில் ஆய்ந்து எழுதியுள்ள பேராசிரியர் முனைவர் மு.வளர்மதி அவர்கள், அதில் காண்டேகர்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள், தனது ‘திராவிட நாடு’ ஏட்டில் எழுதிய ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி யுள்ளார்.

‘‘வாழ்க்கைக் கீதத்தை விளக்கி விட்டு, வெறும் இலட்சியவாதியாக இருந்துவிடவில்லை காண் டேகர்; இன்றையச் சமூகத்தின் நிலை அவருக்கு விளங்காமற் போகவில்லை; இன்று சுகம் அனு பவிப்பவர்கள் யார் என்பதையும் அவர் தெரிந்து கொள்ளாமல் இல்லை; நொந்த மனதுடன் - நீங்களும் நானும் - வாழ்க்கையின் ரசத்தைப் பருகும் வீணர்களைப் பற்றி என்ன கூறுவோமோ, அதனைக் காண்டேகர் அழகுபட ‘‘சுகம் என்பது ரசவாதிகளின் ரசக் குளிகையைப் போல் கிடைப்பதற்கு அரிய ஒரு பொருள். அது கேவலம் - கவியின் கற்பனையில்தான் கிடைக்கக்கூடியது. இவ்வுலகில், மனிதத் தன்மைக்கும் - சுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இவ்வுலகில்: சுகமாக இருக்க வேண்டுபவன், புலியைப் போல் மற்றவர்களின் இரத்தத்தைக் குடிப்பதையே ஆனந்தமாகக் கருதவேண்டும். நியாயம் - தியாகம் - கடமை - மனிதத்தன்மை - நாணயம் - நம்பிக்கை ஆகிய சொற்களை மறக்க முடியாதவன், இந்த உலகத்தில் சுகம் அனுபவிக்கத் தகுந்தவனல்லன்!’’ என்று கூறுகிறார். ஆகா, எவ்வளவு சரியான சவுக்கடி... பிறர் உழைப்பிலே சுகம் தேடுபவர்களுக்கு! வாழ்க்கை ஏழை மக்களுக்கு, பாட்டாளி குடும் பங்களுக்கு! எப்படி இனிப்பாக இருக்க முடியும்? எனக் காண்டேகரின் கருத்து வீச்சை அனுபவித்துப் பாராட்டுகிறார் அறிஞர் அண்ணா.’’

நாளை காண்டேகரின் கற்பனை படைப்பாற்ற லையும் பார்ப்போம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner