எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் முக்கிய பிர முகர்களில் ஒருவர் பண்பாளர் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன் அவர்கள். பள்ளிப்பட்டு - (திருத்தணி அருகில்) ஊரில் மருத்துவத் தொழிலையும் தொண்டாகச் செய்து வருபவர். சட்டப்பேரவை உறுப்பினராகவும் முன்பு இருந்தவர். இவரது மூத்த சகோதரர் அத்தொகுதியில் ம.பொ.சி. அவர்களது கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் மரியாதைக்குரிய இ.எஸ்.எஸ்.தியாகராசன்.

டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன் அவர்கள் கடந்த 27.3.2017 அன்று என்னை சந்தித்தபோது,

‘‘நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்’’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு நூலினை எனக்குத் தந்தார்கள். தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற இந்நூல் நீரிழிவுக்கென பிரத்தியேகமாக தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமை உடையது; எனக்குத் தந்தது விரிவாக்கப்பட்ட பதிப்பாகும் (2016).

இந்நூலின் தொடக்கத்தில், இன்சூலினைக் கண்டுபிடித்தவர்கள் என்று இரு டாக்டர்களின் (டாக்டர் சார்லஸ் எச்.பெஸ்ட், டாக்டர் பிரெட்ரிக்  பேட்டிங்) படத்தையும் போட்டுள்ளனர்.  1921 இல் இந்த இரு டாக்டர்களும் ஒருநாயைப் பிடித்து கண்டுபிடித்த இன்சுலின் என்று எழுதிவிட்டே நூலின் உள்ளே அழைத்துச் செல்கிறார்!

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல நம்பிக்கையைத் தரும் இந்த அருமையான நூலை நன்கு படித்தேன்.

264 பக்கங்கள் - 8 வண்ணப் பக்கங்கள் - பல அரிய தகவல்கள் - பயனுறு வகையில் எளிமையாக எவரும் புரிந்து செயல்படுத்தும் பாடம் போதிப்பது போல - அதேநேரத்தில் படிக்கச் சுவை குன்றாத வகையில் விறுவிறுப்புடன் செல்கிறது!

உலகின் நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா இருக்கிறது.

தமிழகம் சளைத்ததா? மாநிலங்களில் முதன்மை இடத்தைப் பெறும் நிலையில், அந்நோயின் பெருக்கம் வேதனைக்குரியதாக உள்ளது!

பக்கம் 117 இல் ‘ஒரு சின்னக் குட்டிக்கதை’ என்று தொடங்கி கூறுகிறார்.

‘‘ஒரே ஒரு ஆள் வசிக்கின்ற ஒரு வீடு. அவ் வீட்டில் வசிக்கின்ற அந்த நபரை இருவர் சந்திக் கிறார்கள்.

அவர்கள் இருவருமே சகாக்கள். அவர்களில் ஒருவன் வீட்டுக்காரனோடு பேச்சுக் கொடுத்துச் சுவாரஸ்யத்தில் ஆழ்த்திப் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறான்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இன்னொருவன் ஏதோ ‘சாக்குப் போக்கு’ சொல்லி நழுவி, வீட்டிற்குள் நோட்டமிட்டு உள்ளதைச் சுருட்டிக் கொண்டு மறைந்துவிடுகிறான்.

இதில் யார் உண்மையில் குற்றவாளி?

வீட்டுக்காரனோடு பேசியபடி அவனது கவனத் தைப் பாழடித்தவனா?

அல்லது உண்மையில் திருடிக் கொண்டு போன வனா?

சற்றுநேரம் யோசியுங்கள்!

மேலோட்டமாகப் பார்த்தால் வீட்டுக்காரனோடு பேசியவாறு அவனது கவனத்தைப் பாழடித்தவன் மேல் குற்றம் அவ்வளவாக இல்லாததுபோல் தோன்றும்.

மற்ற நோய்கள் உட்புகுந்து கெடுதலை உண்டாக் குவதற்கு ஏதுவாக நோயாளியினுடைய ‘பாது காப்புச் சக்தியை’க் குறைக்கின்ற சர்க்கரை வியாதி, பேச்சுக் கொடுத்து, ‘போக்கு’ காட்டிய வனுக்குச் சமம்.

பேச்சுக் கொடுத்து போக்கு காட்டியவன் எப்படி தன் சகா திருட வழியமைத்துத் தந்தானோ, அதேபோல, சர்க்கரை வியாதியானது மற்ற நோய்கள் விரைந்து ஏற்பட வழியமைத்துக் கொடுக்கும்.

பற்கள் விஷயத்திலும் மேற்கூறிய உண்மைகள் பொருந்தும்.

மற்ற எல்லோருக்கும் வந்து போவதைக் காட் டிலும், நீரிழிவு நோயாளிக்கு ஈறுகள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு தொல்லை தர வாய்ப்புகள் அதிகம்.

அதற்காகவே பல் மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளிடம் கீழ்க்கண்ட ‘பல்லவியை’ப் போரடிக்கிற வரை பாடுவதுண்டு.

- எதைச் சாப்பிட்டாலும், சாப்பிட்டவுடனே நீரால் கொப்புளிக்க வேண்டும். அப்போதுதான் பற்களுக்கு இடையில் உணவுப் பொருள்கள் மாட்டாது.

- பற்களுக்கு இடையில் உணவுப் பொருள்கள் தங்கினால் அதுவே பற்களில் ‘சொத்தை’ விழக் காரணமாக இருக்கும்.

- குறைந்தது இரண்டு நிமிடம், ஒவ்வொரு நாளும் இரண்டு முறை, காலையிலும், இரவிலும் பல் துலக்கும் பழக்கம் தானாக வந்துவிட வேண்டும்.

- பற்களைத் துலக்கிய பிறகு ஒரு விரலால் ஈறுகளை அழுத்தித் தேய்த்து, ‘மசாஜ்’ செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வது உங்களுக்கு (நீரிழிவு நோயாளிகளுக்கு), மிகவும் அவசியம், அவசியம்!’’

என்னே அருமையான விளக்கம்! இப்படிப் பல பயனுறு மருத்துவ அறிவுரைகள்.

அருகல் சாறு, வெறும் கீரை, பச்சையாக வேப் பிலை தழையை மெல்லுதல் இவைகள்மூலம் நீரிழிவு நோயைப் போக்கலாம் என்பது, வெறும் மூடநம்பிக்கை என்று தெளிவுபடுத்துகிறார் டாக்டர்.

வாங்கி படித்து செயல்படுத்தி

நலவாழ்வு வாழுங்கள் - வாழுவோம்!

நவில்தொறும் நூல்நயம் உள்ள நூல்

பயில்தொறும் பண்புடையாளனின் படைப்பாகப் படியுங்கள் - ஒழுகுங்கள்!

- கி.வீரமணி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner