வாழ்வியல் சிந்தனைகள்

5.8.2018 அன்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் மதுரை முனைவர் வா. நேரு அவர்கள், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 240 பக்கங்கள் கொண்ட 'காக்கைச் சோறு' என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை - எனக்கு வழங்கினார்.

படித்தேன் - சுவைத்தேன் - கவிக்கோவின் இலக்கியச் செறிவும், தமிழ்அறிவும் காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகங்கள். காலம் அவரை 'இயற்கையின் கோணல்' புத்தி காரணமாக பறித்துக் கொண்டது என்பது கொடுமையோ கொடுமை!

நல்ல பேராசிரியராக அவர் இருந்து அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்றும் புகழ் பெற்ற பேச்சாளர்கள் - கவிஞர்கள் - எழுத்தாளர்கள் ஒளி வீசுகிறார்கள்.

கவிக்கோவின் முதல் கட்டுரையே இன்றைய தமிழ்ப் பாட புத்தகங்களில் உள்ள குறைபாட்டினைச் சுட்டி 'கடிதோச்சி மெல் எறிதலை'ச் செய்வதாக உள்ளது!

பள்ளிகளில் நம்மில் பெரும்பாலோருக்குப் பாடமாக அமைந்ததையே ஆசிரியர் அப்துல் ரகுமான் அக்கட்டுரையில் சுட்டி, நெற்றியடிக் கேள்வியை நேர்மையுடன் கேட்கிறார்.

புத்தாக்கச் சிந்தனைகள் இளைய தலைமுறைக்கு வர, பாட புத்தகங்கள் அறிவை, விரிவு செய்து, தூண்டத் துணை நிற்க வேண்டும்.

இன்று...? அப்படி இல்லையே! இதோ சில எடுத்துக்காட்டுகள்.

எடுத்துக்காட்டு ஒன்று (பக்கம் 12)

'பூதகியின் பால்' என்ற முதல் கட்டுரையின் முதல் பகுதி இன்று (நாளை மறுபகுதியைப் பார்க்கலாம்).

"கஸபியான்கா கதையை ஒரு நாள் வகுப்பில் சொன்னேன்.

கஸபியான்கா ஒரு மாலுமியின் மகன். அவனுக்குக் கப்பலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அவன் தந்தை ஒருநாள் அவனை அழைத்துச் சென்று கப்பலைச் சுற்றிக் காட்டினார்.

அப்போது திடீரென்று கீழ்த் தட்டிலிருந்து "தீ... தீ..." என்று கூக்குரல் எழுந்தது. கஸபியான்கா வின் தந்தை அவனை மேல் தட்டில் ஓரிடத்தில் நிற்க வைத்து, "ஏதோ தீ விபத்துப் போலிருக்கிறது. நான் கீழே சென்று பார்த்து வரும் வரை இங்கேயே நில். இங்கிருந்து அசையாதே" என்று சொல்லி விட்டுக் கீழே போனார்.

போனவர் திரும்பி வரவில்லை. தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். தீ மேலே பரவி கஸபியான்காவைச் சூழ்ந்தது. கப்பலில் இருந்தவர்கள் "சீக்கிரம் நீரில் குதி. அப்போதுதான் தப்பிக்க முடியும்" என்று அவனைப் பார்த்துக் கத்தினர். அவனோ "உயிர் போனாலும் பரவாயில்லை. தந்தை சொல்லைத் தட்டக் கூடாது" என்று அங்கேயே நின்றான். அதனால் அவனும் தீயில் சிக்கி உயிரிழந்தான். 'தந்தை சொல்லைத் தட்டாத தனயன்' என்று எல்லோரும் அவனைப் பாராட் டினார்கள்.

நான் இந்தக் கதையைக் கூறிவிட்டு "இந்தக் கதையின் மூலம் நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?" என்று மாணவர்களைக் கேட்டேன்.

ஒரு மாணவன் சொன்னான்: "தந்தை சொல் கேட்டால் ஆபத்துத்தான்" மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த மாணவன் சொன்னதில் தவறேதுமில்லை. ஒரு பரிசோதனையாகத்தான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த பதிலைத்தான் மாணவன் சொன்னான்.

இது கதை கூட அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம். உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட தந்தை வாக்கை மீறக் கூடாது என்று தன் உயிரையும் தியாகம் செய்த கஸபியான்காவின் உறுதி பலரை மனம் உருகச் செய்திருக்கிறது. அதனால்தான் இந்தச் சம்பவம் பல நாடுகளுக்கும் பரவி நம் நாட்டிலும் பாடப் புத்தகங்களில் இது தவறாமல் இடம் பெறுகிறது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் ஓர் எதிர்மறையான விளைவை  ஏற்படுத்தும் சாத்தியம் இதில் இருப்பதை உணரலாம்.

மனிதன் எதையும் அதன் பலனைக் கொண்டுதான் மதிப்பான்.

இந்தச் சம்பவம் எதை உணர்த்துகிறது?

தந்தை சொல் தட்டாத தனயனின் தியாகத்தை மட்டுமா? தந்தை சொல் கேட்டதால் அல்லவா அவன் அநியாயமாக உயிரிழக்க நேர்ந்தது? இப்படியும் எண்ண இடம் இருக்கிறதல்லவா?

ஏற்கெனவே தந்தை சொல் கேட்காத தனயர்கள் பெருகி வரும் இக்காலத்தில் இத்தகைய கதைகள் நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கி விடாதா?

தந்தை சொல் கேட்டதால் ஒருவன் ஆபத்திலிருந்து தப்பினான் என்பதாகக் கதை அமைந்திருந்தால் அல்லவா படிப்பவனுக்கும் தந்தை சொல் கேட்பது நல்லது என்ற எண்ணம் ஏற்படும்? எதிர்மறையான அல்லது தவறான கருத்துக்களை ஏற்படுத்தும் பல கதைகளைப் பாடங்கள் என்ற பேரில் நாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கெ()டுத்துக் கொண்டிருக்கிறோம்".

நமது பாடத் திட்டங்கள் விழிப்புணர்வு பெறும் வகையில், சமயோசிதமாக நடந்து கொள்ளும் முறையில் இன்று பெரிதும் சொல்லிக் கொடுக்கப்படு கின்றனவா? இல்லையே; அவர் கேட்கும் கேள்விப்படி அறிவை, தன்னம்பிக்கையுடன் சரியான முடிவுகளை எடுக்க விடாமல் கெடுத்துக் கொண்டும் - தடுத்துக் கொண்டும் தானே உள்ளது!

பழைய காக்கை - நரிக் கதையை....

(நாளை பார்ப்போம்)

13.10.2018 அன்று வந்த வாழ்வியல் சிந்தனையின் தொடர்ச்சி...

சாப்பிட்ட பிறகு நாம் உண்ட உணவு கீழே செல்லாமல், எதிரெடுத்துவிடும். அதாவது உண்ட உணவு மேலே வருகிறது. திரவமான கார உணவாக அது இருந்தால், அந்த எரிச்சல் சில நேரங்களில் மூக்கு, காதுவரைகூட எகிறி உறுத்தும் நிலை ஏற்படுவது உண்டு.

எச்.பைலோரி என்ற கிருமி நோய்கள் காரண மாக அதிகமான வலி போக்கி மருந்துகளை அவ்வப்போது எடுத்துக் கொள்வதாலோ, புகை பிடித்தல் காரணமோ - அல்சர் (Ulcer) குடற்புண் ஏற்படக் கூடும்.

Acid Reflux என்ற எதிரெடுத்தலைத் தடுக்க இப்படி ஆங்கில மருந்துகள் ரானிடிடின் (Ranitidine), பாண்டோ பிரசோல், பான்-டி போன்றவை களை - வயிற்றில் இப்படி செரிமாணமின்மை நீர் அதிகமாக மேலே வருவதை தடுக்க மருத்துவர்கள் கொடுப்பதுண்டு. ஆஸ்பிரின் 75 வரை தொடர்ந்த வலி போக்கி மருந்துகளைக்கூட -  அவ்வப்பொழுது டாக்டரைக் கேட்காமல், மருந்து கடைக்காரரிடம் கேட்டு - பாதிக்கப்பட்டவர்களே - அவரவர் பழக்கம் - அனுமானப்படி சாப்பிட்டு இதை அதிகப் படுத்திக் கொள்வதும் நடைமுறையில் உள்ள பழக்கமாகி விடுகிறது.

மேலை நாடுகளில் டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்தால் ஒழிய - இப்படிப்பட்ட மருந்து களையோ மற்றும் Antibiotic என்ற தொற்றுநோய் நிவாரண - கடும் மருந்துகளையோ மருந்து கடை களில் வாங்க முடியாது. நம் நாட்டில் அந்தப்படி கட்டுப்பாடு சட்டத்தில் உள்ளது. பட்டியலில் உள்ள மருந்துகள்'' என்ற மருந்துகளை (Scheduled Drugs) டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால்தான் விற்கவே முடியும் என்பது.

ஆனால், நடைமுறையில் - வியாபாரத்தில் அப்படி ஒரு கட்டுப்பாடான நடைமுறை கடை பிடிக்கப்படாததால், நோயாளிகளும், மருந்துக் கடைக்காரர்களின் பழக்கத்தினாலும், இதற்கு மருந்து கொடுங்கள் என்று நோயாளி கேட்டவுடன், இவர்களே பாதி மருத்துவர்போல, இந்த மாத்திரை, மருந்தை வாங்கி 3 நாள்கள் சாப்பிடுங்கள்; எல்லாம் சரியாகப் போய்விடும்'' என்று அறிவுரை' கூறி, தமது விற்பனையைப் பெருக்கிக் கொள்வது நம் நாட்டில் சர்வ சாதாரணம் - இது ஒரு தவறான பழக்கம்.

டாக்டர்கள் மருந்து எழுதிக் கொடுப்பதில்கூட - நம் அனுபவத்தில் கண்ட ஒரு நடைமுறை உண்மை என்னவென்றால், பெரிய ஸ்பெஷலிஸ்டு டாக்டர்கள் நோயாளியை பரிசோதித்துவிட்டு ஒரு 3, 4 மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விடுவார்கள்.

ஆனால், வழக்கமாக நோயாளியை கண்டு, நோய் - அவரது உடல் நிலைபற்றிய வரலாறு அறிந்த குடும்ப மருத்துவர் (Family Physician) எந்த மருந்து குறிப்பிட்ட இவருக்கு உதவ முடியும், எதைக் கொடுத்தால் சில நேரங்களில் குறிப்பிட்ட நோயாளியின் உடல் ஒத்துழைப்பு தராது என்பதை உணர்ந்தவர்கள் - ஸ்பெஷலிஸ்டு டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளைக்கூட எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிடுவார்கள்! அதுதான் சரியான முறை. எனவே, எடுத்த எடுப்பிலேயே ஸ்பெஷலிஸ்டு, சூப்பர் ஸ்பெஷலிஸ்டு (Specialist & Super Specialists) டாக்டர்களிடம் செல்லாமல் இருப்பது நல்லது!

எச்.பைலோரி கிருமியை அழிக்கவேண்டும்,

குடிநீர்மூலம் இக்கிருமிகள் பரவிட வாய்ப்பு உண்டு.

எண்டோஸ்கோப்பி (Endoscopy) மூலம் அறிந்துகொண்டு மேற்கொண்டு மருத்துவ சிகிச் சையை செய்துகொள்ளலாம்.

மன அழுத்தம் - கவலை (Worry - Stress) காரணமாகவும் இது ஏற்படக்கூடும்.

தலைக்காயம் - தீக்காயம் ஏற்பட்டாலும், வயிற்றில் குடல் புண், வலி ஏற்படக்கூடும்.

இதற்கான அறிகுறிகளில் முக்கியமானது நெஞ்சுக் குழி எரிச்சல், மேல் வயிறுப் பருத்தல், வலி, குமட்டல், நடுநிசியில் - அதிவிடியற்காலை வேளையில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டிய உணர்வு - வலி குறைந்தவுடன்கூட - வயிறு நிரம்பி விட்டதைப் போன்ற உணர்வு - இந்தப் பிரச்சி னைக்கு ஆங்கிலத்தில் ‘GERD' (Gastroesophageal reflux disease) (அமில எதிர்க்களிப்பு) என்று கூறுகிறார்.

(அ) திடீரென எடை :அதிக அளவு குறைதல்

(ஆ) அமிலம் எதிர்த்து மேலே வருதல்

(இ) பசியே இல்லாமல் இருத்தல்

மாரடைப்புகூட சில நேரங்கள் ஏற்பட இது ஒரு அடிப்படைக் காரணமாக அமையக்கூடும்.

எல்லா மேல் பகுதி வயிற்று வலியும் அல்சர் - குடல்புண் அறிகுறி என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது; வேறு நோய்களுக்கான அறிகுறியாக - தொடக்கமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

(1) பித்தப்பைக் கல்

(2) நாட்பட்ட கணைய அழற்சி

(3) இரப்பைப் புற்றுநோய்

கேன்சர் (Cancer) என்ற புற்றுநோய் பற்றிய பரிசோதனைக்கான தேவை  - கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படும்.

பசியே இல்லாது இருக்கும்; ரத்தச் சோகை போன்ற அறிகுறிகள்.

உணவில் கவனம் தேவை. மிதக்கும் உணவு' என்ற நல்ல சொற்றொடரை கூறினார் டாக்டர் சு.நரேந்திரன்! எண்ணெய், நெய் இவற்றில் மிதக்கும் உணவை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அவித்த உணவு - இட்லி, இடியாப்பம் போன்ற வையும், காய்கறி - வறுவலைத் தவிர்த்து அவித்து'' உண்ணுதல் நல்லது என்றார்!

கழைக்கூத்தாடிகளுக்கு - குடற்புண் அதிகமாக வர வாய்ப்பில்லை. தலைகீழாக நிற்பது பயன் படுகிறது அவர்களுக்கு வெகுவாக.

எச்.பைலோரி பற்றிய கிருமிகள் CLD Test என் றெல்லாம் பல வளர்ந்த முறைகள் இப்பொழுது வந்துவிட்டன.

இந்நோயை தொடக்கத்தில் கண்டறிந்து விட்டால், பயப்படவேண்டிய அவசியமே இல்லை.

ஒரு சில அறிகுறிகளை நீங்களே யூகத்தின்மூலம் நினைத்துப் ஒரே அடியாய் பயந்துவிடாதீர்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளை நாடுங்கள். உணவில் கட்டுப்பாடு - வேளைக்குச் சாப்பிடும் பழக்கம் இவைகளைக் கைக்கொள்ளுங்கள்.

- இவ்வாறு விளக்கி கேள்விகளுக்கு சிறப்பான வகையில் பதில் அளித்தார் டாக்டர் நரேந்திரன். கேட்ட அனைவருக்கும் மன நிறைவும், தெளிவும் ஏற்பட்டது என்பதுதான் இப்பொழிவுகளின் வெற்றியாகும்!

சென்னை,  'பெரியார் மெடிக்கல் மிஷன்', பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம் - இணைந்து நடத்திய நலவாழ்வு பரப்புரைக்கான சிறப்புக் கூட்டத்தில் ஆய்வு சொற்பொழிவு போன்றதொரு அருமையான மருத்துவ அறிவுரை - தெளிவுரையை - நிகழ்த்தினார் தஞ்சையில் உள்ள பிரபல, உணவு செரிமான பேராசிரியர் டாக்டர் நரேந்திரன் அவர்கள்!

இவர் மருத்துவக் கருத்துக்களை எளிய தமிழில், கரடு முரடாக இல்லாமல் - மக்கள் விரும்பும் வண்ணம் இதுவரை சுமார் 35 புத்தகங்களுக்கு மேல் எழுதி, பல நூல்களுக்கு அரசாங்கம் முதலிய பல்வேறு அமைப்பு களின் சார்பில் சிறப்பான முறையில் பரிசுகளையும் பெற்ற, கலைமாமணி முதலிய விருதுகளைப் பெற்ற புகழ் வாய்ந்த பெருமகன் ஆவார்.

கணினியின் உதவியோடு தொடுதிரை விளக்கமாக அரியதோர் விளக்கத்தினை தந்தார்.

1. மருந்து முறை - மருந்து மாத்திரை, பரிசோதனை இவை எல்லாம் அவ்வப்போது புதிய புதிய கண்டுபிடிப்புகளின் காரணமாகவே மாறி வருகின்றன.

எடுத்துக்காட்டாக, 1972 வரை ஒரு கட்டம், அடுத்து 1982 - 10 ஆண்டுகள் மற்றொரு  கட்டம்.

2. காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. நமது பிள்ளைகள், குழந்தைகள் குறிப்பாக மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல், இரவெல்லாம் தொலைக்காட்சி அல்லது கைத் தொலைபேசி, 'செல்' வாழ்வுடன் காலத்தைக் கழித்துவிட்டு, காலையில் அவசர அவசரமாக எழுந்து - காலைக் கடன்களைக்கூட சரியாகக் கழிக்காமல் 'அரக்க பறக்க' ஓடுவது - வீடுகளில் 'சாப்பிட்டுப் போ' என்ற பெற்றோர்கள், பாட்டி, தாத்தாக்களிடம் சண்டை பிடித்து ஓடோடி பள்ளி, கல்லூரிக்கோ, வேலைக்கோ, செல்வது அநேகமாக எல்லா வீடுகளிலும் நிகழும் அன்றாட நடவடிக்கை தானே!

3. குடல் புண் ஏற்படுவதற்கு அரைகுறையாக சாப்பிட்டு - அவசர கதியில் ஓடுவதால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் பித்தப்பையில் கற்கள்கூட உண்டாகும் அளவில் உடல் நோயை - வலியைத் தருவதாகவும்கூட அமையும்.

4. Curry, Worry, Hurry!- கறி, கவலை, வேக வேகம்!  (உணவு)இம்மூன்றும் குடல் புண்களை ஏற்படுத்தக் கூடியவை என்று அழகாக குறுகத்தரித்த குறள் போல விளக்கம் அளித்தார் டாக்டர் நரேந்திரன்!

5. காபி, தேநீர், மது இவைகளால் குடல்புண் - அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. (ஒரு நாளைக்கு 6,7 தடவை குடிப்பது, மது அளவின்றி குடிப்பது இவைகள் நோய்க்கு 'சிவப்புக் கம்பள' விரிப்பு வரவேற்புத் தருவதாகும்.

6. சாலை ஓரம் உள்ள பாணிபூரிகள் வாங்கி கண்டபடி சாப்பிட்டு பசியைப் போக்க வயிற்றை நிரப்புதல்

(தவறான பாலின உறவின் காரணமாக ஏற்படும் கருவைக் கண்டு வெட்கமும், வேதனையும் படும் மனித இனம், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி, உண்ணல், உறிஞ்சல், மது குடித்தல் போன்றவை களுக்காக ஏனோ வெட்கப்பட மறுக்கிறது! ஒழுக்கச் சிதைவு உண்ணுதலில்கூட உண்டே! இதை ஏனோ வளரும் மனிதர்களாகிய நாம் எண்ண - ஏற்க மறுக்கிறோம்)

"ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா (தம்பி) வளர்ச்சி"

என்றார் பாட்டுக்கோட்டை அரசர் தோழர் பட்டுக் கோட்டை  கலியாண சுந்தரம் கவிஞர்!

7. மன அழுத்தமும் (Stress) குடல் புண்ணுக்கு முக்கிய காரணம் ஆகும்.

(தொடரும்)

உடலில் ஏற்படும் குடல்புண் - அல்சர் (Ulcer) பற்றிய வயிறும் -வாழ்வும் - குடற்புண் சிகிச்சைகள் என்பதைப்பற்றி தஞ்சையில் உள்ள பிரபல குடல் அறுவை சிகிச்சை நிபுணர் - மருத்துவர் - டாக்டர் நரேந்திரன் (Ph.D) அவர்கள் நமது 'பெரியார் மெடிக்கல் மிஷன்', பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் (10.10.2018, சென்னை பெரியார் திடலில்) மிகச் சிறந்ததோர் விரிவுரை - விளக்கவுரை நிகழ்த்தியும், கேள்விகளுக்குப் பதில் அளித்தும் (இரண்டும் இணைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குமேல்) உரையாற்றினார்.

'வகுப்பெடுத்தார்' என்பதே பொருத்தமான சொற்றொடர் ஆகும்.

தலைமை தாங்கிய பிரபல பொது மருத்துவர் பேராசிரியர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்களும் அவருக்கே உரித்தான முறையில் அருமையாக - வந்திருந்தோருக்குப் 'பாடம்' நடத்தினார்.

அவர் கூறியவற்றில் அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பல மனச் சிக்கல்களை எளிமைப் படுத்திப் பேசினார்.

தினம் தினம் காலையில் எழுந்தவுடன் கழிப் பறைக்குச் சென்று மலம் கழித்தலை ஒரு பழக்கமாக்கிக் கொள்வது உடல் நலத்திற்கு மிகப் பெரிய உதவிடும் செயல்.

அமர்ந்து சில நிமிடங்கள் இருந்து பழக்கப்படுத்திக் கொண்டால் நமது உடலின் மணி (Body Clock) அதற்குப் பெரிதும் ஒத்துழைக்கும்; தவறி ஒரு நாள் மலம் கழிக்கா விட்டாலும்கூட சிலர் அதனையே பெரிதாக நினைத்து பதற்றம் அடைந்து, ஏதோ கிடைக்க வேண்டிய  ஒன்று கிடைக்காமல் இழந்து விட்டதுபோல மனசஞ்சலம் (Obsession) கவலை அடைவார்கள். அது தேவை யில்லை,  வேண்டியதில்லை.

மலச்சிக்கலால் எவரும் செத்ததாக வரலாறு கிடையாது. இயல்பாக அந்த உடல் உறுப்புகளே அதனை வெளியே தள்ளி விடும்.

பெருத்த உடல்  (Obesity) பருமன் இருப்பவர் களுக்குக் குடல் புண் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு. மதுப் பழக்கம், காரத்தை அதிகம் எடுத்து உண்ணல், சில தொற்றுக் கிருமிகள் (வைரஸ்) - இவற்றால் ஏற்படலாம்!

அதிக மது குடிப்பவர்களுக்குத்தான் இந்த 'அல்சர்' குடற்புண் ஏற்படும் என்பதில்லை.

'Non - alcoholic cirrhosis of liver' என்ற நோய் - மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட ஏற்படக் கூடும். வயிறுபெருத்தல் ("மகோதரம்" - என்று கூட கிராமங் களில் கூறுவதுண்டு) இதில் ஒரு சிறு பகுதியை வெட்டி எடுத்து Biopsy ஆய்வுக்கு அனுப்பி, இதில் புற்று நோய் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து அதற்கேற்ப தக்க சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது!

புகைபிடித்தல் (Smoking) இதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். புகை பிடிப்பதால் நுரையீரல்கூட பாழாகி புற்று நோய்க்கு வரவேற்புக் கொடுக்கும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் இதனை எதிர்பார்க்கத்தான் வேண்டும் - எச்சரிக்கையாக (பரிசோதனை மூலம்) இருப்பது எப்போதும் நல்லது!

தவறிப் போய் இந்த அல்சர் புண் நோய் முற்றுமே யானால், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக பட்சம்  5 ஆண்டுகள் வாழக் கூடும்; இடையிலும் மரணம் வரக்கூடும்!

உணவில் அதி-காரம் தவிர்ப்பீர்களாக! உடல் பருமனுக்கும் இடந்தராதீர்!

இப்படி பலப் பல பயனுள்ள அறிவுரைகளை வழங்கி, பிறகு குடற்புண் நோய் மருத்துவர்தம் விளக்கத்திற்குச் சரியான நுழைவு வாயிலை அமைத்துக் கொடுத்தார் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன்.

டாக்டர் நரேந்திரன் விளக்கங்களை அடுத்து பார்ப்போம்!

(தொடரும்)

11). மாதுளைப் பழங்கள்

மாதுளைப் பழங்கள் இதயத்தைப் பாதுகாக்கும் வீரர்களைப் போன்றவர்கள் ஆகும்! இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்படைப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கும் சக்தி வாய்ந்த டானின்ஸ் மற்றும் ஆந்தோசை யானின்ஸ் (Tannins and Anthocyanins) சத்துகளை உள்ளடக்கியுள்ளதால் மாரடைப்புத் தடுப்பானாக இது உதவுகிறது. இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய் களை (Arteries) இது தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.

மேலே சுட்டிக்காட்டிய இரண்டு சத்துக்களும் சக்தி வாய்ந்த Anti - Atherogenic  -  'முகவர்கள்' போல் மாரடைப்பைத் தடுக்க பயன்படுகின்றன! கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுக்கவும் 'பிளாக்' (Plaque) களை முட்டு ஏற்பாடாமலும் தடுக்கவும் மாதுளை உதவுகிறது. ரத்த அழுத்தத்தைத் தடுக்கவும் மிகவும் உதவுவது, பசிக்கு இது ஒரு நல்ல சீறுதீனி (Snacks) யாகவும்கூட பயன்படுகிறது!

12). பட்டை (Cinnamon)

'லங்கபட்டை' என்றும் குடும்பங்களில் சமை யலுக்குப் பயன்படுத்துவதைக் குறிக்க இதனைச் சொல்வது உண்டு. கறி மசாலாக்களுக்குப் பயன்படுத்தும் வாசனைப் பொருள்கள் (Spices)  இவை. சாப்பாட்டில் இதனைச் சேர்ப்பது   (அளவோடுதான்). நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க இந்த பட்டை பெரிதும் உதவுகிறது! இது மூலிகை போன்றது. இதில் (antioxidant) சத்துகள் அதிகம் உள்ளதால் நமது உடம்பில் மெட்டபாலிசத்தை இது அதிகரித்து, கொழுப்புக் கூடுதலால் ஏற்படும் சிறு முட்டுகளை (தடுப்பு)  கரைத்துவிட பெரிதும் உதவுகிறது!

13). தர்பூசணி (Water Melon)

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சக்தி திறன் கொண்ட  "லைகோ பீனி" (Lycopene) என்பது தர்பூசணி பழத்தில் அதிகம் உண்டு என்பதால் நல்ல கொலஸ்ட்ராலுக்கு எதிரானவைகளை அழிக்கும் அல்லது விரட்ட முயற்சித்து நமது இதயத்தில் பழுது ஏற்படுத்துவதைத் தடுக்க இது பெரிதும் உதவுகிறது! தர்பூசணி எடையை யும்கூட கூட்டாது; பசியையும் தணிக்கும். நமது இதயச் சுவர்களை கெட்டியாக்கிடும் இந்த தர்பூசணிப்பழம் உண்ணல் பெரிதும் நற்பயனை ஏற்படுத்தும்!

14). பூண்டு (Garlic)

நல்ல உணவின் சுவையை பூண்டு கூட்டுகிறது! ரத்த அழுத்தத்தைக் குறைக்க கட்டுப்படுத்தவும் நல்ல உணவு ஆகும் பூண்டு!

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் செய்யும் பூண்டு ஒரு நார்ச் சத்தும் அதிகம் உள்ள உணவுப் பொருள் ஆகும்! இது செரிமானத்திற்கும் பெரிதும் துணை நிற்கக் கூடிய ஒன்று என்பதும் மருத்துவர்களின் கூற்று ஆகும்! உள்ளே ஏற்படும் தொண்டைப் புண்கள் (Inflammation)  முதலியனவற்றைத் தடுக்கவும் பெரிதும் உதவிடக் கூடும் என்பதால் பூண்டை அதிகமாகப் பயன்படுத்துவது நல்லது - ('அதிகமாக' என்ற நம் சொல்லாட்சிக்குச் சரியான பொருள் 'வரம்புமீறாமல்' என்பதேயாகும்!)

15). ஆப்பிள்களும் - பியர்களும் (Apples and Pears)

'நோய் கட்டுப்பாடு மய்யம்' (Center for Disease Control) என்ற அமைப்பின் கருத்துப்படி, 5  அளவீடு (Five Servings) ஒரு குறிப்பிட்ட அளவு - ஆப்பிள்களும், பியர்ஸ் பழங்களும் நாம் உண்ணுவதால் மாரடைப்பு, இதயநோய் வராமல் தடுக்க 'அவை பெரிதும்' நமக்கு உதவிகரமாக அமையும்.

பலரும் பயன்படுத்தும் ஆங்கில பழமொழியை அறிவீர்கள் அல்லவா? Saturated Fat என்ற கெட்ட கொழுப்பு ஆப்பிள், பியர்ஸ் போன்ற பழங்களில் மிகவும் குறைவாகவே உள்ளன. இதுபோலவே டிரான்ஸ் கொழுப்பு Trans Fat கெட்ட கொலஸ்ட்ரால் இவையும் மிகவும் உடலின் ஆரோக்கியத்தினைப் பாதுகாக்கத் துணை நிற்கும்! நார்ச்சத்தும் இவைகளில் அதிகம் உள்ளது. அதனால் செரிமானம் ஆவதற்கும் துணை நிற்கும்! உள்ளே எரிச்சல், புண்ணாவதை இவை தடுக்கும் சக்தி வாய்ந்தவை. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் பணியையும் தவறாது இவை செய்கின்றன!

எனவே மேலே குறிப்பிட்ட 15 வகை ஆரோக்கிய நலத்திற்கு வாய்ப்பான உணவைச் சாப்பிட்டு மாரடைப்பு வராமல் உணவு முறை மூலம் உங்கள் உடலைப் பாதுகாத்து வாருங்கள்!

மனித வாழ்வின் நலத்திற்கு - 1) உணவு, 2) நடை முதலிய உடற்பயிற்சிகள், 3) ஓய்வு தூக்கம் - இளைப் பாறுதல் (Relaxation)  - இவைகளோடு தேவைப்படும் மருந்துகள், டாக்டர்கள் ஆலோசனையோடும்  - அதைவிட உங்கள் உடம்பு என்ன அறிவுறுத்துகிறது என்பதைப் புரிந்தும் செயல்பட்டு நீண்ட காலம் வாழ்ந்து, மனித சமுதாயத் "தொண்டறச் செம்மல்"களாக வாழ்ந்து, வாழ்க்கை பயனுறு வாழ்க்கையாக அமைந்தது என்று மகிழுங்கள்.

(முடிந்தது)

Banner
Banner